தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தோம். அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறந்து, நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே ஆலோசனை நடத்தப்பட்டது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். பள்ளிகள் திறப்புக்கு முன், வளாகங்களைச் சுத்தமாக வைக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழியே உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு பணி மேற்கொள்வர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படும்” என்று கூறினார்.