ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!

நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் – 16  / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
எழுத்து: அமிர்தம் சூர்யா

முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

மதிப்புறு முனைவர் பட்டமும் கலைமாமணி பட்டமும் பெற்ற முதல் திருநங்கையும் இவர் தான். திருநங்கை சமூகமே பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆவணம் என்னவெனில் தமிழக அரசின்பதினோராம் பாடத் திட்டத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளதுதான்.

அத்தகைய பெருமைக்குரிய நர்த்தகி நடராஜ் உடனான எனது சந்திப்பும் அதன் நினைவுப்பூ வாசமும் தான் இந்த வாரத் தொடராக.

“என்னை ஒரு பெண்ணாக 24 மணிநேரமும் என் ஆன்மா ஜெபிக்கிறது. நீ பெண் தான்னு அங்கிகரிச்சா நாங்க குழைஞ்சி போய்விடுவோம்” என்று ஒருமுறை நர்த்தகி நடராஜ் என்னிடம் சொன்னார்.

அப்போதிலிருந்து வருடம் தோறும் வரும் மகளிர் சிறப்பிதழில் அவரின் பேட்டியோ, கட்டுரையோ நடனம் பற்றியோ, சாதனைப் பற்றியோ எதாவது ஒன்று கல்கி வார இதழில் இடம்பெறச் செய்து விடுவேன்.

அப்படியாகத் தான் நர்த்தகி நடராஜ் எனக்கு அறிமுகமானார், பழக்கமானார், தோழியானார்!

என் மீது முகநூலில் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அமிர்தம் சூர்யா பேசத் தொடங்கும்போதே ஆணோ, பெண்ணோ ஒருமையில் பேசுவார். சட்டென மரியாதையில்லாமல் பேர் சொல்லி அழைப்பார்.

ஆணாக இருந்தால் மாமு, டேய், (சிலரை மட்டும் நண்பா, ஜி). பெண்ணாக இருந்தால் டி அல்லது டா போட்டு அழைப்பார் என்று.

உண்மைதான். நட்பு என்று வந்து விட்டபின் அதற்கான அந்தஸ்தோடு பழகவேண்டும். வேடமிட்டு வார்த்தையில் பம்மாத்து காட்டி போலித்தனமான மரியாதையைப் போர்த்திக்கொண்டு எதற்கு அப்படி ஒரு நட்பு?

பிடிக்கலையா மரியாதை கெட்டவனிடம் எதற்கு ப்ரெண்ட்ஷிப்னு ஒரு சலாம் போட்டுவிட்டு பேஷா விலகிடுங்க. இது என் பாலிசி.

ஒரு சந்தர்ப்பத்தில் நேரடியாகப் பேசும்போது தோழி நர்த்தகி நடராஜியிடம் கேட்டேன். நான் உம்மை முழுமையாகப் பெண்ணாகவே உணர்கிறேன். என் தோழிகள் போலவே உம்மை பாவிக்கிறேன் உமது நட்பு எனக்குப் பெருமிதம். சிலநேரம் நான் டி போட்டுப் பேசினால் நட்பை முறித்துக் கொள்வாயா என்றேன்.

சிரித்துக்கொண்டே டேய் மகிஷ என்றார் ஆச்சரியத்துடன். அதன் பொருள் டேய் எரும என்பதுதான். அப்போது நான் நன்றி மர்த்தனி என்றேன். அதாவது நர்த்தகி நடராஜை நான் மகிஷாசுரமர்த்தனி என்று செல்லப் பெயர் வைத்தேன்.

அன்று முதல் என்னை மகிஷா என்பதும்நான் அவரை மர்த்தனி என்பதும் எங்கள் உரையாடலில் புனைப்பெயர்களாகிப் போனது.

“திருநங்கைகளில் முதல் கலைமாமணி போலவே முதல் பத்மஸ்ரீ விருது. இந்த அங்கிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை அறிவோம். ஆயினும் எந்த ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு இந்த பெருமையைப் பங்கிடுவீர்கள்?” என்று கேட்டபோது அவர் விளக்கமாகச் சொன்னார்.

“இரண்டு பெண்களுக்கு.. முதலில் என்னை ஒரு நடன நங்கைக்குரிய லட்சணத்துடன் அழகா படைத்து, பூமிக்குத் தந்த என்னுடைய தாய் சந்திரா அம்மாவுக்கு.

இந்த உடம்பு அவங்களோடு தானே. ஆரம்பத்தில் அவவங்க மேல கோவம் உண்டு.. ஆனா அவங்க வயச நான் அடைந்தபோது அதன் வலி உணர முடிஞ்சது. இப்போ கோவம் இல்ல..

இரண்டாவது பெண் என் சக்தி. தனக்கு ஆசை, கனவு, எதிர்பார்ப்பு ஏதும் கிடையாது. என் சந்தோசம் தான் அவள் சந்தோசம். என் அம்மாவைவிட ஒரு படி மேல இருக்கா என் சக்தி.

இந்த இரண்டு பெண்களுக்குத்தான் அந்த பெருமையெல்லாம்.” என்றார்.

ஒவ்வொரு முறையும் நர்த்தகி நடராஜ் போட்டோ போடும் போது கட்டுரையில் எப்படியாவது சக்தி புகைப்படத்தை வைக்க முயல்வேன்.

சக்தி அம்மா போல் ஒரு கர்ண கவசம் நமது வாழ்க்கையில் கிடைத்து விட்டால் ஆணோ பெண்ணோ சாதிக்காமல் போய்விடுவார்களா என்ன.

ஒரு மகளிர் சிறப்பிதழில் தொலைப்பேசியிலேயே பேட்டி எடுத்தேன் அதில் மிக முக்கியமான கேள்வி இது.

“மர்த்தனி, ஆணைச் சார்ந்து வாழும் குடும்பக் கட்டமைப்பு உடைபட தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். இது சரியா? பெண் கல்வி, பெண் பொருளாதார எழுச்சி எல்லாவற்றையும் உடைக்க தொடங்கி விட்டதா?”

-என்று கேட்டேன். ஆனால் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவரின் பதில் வந்தது.

ஆணைச் சார்ந்து வாழும் போக்கு பெண் கல்வியால் உடைபட ஆரம்பித்து விட்டது உண்மை தான். நான் கொஞ்சம் பழமைவாதி. குடும்பம் பெண்ணை சார்ந்து தான் இருக்கவேண்டும். அது வீட்டுக்குள் ஜெயிக்கனும். அதாவது மூளை தலைக்குள் தானே இருக்கவேண்டும். ஒரு ஆணின் வேர் அம்மாவா, மனைவியா, மகளா இருந்தால் ஆண் விருட்சம் அற்புதமா வளரும்” என்றார்.

பாரதியார் பிறந்தநாள் ஒன்றில் பாரதி இல்லத்தில் நர்த்தகி நடனம். முதல் முறையா மனைவியோடு போனேன். அடடா… நாட்டியமா அது! அசத்தி விட்டார்.

அங்கு வந்திருந்த தொலைக்காட்சி நண்பரிடம் “அமிர்தம் சூர்யா என் நண்பன். அவரிடம் கருத்து கேளுங்கள்” எனச் சொன்னார் நர்த்தகி.

ஒலிவாங்கி என்னிடம் வந்தது.

“சோலைமலை விட்டு மால் அழகர் – வெகு
ஜோராக சீர்கொண்ட சேவை தந்தார்;
தையோம் தத்தும் தந்திமி திமிதிமி என
தங்கக் குதிரையில் ஏறிவந்தார்!

-என்று மதுரை கள்ளழகர் பற்றித் தானே கவிதை எழுதி அதற்கு தானே நாட்டியம் அமைத்து ஆடி அசத்தும் மகா திறமைசாலி திருநங்கை தோழி நர்த்தகி.

பாரதியார் மட்டுமல்ல பாரதிதாசனையும் கொண்டாடும் எங்கள் தமிழ்க் குலக் கலைஞர்” என்று சொன்னேன்.

அடுத்து மனைவியை நர்த்தகியிடம் அறிமுகப்படுத்தும் படலம்.

நர்த்தகி என் மனைவியிடம்… “வணக்கம் நல்லா இருக்கீங்களா… ரொம்ப சந்தோஷம். நீங்க என் நாட்டியத்துக்கு வந்ததுக்கு” என்றார்.  மனைவி முகத்தில் சந்தோசம்.

என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு என் நிகழ்ச்சிக்கு அடிக்கடி வரணும், சரியா என்று சொல்லிவிட்டு, அப்புறம் உன் புருஷனை அப்பப்போ கண்காணிங்க. என்னை டி போட்டுப் பேசுகிறார் என்று சொல்லிவிட்டு, போதுமா மகிஷா என்றாரே கண்ணடித்து.

பத்த வச்சிட்டியே பரட்ட என்பது போல் ஆச்சு. அந்த நேரத்தில் மனைவி சிரித்தாலும் வீட்டுக்கு வந்து ஒரே சண்டை.

இதோ பாரு லதா. சில தோழிகளை சொல்லுடா என்று சொல்வதுண்டு. ஆனால் திருநங்கை தோழிகளை அப்படி ‘டா’ போட்டுப் பேசினா வருத்தம் அடைவாங்க. அவர்களின் மனம், உணர்வு முழுக்கப் பெண்ணாகத் தான் இருக்கும்.

எனவே பெண்பாலுக்குரிய அடைமொழி டி தான் அவர்கள் ரசிப்பார்களென்று நினைத்து அப்படிக் கூப்பிட்டேன் என்று சமாதானம் செய்தேன்.

ஆனாலும் விடல. அதென்ன மகிஷா? செல்லப் பேரா ன்னு கேட்டாள் மனைவி.

அடிப்பாவி, சில நேரம் நீ திட்டுவ இல்ல… எருமாட்டில மழை பேய்ஞ்சா மாதிரியென்று அதைத் தான் ஸ்டைலா, கிண்டலா என்னை எருமை, சூரன்னு கூப்பிடுகிறார்கள் என்றேன்.

சமாதானம் ஆனாள். ஆனால், அதற்குப் பிறகு மனைவியுடனான இலக்கியக் கூட்டத்துக்குத் தடா. அந்த சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி நர்த்தகி இன்றும் சிரிப்பார்.

ஒரு ஆண் எப்படி நடந்துக்கணும்?

“அவரவர்கள் அவரவர்களாய் இருந்தால் போதும். ஆண்மை எனப்படுவது அன்புக் கரம் நீட்டி அரவணைப்பது தான். அடுத்தவர் உணர்ச்சியை மதிக்கத் தெரிந்திருப்பது தான் அசலான ஆண்.” என்றார். (உண்மையில் அப்போது என்னை நான் முழுமையான ஆணாக உணர்ந்தேன்)

எப்போது சந்தித்தாலும் எதாவது சம்பந்தம் இல்லாத இரண்டு மூணு கேள்வி கேட்டு பதிலை வாங்கி வெச்சிப்பேன். திடீரென எங்காவது ஒரு பக்கத்தில் கார்னரில் ‘கேட்டதும் கிடைத்ததும்’னு ஒரு பிட் செய்தி மாதிரி போடுவேன். அது ஹிட்டாகியிடும்.

அப்படி ஒருமுறை, “பெண்களின் துயரத்துக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்” என்று கேட்டேன்.

“ஆண்களால் நினைத்துக்கூட பாக்கமுடியாத பல மடங்கு சிறப்பு பெண்களிடம் உண்டு. நான் பெண். எனது சிறப்புத் தகுதி பெண்மை என்பது என்று பெருமிதத்தோடு பெண் தன்னைதானே கொண்டாடுவது இல்லை. தன் மதிப்பே அவளுக்குத் தெரியல. அதான் 91% பெண் துயரத்துக்குக் காரணம்” என்றார்.

திருநங்கை குறித்து இன்றைய இளைய சமுகம் எப்படி மதிக்கிறது? சூழல் என்னவாக இருக்கிறது? மனநிலை மாறி இருக்கிறதா?

இன்றைய இளைய சமுகம் எங்களை மதிக்கிறது அங்கீகரிக்கிறது கொண்டாடுகிறது. முன்பு இருந்த சமுகம் போல், சூழல் போல் இப்போது இல்லை.

இன்றைய இளைய சமுகம் இந்தியாவுக்கு புது வெளிச்சம் பாய்ச்சுவார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றார்.

திருநங்கை என்ற சொல்லை முதன் முதலில் இவர் பயன்படுத்தியபோது கலைஞர் அதை ஏற்று அங்கீகரித்து கௌரவித்தார்.

இப்போது கலைஞரின் மகன் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திருநங்கை நர்த்தகி நடராஜுக்கு தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பதவி (சமூக நலம், தமிழ் வளர்ச்சி, கலைப்பண்பாடு ஆகிய துறைகளின் வளர்ச்சித் திட்டப் பொறுப்பாளர்) கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

எனக்குத் தெரிந்து மூன்று குடியரசுத் தலைவர்கள் முன்பாக ஆடி விருது பெற்ற பெருமை. மட்டுமல்ல குடியரசு தலைவர் மாளிகை சென்ற முதல் இந்தியத் திருநங்கை இவர் தான்.

தொல்காப்பியம் தொட்டு சங்கத்தில் தொடங்கி நவீன இலக்கியம் வரை மரபுமாகாமல் நடனத்தில் செய்துவரும் புரட்சிக்காரிக்கு இந்தக் கட்டுரையை எழுதி உமக்கு உவப்பில்லாத செய்தி இருப்பின் சொல் மர்த்தனி நீக்கிவிடுகிறேன் என்று வாட்சப்பில் அனுப்பினேன்.

மகிஷா… நீ எழுதினா திருத்தமே வேண்டியிருக்காது! என்று பதில் அனுப்பி இருந்தார். நிபந்தனையற்ற அன்பு இப்படியாக நீள்கிறது சந்திப்பூவின் போது.

(அடுத்து வேறு ஒரு ஆளுமையின் நினைவின் வாசத்தில்)

You might also like