ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான முறையில் இறந்தார், ஊடகங்களில் மாறி மாறிச் செய்திகள் வெளிவந்து பரபரக்க வைத்தன.
சுவாதி கொலை வழக்கு பற்றி ஒரு திரைப்படம் கூடத் தமிழில் தயாரானது நினைவிருக்கலாம்.
தற்போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சுவேதா என்கிற இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்றிருப்பவர் அவரை ஒரு தலைக் காதலாக காதலித்ததாகச் சொல்லப்படும் பொறியாளரான ராமச்சந்திரன் என்பவர். அதிலும் ரயில் நிலையத்தில் சுவேதா கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது குரூரம்.
ரயில் நிலையத்தில் இருவருக்கும் இடையில் உருவான காதல் சந்தேகத்தின் நிழல் விழுந்து கொலையில் முடிந்திருக்கிறது. செல்போன் மூலம் வளர்ந்த காதல் அதே செல்போன் காரணமாகவே முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆனால் சுவாதி கொலையில் உருவான மர்மமான பல முடிச்சுகள் சுவேதா கொலையில் இல்லை என்றாலும் கூட, பொதுவெளியில் பழகிய பெண்ணைக் கொலை செய்யுமளவுக்குப் போயிருக்கின்றன ஆணாதிக்கக் கொடுமைகள்.