‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!

ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும்.

அந்த வகையில், விளம்பர டிசைன்களும் டைட்டிலும் டப்பிங் படம் என்ற தோற்றத்தை உருவாக்க, அதற்கு மாறான காட்சியனுபவத்தைப் பரிசளிக்கிறது ‘மிருகா’.

மிருகத்தையொத்த மனிதன்!

செல்வச் செழிப்பான குடும்பங்களில் இருக்கும் கைம்பெண்களை, விவாகரத்து பெற்றவர்களைக் குறிவைத்து வலை விரிப்பவர் ஜான் (ஸ்ரீகாந்த்). கோவாவில் ஜெஸ்ஸி என்பவரின் கணவராக வாழ்பவர், ஒருநாள் அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொலை செய்கிறார்.

அங்கிருந்து தப்பிக்கும்போது, ஒரு விபத்தில் சிக்குகிறார். அவரைக் காப்பாற்றும் சுபத்ரா, ஜான் பற்றிய உண்மைகள் தனக்கு தெரியுமெனவும், அவர் கொலைகள் செய்ததை தான் வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும் கூறி மிரட்டுகிறார்.

கோத்தகிரியில் இருக்கும் தனது சகோதரிகள் லட்சுமி மற்றும் திவ்யாவை தீர்த்துக் கட்ட வேண்டுமென்றும், அவர்களிடம் இருக்கும் சில கோடி சொத்துகள் தனக்கு சொந்தமாக வேண்டுமென்றும் கூறுகிறார் சுபத்ரா. வேறு வழியில்லாமல் கோத்தகிரி செல்லும் ஜான், அரவிந்த் என்ற பெயரில் லட்சுமியைப் பெண் பார்க்கச் செல்கிறார்.

அவரது உத்தி பலிக்காதபோதும், மெல்ல தனது குயுக்திகளால் லட்சுமியின் நிறுவனத்திலேயே மேலாளராகச் சேர்கிறார்.

ஜான் வலியச் சென்று பிறருக்கு உதவுவதைப் பார்க்கும் லட்சுமிக்கு, அவர் மீது நல்ல அபிப்ராயம் தோன்றுகிறது. ஒருநாள் புலி அடித்து ஒரு தொழிலாளி இறந்ததை அறிந்து, அதனைப் பிடிப்பதற்கான வழிகளை உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கும்போது அது பன்மடங்காகிறது.

ஜான் சதித்திட்டம் பற்றி அறியாத லட்சுமி, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஒருநாள் லட்சமிவசம் கிட்டத்தட்ட 1,000 கோடி வரை பணம் இருப்பதைக் கண்டறிகிறார் ஜான். பல ஊர்களில் பல பெண்களை ஏமாற்றிக் கொன்றவருக்கு, லட்சுமியின் சொத்துகளை வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் ஆசை வருகிறது.

இந்தச் சூழலில், கோவாவில் இருந்து வந்த சுபத்ரா ஜானை மிரட்டத் தொடங்குகிறார். அதே நேரத்தில், அரவிந்த் என்ற பெயரில் உலவும் ஜான் ஒரு குற்றவாளி என்பதைக் கண்டறிகிறார் லட்சுமியின் செகரட்டரி டெய்சி.

சுபத்ரா, டெய்சியை எவ்வாறு எதிர்கொள்கிறார் ஜான்? அவரைப் பற்றிய உண்மை லட்சுமிக்கு தெரியவந்ததா? காட்டில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் புலி சிக்கியதா என்பது உட்படப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘மிருகா’.

பழைய படமா, புதிய படமா?

மிருகாவின் பிரதான பாத்திரமாக திரையை நிறைக்கிறார் ஸ்ரீகாந்த். ‘சாக்லேட் பாய்’ தோற்றத்தில் ஒரு கொடூரன் என்ற பாத்திரம் அவருக்குப் புதிது. என்னதான் ‘பேட் பாய்’ பாடல் பின்னணியில் ஒலித்தாலும், சாந்தத்தையும் கொடூரத்தையும் அடுத்தடுத்து வெளிப்படுத்தும் அவரது நடிப்பு திருப்தியளிக்கவில்லை.

லட்சுமியாக நடித்திருக்கும் லட்சுமி ராய், இறுதியாக வரும் அரை மணி நேரம் நம்மை படத்தோடு ஒன்றவைக்கிறார். சமீபகாலமாக அவர் தமிழ் படங்களில் தலைகாட்டாதது, இதனை ‘பழைய படம்’ என்று எண்ண வைக்கிறது.

லட்சுமியின் தங்கைகளாக வரும் நைரா ஷா, வைஷ்ணவி சந்திரன் இருவருமே மிகச்சில காட்சிகளில் கவர்ச்சி பதுமைகளாக வந்து போகின்றனர். போலீஸ் அதிகாரியாக வரும் தேவ் கில் ஏதேனும் செய்வார் என்று எதிர்பார்த்தால், சட்டென்று ஸ்ரீகாந்திடம் அடிவாங்கிச் சரிகிறார்.

லட்சுமியின் செகரட்டரியாக நடித்திருப்பவர், ‘இன்னும் கொஞ்ச நேரம் வந்திருக்கலாமே’ என்று யோசிக்க வைக்கிறார்.

இவர்கள் தவிர பாண்டி, அபிஷேக் ஆகியோர் ஓரிரு பிரேம்களில் மட்டுமே தலைகாட்டியிருக்கின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் நறுக்கப்பட்டிருப்பது, கதையோட்டத்தில் பல கேள்விகளை ஏற்படுத்துகிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..

கண்ணில் ஒற்றிக்கொள்ளும் காட்சிகளைப் படமெடுத்த அனுபவம் கொண்டவர் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம். அவர் கதை திரைக்கதை எழுதியிருக்கும் படம் இது.

அவரது படங்களில் பெரும்பாலும் இடம்பெறுகிற மலைப்பாங்கான பகுதிகளே இதன் கதைக்களமாகவும் உள்ளது.

அடுத்தடுத்து ட்விஸ்ட் என்ற பாணியிலமைந்த திரைப்படங்களை பிரதியெடுத்திருக்கிறது ‘மிருகா’. படத்தின் தொடக்கத்திலேயே ஜான் பாத்திரம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லிவிடுவதால், திருப்பங்களை பில்ட்அப்புடன் சொல்ல வேண்டாமென்று முடிவு செய்திருக்கலாம்.

படத்தின் தொடக்கத்தில், ஒரு சிறுவன் புலியிடம் ஏழைத்தாயை பறி கொடுப்பது காட்டப்படுகிறது. அச்சிறுவன் ஸ்ரீகாந்த் கதாபாத்திரமா அல்லது வேறு ஏதேனும் கதை அதன் பின்னிருக்கிறதா என்பது விளக்கப்படவில்லை.

கோவாவில் நடந்த படுகொலைகளுக்கு ஜெஸ்ஸியின் கணவனே காரணம் என்று சொல்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் அபிஷேக். பெண் பணியாளரிடம் வம்பு செய்ததாக பாண்டியைக் கண்டிக்கிறார் ஸ்ரீகாந்த்.

இவ்விரு காட்சிகளின் ஆதியும் அந்தமும் திரைக்கதையில் முழுதாக வெளிப்படவில்லை. இவையனைத்தும் ஸ்ரீகாந்த் பாத்திரத்தின் யுக்திகளையும் திட்டமிடலையும் குறைத்துக் காட்டுகிறது.

இறுதியாக வரும் அரை மணி நேரம் முழுக்க ‘கிராபிக்ஸ்’ புலி உலவுகிறது. முதலில் மிரளவைக்கும் அதன் தோற்றம் போகப்போக பூனை பொம்மை போலாகிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

அக்காட்சிகளின் அளவை இன்னும் குறைத்து செறிவாக்கியிருந்தால் ‘செம’ என்றிருக்கும்.

அதே நேரத்தில், படத்தொகுப்பாளர் சுதர்சன் வெட்டிய காட்சிகள் கதையோட்டத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பரபரப்பு கூட்டியிருக்கிறது அருள்தேவின் பின்னணி இசை. ’பேட் பாய்’ பாடலும் கூட மீண்டும் கேட்கும் ரகம்.

வழக்கமான ‘த்ரில்லர்’ படங்களில் இருந்து விலகி, பெரும்பாலான காட்சிகள் ‘பளீர்’ரென்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அது மட்டுமே கொஞ்சமாய் உறுத்தலை ஏற்படுத்துகிறது.

படத்தில் உரையாடல்கள் இயல்பாக அமைந்திருப்பதாலோ என்னவோ, வசனத்திற்கென்று தனியாக ‘கிரெடிட்’ கொடுக்கப்படவில்லை. பலரது உழைப்பு அதன் பின்னிருக்கக் கூடும்.

ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வத்தின் எழுத்துக்கு திரையில் உருவம் தந்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். முழுக்கதையும் தெளிவாக இருக்க வேண்டுமென்பதில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

காத்திருக்கும் ஆச்சர்யம்!

டைட்டிலை மட்டும் பார்த்துவிட்டு, எதையும் எதிர்பார்க்காமல் தியேட்டருக்கு வருபவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை பரிசளிக்கும் ‘மிருகா’. ஏற்கனவே பழக்கப்பட்ட கதை, கணிப்புகளுக்கு உட்பட்ட காட்சியமைப்பு என்றிருந்தாலும், பார்வையாளர்களைச் சுண்டியிருக்கும் அம்சங்கள் படத்தில் இருக்கின்றன.

படம் தயாராகி நீண்டகாலம் வெளியீட்டுக்காக காத்திருந்ததும், சரியான முன்னோட்டங்கள் வெளியாகாததும் ‘மிருகா’வை ரசிகர்களிடம் இருந்து விலக்கி வைத்திருக்கின்றன. ஒரு டஜன் பாத்திரங்களோடு ஒரு விறுவிறுப்பான படத்தை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் ‘கியாரண்டி’ தரும்!

– உதய் பாடகலிங்கம்

08.03.2021 11 : 50 A.M

You might also like