‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!

புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன.

வெளியீட்டுக்குத் தயாராகி கிட்டத்தட்ட 4 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’. காலத்தால் பழமையானது என்று சொல்லமுடியாத வகையில் அரை டஜன் பாத்திரங்களை மட்டுமே திரைக்கதை சுற்றி வருவது, படம் முடிவுறும்போது மைனஸாக தென்படுகிறது.

ராம்சேவின் ‘காஜி’!

ஒரு தேவதைக்குரிய குணங்களுடன் சிறார் இல்லமொன்றில் வளர்பவர் மரியம் (ரெஜினா கேசண்ட்ரா). இயேசு கிறிஸ்துவை தனது ஆதர்சமாகக் கொண்டிருப்பவர். தன் சம்பாத்தியம் அனைத்தையும் தன்னைப் போன்ற ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காகச் செலவிடுபவர்.

ஒருநாள், பணக்கார குடும்பமொன்றில் குழந்தை பராமரிப்பாளராகும் வாய்ப்பு மரியமை தேடி வருகிறது. அந்த வீட்டினுள் நுழையும்போது ஏதோ ஒரு சக்தி தடுத்தாலும், அதையும் மீறி அப்பணியில் சேர்கிறார்.

கோவையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகளான ஸ்வேதாவை (நந்திதா ஸ்வேதா) திருமணம் செய்து, மிகப்பெரிய சொத்துக்கு அதிபதி ஆனவர் ராம்சே எனும் ராமசாமி (எஸ்.ஜே.சூர்யா). பணக்காரத் திமிரோடு இருக்கும் மனைவி முன்னால் அடக்கி வாசித்தாலும், தனக்கான இடத்தில் தனது அசல் குணத்தை வெளிப்படுத்துபவர்.

ராம்சே-ஸ்வேதா தம்பதியரின் மகனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மரியமிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரேநாளில் அக்குழந்தையின் அடம்பிடிக்கும் குணத்தை அவர் மட்டுப்படுத்துகிறார்.

தனது ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல் மரியத்தை ஸ்வேதா கவனிக்கத் தொடங்க, ராம்சேயோ அவர் மீது கட்டுக்கடங்காத காம வேட்கையுடன் திரியத் தொடங்குகிறார். வேலையாள் மூலமாக மரியமை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகள் பல்லிளிக்க, ஸ்வேதாவை வெளியூர் அனுப்பி மரியமை தன் வழிக்கு கொண்டுவரத் திட்டமிடுகிறார்.

ராம்சேவின் முயற்சி பலித்ததா? அதனை மரியம் எவ்வாறு எதிர்கொள்கிறார்? இந்த உண்மை ஸ்வேதாவுக்கு தெரிய வந்ததா என்ற கேள்விகளுக்கான பதில்களை நீட்டி முழக்கிச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

‘பார்த்தவுடனே வர்றதுதான் காதல்; பார்க்க பார்க்க வர்றது காஜி’ என்ற வசனம் இடம்பெற்றாலும், ராம்சேவின் காம எண்ணங்களில் இருந்துதான் திரைக்கதை தொடங்குகிறது. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அவர் பொய்முகம் காட்டுகிறார் என்பதை மேடையொன்றில் ‘கிடார்’ வாசிப்பது போல காட்டியிருப்பது அழகான உவமை.

‘எக்சன்ட்ரிக்’ பெர்பார்மன்ஸ்!

கிட்டத்தட்ட ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமலை பிரதியெடுத்தது போல, ராம்சே பாத்திரத்தில் வந்து போகிறார் எஸ்.ஜே.சூர்யா. அப்படத்தில் கமலாவது ஸ்ரீதேவியிடம் கத்தும் காட்சியில் மட்டுமே ‘எக்சன்ட்ரிக்’ குணத்தை வெளிப்படுத்துவார். ஆனால், இப்படம் முழுக்க கிட்டத்தட்ட அதே பாணியில் நடித்திருக்கிறார் சூர்யா.

ஆரம்பகட்ட காட்சிகளில் அவரது நடிப்பு வெறுமனே சிவாஜியை ‘மிமிக்ரி’ செய்தது போலிருக்கிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக, ‘ஐயா எம்.ஜி.ஆர். மாதிரி’ என்று ஒரு வேலைக்கார பாத்திரம் வசனம் பேசுகிறது.

கணவனை விட மனைவி எதிலும் ஒருபடி மேல் இருப்பவர் என்ற நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது நந்திதா நடித்த ஸ்வேதா பாத்திரம். சமூக அந்தஸ்தை காரணம் காட்டி அவர் பேசும் விஷயங்கள் ‘ஓகே’ ரகம் என்றாலும், இந்த அளவுக்கு ‘எக்செண்ட்ரிக்’ ஆக காட்டியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இதனால், ஒருகட்டத்தில் சைக்கோ தம்பதியோடு பேய் மோதுவது போன்று மாறிவிடுகிறது திரைக்கதை. அதுவே படத்தின் மீது எரிச்சல் ஏற்படவும் காரணமாகிறது.

ரெஜினா கேசண்ட்ராவுக்கு சவால்மிக்க பாத்திரம் இல்லை. அதேநேரத்தில், அவரது இருப்பு போரடிக்கவில்லை. மகன் வேடத்தில் நடித்திருக்கும் குழந்தை திரையில் தனித்து தெரியாமல் இருப்பது அழகு.

இவர்கள் தவிர வீட்டு வேலையாட்களாக வரும் 4 பேர் 80களில் தமிழ், மலையாளத்தில் வெளிவந்த பேய் படங்களை நினைவூட்டுகின்றனர்.

வித்தியாசமான சிந்தனை!

பாடல்களுக்கு வழக்கமான சிச்சுவேஷன் தவிர்த்து, வேறுவிதமாக யோசித்திருப்பது அருமை. குறிப்பாக, காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பின்னணியில் வரும் ‘கண்ணுகளா செல்லங்களா’ பாடலாகட்டும், ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ பாடலாகட்டும், திரைக்கதையில் எதிர்பாரா இடங்களில் வெளிப்படுகின்றன.

இப்படத்தில் அனைத்து பாடல்களையும் செல்வராகவனே எழுதியிருக்கிறார். சில ஆண்டு கால இடைவெளிக்குப் பின் வெளியானாலும் பாடல்களில் ‘பிரெஷ்னெஸ்’ தெரிகிறது.

யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை விறுவிறுப்பூட்டினாலும், மேற்கத்திய திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

காட்சிகளின் உணர்வுக்கு ஏற்றவாறு ‘ஒளி’ அமைக்கும் அரவிந்த் கிருஷ்ணாவோடு இப்படத்தில் கைகோர்த்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதற்கேற்றவாறு, இருளையும் ஒளியையும் மாறிமாறி திரையில் உலவவிட்டிருக்கிறார் அரவிந்த்.

ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பும், விஜய் ஆதிநாதனின் கலையமைப்பும் குதிரைக்கு இட்ட கடிவாளம் போன்று இயக்குனரின் பார்வையை காட்டுகின்றன.

கடவுள் சாத்தான், நல்லது கெட்டது, அறம் அராஜகம் என்று எதிர்துருவங்கள் பற்றி தத்துவார்த்தமான கருத்தாக்கத்தை படத்தின் இறுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார் செல்வராகவன். ஆன்மாக்கள் வழிபாட்டு தலங்களுக்குள் புகுவதில்லை எனும் கோட்பாட்டையும் சட்டென்று மீறியிருக்கிறார்.

அதோடு, தேவைகள் ஏற்படும்போதே ஆன்மாவின் சக்தி அதிகரித்திருப்பதாகக் காட்டியிருப்பது மற்றவர்கள் தொடாத ஏரியா. என்னதான் ஆங்காங்கே வித்தியாசம் காட்டினாலும், ஒட்டுமொத்த திரைக்கதை 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பேய்ப்படங்களின் விரிவான பதிப்பாகவே தென்படுகிறது.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என்று சீரியசான படங்களின் ஊடே ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறுலே’ (யாரடி நீ மோகினி) எனும் மெல்லிய காதல் கதையை தனக்கேயுரிய ஸ்டைலில் இயக்கியவர் செல்வராகவன். இப்போதும் அதேபோல ஒரு ‘பீல்குட்’ படத்தை தந்தால் போதும்; அதன்பின் ‘புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ என்று எத்தனை கனமான களத்தைக் காட்டினாலும் அவரது ரசிகர்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வார்கள்!

-பா.உதய்

06.03.2021  12:05 P.M

You might also like