தமிழகத்தில் ஏப்- 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் இன்று தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களிலும்  ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. கடந்த தேர்தலை விட இது 34.73 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் தரைத்தலத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு 2 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்கு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

26.02.2021 01 : 56 P.M

You might also like