தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!
சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2
பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.
தமிழக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் கல்வி தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி எழுதியும் பேசியும் வருபவர் ஆசிரியை உமாமகேசுவரி.
அரசுப் பள்ளி மாணவர்களின் சிக்கல்களை பொதுத் தளத்தில் உரையாடி வருபவராகவும் இருக்கும் அவரது கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். 208 பக்கங்களுடன் வெளிவந்திருக்கிறது.
குறி வைக்கப்படும் அரசுப் பள்ளிகள், கற்பிக்கும் தகுதியற்றவர்களா நம் ஆசிரியர்கள்? என்ன சொல்கிறது அரசாணை 145? வளாக இணைப்புகள் வரமா சாபமா? புதிய அரசாணையால் பெண் கல்வி பெரிதும் பாதிக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்தரத்தை மேம்படுத்துமா? புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள் அதிகரிக்கும் அழுத்தங்களும் ஆசிரியர்களின் ஆதங்கமும், தேர்வு ஒன்றே போதுமா? கல்வியின் குறிக்கோள் விசாலமாக இருக்க வேண்டும், பதிவேடு மட்டும் போதுமா? பாடம் நடத்த வேண்டாமா? என்பன உள்ளிட்ட 25க்கும் அதிகமான கல்விச் சிக்கல்களை விரிவாகப் பேசி விவாதிக்கும் ஆழமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தன் கட்டுரை நூலைப் பற்றிப் பேசும் ஆசிரியை உமாமகேசுவரி, “ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பின்னணி இருக்கும். ஆனால் இன்று உங்கள் கைகளை வந்தடைந்த இப்புத்தகத்திற்கு எந்தப் பின்னணியும் கிடையாது.
ஒரு ஆசிரியராக எனது இருபதாண்டு காலத்தில், தொடர்ந்து கல்வித் தளத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதால் பள்ளி அமைப்பில் கல்வி முறையில் அன்றாடம் நான் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.
தமிழ் இந்து, இந்து காமதேனு, புதிய ஆசிரியன், நமது மண்வாசம், குங்குமம், மகளிர் எழுச்சி, காப்பிடல், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், சுவடு எனப் பல இதழ்களில் கல்வி குறித்து எழுதி வருகிறார் உமா. அதாவது, “என்னைச் சுற்றி வாழும் சமூகம் வியாபாரமாக மாறிப் போன கல்வியை நாடி தோற்றுப் போவதைக் காணச் சகியாமல் தான் பேச எழுத ஆரம்பித்தேன்.
ஒருபுறம் கல்விக்காக இயங்கும் மனிதர்கள் அரசுப் பள்ளிகளின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலேயே கல்விக் கொள்கைகளை, அரசை குற்றவாளிகளாகச் சுட்டிவரும் போக்கையும் கவனித்தேன்.
ஆனால் கல்விக் கூடங்களின் கள யதார்த்தத்திலும் இவர்கள் கவனம் கொண்டால்தான் சரியான தீர்வை நோக்கி நகரமுடியும் என்பதற்காகவே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்” என்று எழுத்தின் பூர்விகம் பேசுகிறார்.
நான் எழுத்தாளர் அல்ல. ஆனால் சமூக மாற்றத்திற்கான கல்வியை, நாம் சரியாகக் கையாள அனைவருக்கும் அது குறித்த புரிதல் வேண்டும் என்பதால் வேறு வழியின்றி எழுதி வருகிறேன். எனது ஆசிரியர் நட்பு வட்டம் மிகப்பெரியது. ஒவ்வொரு கட்டுரையைப் படிப்பவரும் எங்கள் மனதில் இருப்பதைக் கூறிவிட்டீர்கள் எனச் சொல்லி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
நான் சந்தித்த பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், கற்பித்தல் தாண்டிய பல்வேறு கல்வி சார்ந்த பணிகள், லட்சக்கணக்கான மாணவர்கள், அப்பாவி பெற்றோர்கள் என இந்த சமூகம்தான் நான் எழுதுவதற்கான இடத்தையும் பொருண்மையையும் கொடுத்திருக்கின்றனர்” என்று நூலின் முன்னுரையில் நெகிழ்கிறார் ஆசிரியை உமா.
பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைத் தரவேண்டும் என்று தேடல் உள்ள அனைத்துப் பெற்றோர்களுக்கும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும், எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வகுப்பறைக்குள் நுழையப்போகும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும், அவர்களை உருவாக்கும் கல்விக் கூடங்களுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கம் நிறைவேற நூலை வாங்கிப்படியுங்கள் நண்பர்களே.
கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி: சு. உமா மகேசுவரி
வெளியீடு: பன்மைவெளி,
21, முதல் தெரு, முதல் விரிவு,
க.க.நகர், சென்னை – 78.
தொ.பே: 9840848594
மின்னஞ்சல்: panmaiveli@gmail.com
விலை: ரூ. 165
– தான்யா
26.02.2021 01 : 56 P.M