‘பாரிஸ் ஜெயராஜ்’: செகண்ட் ஹீரோவான சந்தானம்!

தலைப்பை பார்த்ததுமே, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் சந்தானத்துக்கு முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்வி எழும். படத்தை முழுதாகப் பார்த்து முடித்தபிறகு, இக்கேள்விக்கு விடை கிடைக்கும் (அதற்குப் பதிலாக, விமர்சனத்தின் இறுதி வரியையும் படிக்கலாம்).

முன்னணி ஹீரோக்கள் முதல் முதன்முறையாக திரையை எட்டிப் பார்க்கும் அறிமுகங்கள் வரை, அனைவரது படத்திலும் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார் என்ற நிலை சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது. என்ன நினைத்தாரோ, திடீரென்று ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற முடிவை எடுத்தார்.

அம்முடிவு சரிதான் என்பது போல தில்லுக்கு துட்டு, ஏ1 உள்ளிட்ட படங்களின் வெற்றிகள் அமைந்தன. அந்த வரிசையில், தொடக்கம் முதல் இறுதி வரை காமெடி சரவெடியாக அமைந்திருக்கிறது ‘பாரிஸ் ஜெயராஜ்’.

வித்தியாசமான கதை!

ஒற்றை வரியில் இப்படத்தின் கதையைச் சொல்லிவிடலாம். விமர்சனத்தை அது ‘ஸ்பாய்லர்’ ஆக்கும் என்பதனால், அதனை தவிர்க்கிறேன்.

பிரகாஷ் ராஜ் (தெலுங்கு நடிகர் பிருத்வி ராஜ்) ஒரு வழக்கறிஞர். உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி செஷன்ஸ் நீதிமன்றம் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி சுற்றிச் சுழன்று பணியாற்றுபவர் (இதன் பின்னணியில் கதை முடிச்சு அவிழ்க்கப்படுகிறது).

பிரகாஷ் ராஜின் மகனான ‘யூடியூப்’ புகழ் ஜெயராஜ் (சந்தானம்), வடசென்னையில் பிரபல கானா பாடகராகத் திகழ்கிறார். இவரது முதல் காதல் முறிந்துபோக பிரகாஷ் ராஜே காரணமாகிறார்.

இதனால் மனமொடிந்து மதுபோதையில் திளைக்கும் ஜெயராஜ், கல்லூரி மாணவி திவ்யாவை (அனைகா சோதி) பார்த்ததும் மீண்டும் காதலில் விழுகிறார். திவ்யா வேறொரு நபரை காதலிக்க, இருவரையும் பிரிப்பதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்கிறார் பிரகாஷ் ராஜ்.

இது, ஜெயராஜ் மீது திவ்யாவின் பார்வை திரும்பக் காரணமாகிறது.

பிரகாஷ்ராஜ் திவ்யாவின் காதலைப் பிரிக்க நினைப்பது ஏன்? ஜெயராஜ் திவ்யாவை கரம்பிடித்தாரா என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதுடன் படம் முடிவடைகிறது.

கதையை லேசுபாசாக கேட்டுவிட்டு, தியேட்டருக்கு வருபவர்கள் எண்ணிக்கை கணிசம். அவர்களில் சிலர் இப்படத்தின் ஒற்றைவரிக் கதையைக் கேட்டுவிட்டு ‘ச்சீ.. இது ஒரு கதையா..’ என்று முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வாய்ப்பும் அனேகம்.

அதையும் மீறி தியேட்டருக்கு வந்தால், முக்கால்வாசி காட்சிகளில் விழுந்து புரண்டு சிரிப்பதற்கு ‘கியாரண்டி’ தருகிறார் இயக்குனர் ஜான்சன்.

அசத்தும் பிருத்வி!

மழுக்கென்று ‘க்ளீன்’ ஷேவ் செய்த முகத்துடன் எந்நேரமும் சீரியசாக இருக்கும் பிருத்விராஜின் தோற்றம், அவருக்கு வில்லன் அந்தஸ்தை வெகுசீக்கிரமாய் போர்த்திவிடுகிறது.

முதல் பாதி முழுக்க சந்தானத்தின் ராஜ்ஜியம் என்றால், பின்பாதியில் அதில் பேர்பாதியை சத்தமில்லாமல் லவட்டிக் கொள்கிறார் பிருத்விராஜ். ஷாப்பிங் மாலில் சந்தானத்தையும் அனைகாவையும் பிருத்வி மாறி மாறி அவர் சந்திக்கும் காட்சி குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கிறது.

அவருக்கான காட்சிகளை கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால், இப்படத்தின் செகண்ட் ஹீரோவாகத்தான் சந்தானம் தெரிந்திருப்பார்.

‘காவியத் தலைவன்’ படத்துக்குப் பிறகு, அனைகாவுக்கு இதில் சொல்லிக் கொள்ளும்படியான வேடம். அவரை கவர்ச்சியாகக் காட்ட வேண்டுமென்பதற்காக வலிந்து பாடல் காட்சி அமைக்காமல் தவிர்த்ததற்காகவே இயக்குனருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

வீரசிவாஜி, மொட்டை ராஜேந்திரன், அவரது உதவியாளராக வரும் மாறன், தங்கதுரை, சர்வராக வரும் கணேஷ்கர், பிருத்வியின் உதவியாளராக நடித்தவர், சந்தானத்துடன் வரும் இரு நண்பர்கள், புரோகிதராக வரும் சேஷு, அனைகா மற்றும் சந்தானத்தின் தாயாக நடித்தவர்கள் உட்பட என்று ஏறக்குறைய ஒரு டஜன் பாத்திரங்கள் நம் மனதில் பதியும் அளவுக்கு, அவர்களுக்கு திரையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னை திருமணம் செய்யவிடாமல் தடுக்கும் பிருத்வியிடம் ‘ய்ய்..’ என்று கத்தும் காட்சியில் கைத்தட்டல்களை அள்ளுகிறார் சந்தானம். உடலோடு பொருந்திப்போகும் ‘ஜெர்க்கின்’ போல, ஜெயராஜ் பாத்திரத்தை அவருக்குத் தந்திருக்கிறார் இயக்குனர்.

‘இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் நடிச்சார்ல’ என்று ரசிகர்கள் யோசிக்காமல் இருக்க, எதிர்காலத்தில் இது போன்ற பாத்திரங்களை சந்தானம் தவிர்ப்பது நல்லது.

கைகோர்த்த கமர்ஷியலும் கலையும்!

ஹீரோ கானா பாடகர் என்பதை வெறுமனே ‘இண்ட்ரோ’ பாடலில் காட்டினால் போதுமென்று நினைக்காமல், அனைத்து பாடல்களிலும் அதனை உணரச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவரே, இப்படத்தின் முதல் நாயகன். பாடல்கள் எழுதிய ரோகேஷ், அதில் பாதி கிரெடிட்டை எடுத்துக் கொள்கிறார்.

பிருத்வி சம்பந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

அதேபோல, சந்தானத்தின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ள சாண்டியும் பாராட்டுக்குரியவர்.

நடனக் காட்சிகளில் ‘பெர்பார்மன்ஸ்’ காட்டினாலும், ‘நல்லா எக்சர்சைஸ் பண்றாரு’ என்று கமெண்ட் விழாமல் பார்த்துக்கொள்வது கடினம். இப்படத்தில் இருந்து, சந்தானத்தின் நடனத்திற்கென்றே தனியாக ரசிகர்கள் கூடினால் ஆச்சர்யம் தேவையில்லை.

பிருத்வி உட்பட வெகு சிலர் மட்டுமே ‘கலாய்’ கவுண்டர்களை வசனமாகப் பேசுவதில்லை. மற்றபடி, படம் முழுக்க இரண்டு வரிக்கு நடுவே ஒரு கலாய்த்தலை கண்டெடுக்க முடிகிறது.

திரைக்கதையோடு ஒன்ற வசனம் தடையாக இருந்தாலும், ஒருவிதத்தில் படத்தின் யுஎஸ்பியாகவும் அதுவே திகழ்கிறது.

வசனங்களில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும்போது, மேடை நாடகம் போன்ற தோற்றம் திரைக்கதையில் ஏற்பட வாய்ப்புண்டு. அதனைத் தனது ஒளிப்பதிவால் மறக்கடிக்கிறார் ஆர்தர் ஏ.வில்சன்.

மாப்பு பிரகாஷின் படத்தொகுப்பும் ஜி.துரைராஜின் கலையமைப்பும் இயக்குனரின் பார்வைக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன.

ஒரு கமர்ஷியல் படம் என்பதையும் மீறி, தங்கள் கலை மீதான அர்ப்பணிப்பை இத்தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

கொண்டாடப்படும் ‘கானா’!

மெட்ராஸ், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்படச் சில படங்களில் சென்னை மக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இப்படத்தில் கமர்ஷியல் கதையின் ஊடே மிக மெலிதாகத் தன் பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.

பிறப்பு முதல் இறப்பு வரை, சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர்களின் வாழ்வோடு பிணைந்தவை ‘கானா’ பாடல்கள். வேறிடம் பெயர்ந்தாலும், அது நோக்கிய அவர்களின் தேடல் முடிவதேயில்லை.

சென்னை வட்டாரத்தின் நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித்தேடி மொபைலில் சேமிப்பவர்களிடம் இதனைக் காண முடியும். அப்படிப்பட்டவர்களின் கலெக்‌ஷனில் இடம்பெறும் வகையில் அமைந்திருக்கின்றன ‘பாரிஸ் ஜெயராஜ்’ பாடல்கள்.

சென்னையில் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் அதிகமிருந்திருந்தால் இப்படம் இன்னும் அதிகமாய் கொண்டாடப்படும். அதே நேரத்தில், சென்னை தவிர்த்த வேறு பகுதிகளில் இப்படம் கவனத்தைப் பெறாமல் போகும் அபாயம் இருப்பதையும் மறுக்க முடியாது.

கலாசாரத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு இப்படத்தை எதிர்ப்பவர்களை, கவுண்டமணியின் காமெடி கொண்டே அடக்கிவிடலாம். ‘நாட்டாமை’ படத்தில் ‘டேய் தகப்பா..’ என்று செந்திலிடம் கவுண்டமணி பாய்வதைக் கண்டு சிரித்தவர்கள் இப்படத்தையும் ரசிப்பார்கள்!

– உதய் பாடகலிங்கம்

15.02.2021 12 : 20 P.M

You might also like