ஆஸ்கர் இறுதிப் போட்டிக்குத் தேர்வான இந்தியக் குறும்படம் ‘பிட்டூ’!
ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ மலையாள படம் அனுப்பப்பட்டது.
சிறந்த சர்வதேச படத்துக்கான பிரிவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இந்தப் பிரிவில் பங்கேற்கும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை. வெளிநாட்டினர் பலர் ஜல்லிக்கட்டு படத்தைப் பார்த்து பாராட்டியதால், இப்படத்துக்கு விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘பிட்டூ’ படம் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கரிஷ்மா தேவ் துபே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பள்ளி தோழிகள் இருவரைப் பற்றிய கதையை உள்ளடக்கியது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பிட்டூ குறும்பட இடம்பெற்றுள்ளதால், அப்படகுழுவினருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
11.02.2021 12 : 35 P.M