எது கொரோனாவின் மூலம்? இன்னுமா திணறல்?

எங்கோ தூரத்தில் இருக்கும் நிலவில், வேறு வேறு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதைக் கூடத் தூரத்தைத் தொழில்நுட்பத்தால் கடந்து கண்டறிகிறார்கள். வியக்க வைக்கிறார்கள்.

ஆனால் நம்மைச் சுற்றிப் பல உயிரைகளை எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாக் கிருமி உருவான மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு தூரம் திணறுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் கொரோனா முதலில் உருவானதாகச் சொல்லப்பட்டது. அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியதாகச் சொல்லப்பட்டு – இன்று பாதிக்கப்பட்டிருப்பவை 200-க்கும் மேற்பட்ட நாடுகள்.

கோடிக்கணக்கான பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற முறையில் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாத நிலை.

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் உள்ள உகான் நகருக்கு ஆய்வு செய்ய நிபுணர் குழு முயன்றபோது முதலில் அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு அனுமதிக்கப்பட்டது.

தற்போது அங்கு சென்ற மருத்துவ ஆய்வுக்குழுவினர் சீனாவில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு அவர்களை ஆய்வு செய்ய அனுமதித்திருக்கிறார்கள்.

தற்போது ஆய்வு செய்து வருகிற குழுவினரிடம் “உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை. வேறு ஒரு உயிரினத்தின் மூலமாக அது மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம்” என்றிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தில் இருக்கும் நிபுணரான பீட்டர் பென் எம்பரேக்.

ஆய்வு முடிவு முழுமையாக வெளியாவதற்கு முன்னரே எப்படி இப்படித் தகவல் பொது வெளியில் கசிகிறது?

எப்படித்தான் பரவியிருக்கிறது கொரோனா கிருமி?

இந்தப் பதிலுக்காக காத்திருக்கிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருநூறு நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள்.

கொரோனாவின் நதிமூலம் வெளியாகட்டும் தடைகளை மீறி!

10.02.2021    02 : 14 P.M

You might also like