மகாத்மா காந்தியின் கடைசி நாள்!

காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காந்தியின் கடைசி நாளன்று நடந்த விஷயங்களை கொஞ்சம் நினைவுகூர்வோம்:

மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவரது வயது 79.

தான் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சர்தார் வல்லபாய் படேலுடன், மகாத்மா காந்தி சில நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நாட்டில் நடந்து கொண்டிருந்த வன்முறைகளைத் தடுப்பதுப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததால், அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

5.10-க்கு சர்தார் வல்லபாய் படேலுடனான ஆலோசனையை முடித்துக் கொண்டு, கழிவறைக்குச் சென்ற காந்தி அங்கிருந்து நேராக பிரார்த்தனை நடக்கும் இடத்துக்கு சென்றுள்ளார்.

படேலுடனான ஆலோசனையால், பிரார்த்தனைக்கு தாமதமானதை உணர்ந்த காந்தியடிகள், வேகமாக பிரார்த்தனை நடக்கும் இடத்துக்கு சென்றுகொண்டு இருந்தார்.

பிரார்த்தனைக்கு நேரமானதை தன்னிடம் முன்பே தெரிவிக்காததற்காக உதவியாளர்களை கடிந்துள்ளார்.

பிரார்த்தனை நடக்கும் இடத்தை நோக்கி காந்தியடிகள் வேகமாக சென்றுகொண்டு இருக்கும் நேரத்தில்தான் நாதுராம் கோட்சே, அவரது வழியில் குறுக்கிட்டுள்ளார்.

பிரெட்டா எம் 1934 செமி-ஆட்டோமேடிக் பிஸ்டலைப் பயன்படுத்தி, நாதுராம் கோட்சே காந்தியடிகளின் இதயத்தை நோக்கி 3 முறை சுட்டுள்ளார்.

காந்தியடிகளை நாதுராம் கோட்சே, மாலை 5.12 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதாக அப்போது வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியால் சுடப்பட்ட காந்தியடிகளை உடனடியாக பிர்லா ஹவுசுக்குள் அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து காந்தி அதே இடத்தில் உயிரிழந்தார்.

மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் கோட்சே மற்றும் அவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் கோட்சேவின் சகோதரர் கோபால் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காந்தியடிகள், தனது உயிர் பிரிவதற்கு முன், ‘ஹே ராம்’ என்று உச்சரித்ததாக அங்கு அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

1948 ஜனவரி 30-ம் தேதிக்கு முன்னதாக மகாத்மா காந்தியைக் கொல்ல 5 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

1948-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி காந்தியைக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காந்தியடிகளுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. தனது வாழ்க்கை கடவுளின் கையில்தான் உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், “நிரந்தரமாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு எந்த உயிரினத்திற்கும் எந்த உரிமையும் இல்லை, எனவே, தனது உயிரை பாதுகாக்கத் தேவைப்படும் நபர் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறி, தனக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதை தடுத்தார்.

தான் கொல்லப்படுவதற்கு 2 நாள் முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மகாத்மா காந்தி, “ஒரு பைத்தியக்கார மனிதனின் குண்டுகளால் நான் மரணமடைய நேரிட்டால், அதை புன்னகையுடன் எதிர்கொள்வேன்.

கடவுள் என்னுடைய இதயத்திலும், உதடுகளிலும் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தக்கூடாது” என்று கூறியுள்ளார்.

நன்றி: முகநூல் பதிவு

30.01.2021   12 : 40 P.M.

You might also like