மதுரை அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்!
மதுரை திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் சுமார் 400 கிலோ எடையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. கோயில் திறக்க ஏற்பாடு செய்த அமைச்சர் உதயக்குமாருக்கு நன்றி. இரு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இன்று கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களது பிள்ளைகளாகிய நாங்கள் இன்று கோயிலைத் திறந்துள்ளோம். மேலும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
30.01.2021 04 : 30 P.M