“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”
மீள்பதிவு:
மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது.
மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன் சில நடிகைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூடுமானவரை இயல்பாக நடிக்க முயன்றவர் ஸ்ரீவித்யா.
வார இதழில் எழுதிவந்த தொடருக்காக சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் சந்திக்கச் சென்றபோது, சுமார் ஒன்றரை மணிநேரம் வரை இயல்பான சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா.
கமலைப் பற்றிப் பேசும்போது நெகிழ்ச்சி கூடியிருந்தது. தாயார் எம்.எல்.வசந்தகுமாரி பற்றிப் பேசுகையில் பரவசம்.
சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் குரல் கமறியது. விரிந்த கண்கள் கசிந்தன. “ஈகோ இல்லாம, தோரணைகள் இல்லாம பேசுறதே இப்போ ரொம்ப அபூர்வமாகிட்டு வருதில்லே…?
விரிந்த கூந்தலைக் கோதியபடி அவர் கேட்ட கேள்வியும், புன்னகையும் ஏனோ நினைவிலிருக்கிறது.
***
(நடிகை ஸ்ரீவித்யா மறைந்தபோது ‘புதிய பார்வை’ – 2006 நவம்பர் 1 தேதியிட்ட இதழில் மணா எழுதிய சிறு அஞ்சலிக் குறிப்பு.)
23.01.2021 12 : 30 P.M