வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!

“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு…” – சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்.

முன்னால் நிற்கும் செக்யூரிட்டியிடம்கூட சினேகிதத்துடன், “இது நம்ம காலேஜ்.. நான் படிச்ச காலேஜ்” என்று உற்சாகம பேசியவர், தன்னுடைய கல்லூரிக் கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிற வத்தலகுண்டு தான் எனக்குச் சொந்த ஊர். பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பான்னு பல எழுத்தாளர்கள் பிறந்த ஊர். சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தந்த ஊர். அப்பா நீதிபதி. வெவ்வேறு ஊர்களுக்கு அவர் மாற்றலானதால் தமிழகத்தின் பல ஊர்களில் படித்திருக்கிறேன். பி.யூ.சி.யை கோவையில் முடிச்சுட்டு பி.ஏ., சரித்திரம் படிக்க லயோலாவில் சேர்ந்தேன்.

சேர்ந்த ஆண்டு 1967.  நுழைந்ததும் கல்லூரிச் சூழல் பிடித்திருந்தது. விடுதியில் ஒவ்வொருவருக்கும் கட்டில், ஃபேனுடன் தனி அறை வசதியுடன் அன்றைக்கே இருந்த கல்லூரி இதுதான். கல்லூரி வளாகத்திற்குள் விதவிதமான மெஸ்கள் இருந்தன. ஐரோப்பிய பாணியில் கூட ஒரு மெஸ் இருந்தது.

வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா, முனுசாமி, ஃபாதர் சிக்ரியா என்று மிகச்சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள். கண்டிப்பு என்றால் அப்படி ஒரு கண்டிப்பு. மாதா மாதம் தேர்வு நடக்கும். ஒரு முறை தேர்வு நடந்தபோது மேகம் குறித்த கேள்விக்குப் படம் வரைந்து கொண்டிருந்தேன். பின்னால் பார்த்தால் முதல்வர் பிரான்சிஸ். உடனே என்னை ஹாலுக்கு வெளியே போகச் சொன்னார்.

அவருடைய அறைக்குப் போய் என்னுடைய முந்தைய தேர்வு மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்திருப்பது பற்றிக் கேட்டார். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படித்ததால் ஆங்கிலத்தில் மட்டும் சற்று சிரமம் இருப்பதாகச் சொன்னேன்.

இருந்தும் குறிப்பிட்ட அந்தக் கேள்விக்கான பதிலை நூறு தடவை எழுதிவிட்டுத் தான் வகுப்புக்கு வரவேண்டும் என்று உத்தரவு போட்டதால், இரண்டு நாட்கள் அமர்ந்து அதை எழுதி விட்டு, வகுப்புக்குப் போனேன்.

வகுப்பில் எனக்குப் பக்கத்தில் மற்ற மாநிலத்திலிருந்து வந்த மாணவர்கள். அதனால் விரைவில் ஆங்கிலம் தொடர்பு மொழியாகப் பழகிவிட்டது.

இங்குள்ள பெட்ரம் ஹாலில் அப்போது சனிக்கிழமைதோறும் படங்களைத் திரையிடுவார்கள். தமிழ், ஆங்கிலப் படங்கள் இரண்டும் இருக்கும்.

நான் விடுதிச் செயலாளராகவும் இருந்தேன். அப்போது பச்சையப்பன் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் மாணவர்களிடம் வெளிப்படையான அரசியல் ஈடுபாடு இருந்தாலும், எங்கள் கல்லூரியில் அரசியலில் ஈடுபடுவதற்குத் தடை இருந்தது.

இருந்தும் காமராஜரின் படத்தை என்னுடைய அறையில் ஒட்டி வைத்திருந்தேன். கல்லூரியில் அப்போது ‘சைலண்ட் ஹவர்’ என்று உண்டு. இரவு எட்டரை மணியிலிருந்து காலை 8 மணி வரை விடுதி அறையில் சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். வாடர்ன் கண்காணிப்பார். மீறினால் தண்டனை உண்டு. மாணவர்கள் அறையை விட்டுப் போனால் குறிப்பிட்ட அறையை விசேஷப் பூட்டுப் போட்டு பூட்டி விடுவார்கள்.

அப்படியும் ஒருநாள் கண்ணதாசனின் கூட்டத்துக்கு நானும் சக மாணவர்கள் சிலரும் போய்விட்டு இரவு 10 மணிக்குத் திரும்பி, பின் வாசல் வழியாக அமைதியாக ஊர்ந்து நகர்ந்து அறைக்குப் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

கவிஞர் கண்ணதாசனை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை அழைத்து வந்து தமிழ் மன்றத்தைத் துவக்கலாம் என்று முயற்சித்தேன்.

கல்லூரி முதல்வர் கண்ணதாசனை அழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார். நானும் அவரை அழைத்தால் தான் தமிழ் மன்றம் இயங்கும் என்று தெரிவித்து விட்டேன். பிறகு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கண்ணதாசனை அழைக்க அனுமதி கொடுத்தார்கள். நாங்கள் போய் அழைத்து வந்தோம். ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார் கவிஞர்.

கட்டுப்பாடுகள் நிறைந்த லயோலா கல்லூரிக் காலகட்டம் தான் எனக்கு திட்டமிட்ட வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுத் தந்தது. கல்லூரியில் பல கூட்டங்களைத் திட்டமிட்டு நடத்தியதால், கல்லூரியை விட்டுப் போகும் போது ‘சிறந்த நிர்வாகி’ என்று கல்லூரி முதல்வர் கையால் சான்றிதழ் வாங்கியபோது பெருமையாக இருந்தது. பின்னாளில் இதே கல்லூரி எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கியது.

பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு அரசியல் ரீதியாக எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சட்டக் கல்லூரியில் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தேன்.

பீட்டர் அல்போன்ஸ், வலம்புரி ஜான், பின்னாளில் ஐ.பி.எஸ். ஆன ரவி ஆறுமுகம் என்று அப்போது பலர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். வலம்புரி ஜான் அற்புதமாகப் பேசுவார். அவருடைய பேச்சைக் கேட்ட கலைஞர் பாராட்டி அவரை முரசொலியில் தொடர்ந்து எழுத வைத்தார்.

பெருந்தலைவர் காமராரைப் பார்க்க திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவருடைய வீட்டுக்கு அடிக்கடி போவோம். எளிமையாக எங்களிடம் பேசிக்கொண்டிருப்பார். படிப்பில் கவனம் செலுத்தச் சொல்வார். அரசியல் ஈடுபாட்டினால் எந்த விதத்திலும் மாணவர்கள் படிப்பை விட்டு விடக்கூடாது என்று சொல்வார்.

காங்கிரஸில் ‘தமிழ்த் தேசிய மாணவர் வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னாலும் அவருடைய நிலைப்பாடு இதுதான்.

அதை வலுவாக உணரக் கூடிய சந்தர்ப்பமும் அமைந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த சுப்பிரமணியம் காங்கிரசை விட்டு விலகி இன்னொரு கட்சிக்குப் போன செய்தி காலை நாளிதழ்களில் வந்திருந்தது.

அதைப் படித்ததும் கல்லூரி மாணவர்கள் கொதிப்பானோம். நூறு பேர் வரை திரண்டு மூன்று பஸ்களைப் பிடித்தோம். தி.நகரில் இருந்த அவருடைய வீட்டுக்குப் போக முயன்ற போது, காவல்துறை எங்களைத் தடுத்து கைது செய்தது. மாலை விடுதலையானதும் மறுநாள் நாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக ஏற்பாடு.

அன்றே தலைவர் காமராஜரைப் பார்க்க மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அவருடைய வீட்டுக்குப் போனோம். சட்டை அணியாமல் வீட்டிலிருந்த அவர் எங்களைப் பார்த்ததும் நாங்கள் எம்.எல்.ஏ. வீட்டுக்குக் கிளம்பிப் போனது பற்றி வருத்தப்பட்டார்.

“உங்களை எவன் இப்படிப் பண்ணச் சொன்னான்? சொல்லுங்க. உங்க வீட்டில் உங்களைப் படிக்கத் தானே அனுப்பி இருக்காங்க.. போங்க.. நாளைக்கு உண்ணாவிரதம் எல்லாம் இருக்காம, படிக்கிறதைப் பாருங்க..” என்று மென்மையான பரிவுடன் சொன்னார் காமராஜர்.

சொன்னதோடு கட்சித் தலைவர்களை கல்லூரிக்கு அனுப்பி நாங்கள் கல்லூரிக்கு வந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே நிம்மதி ஆனார். மாணவர்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்த மகத்தான தலைவர் அவர்.”

பின்னால் விரிந்து பரந்திருக்கும் லயோலா கல்லூரி வளாகத்திற்குள் இருந்தபடி தன் கல்லூரிக் கால நிகழ்வுகளை புன்னகை மாறாமல் நெகிழ்ந்துபோய் சொல்கிறார் ஞானதேசிகன்.

மணாவின் ‘காலேஜ் கேம்பஸ்’ நூலிலிருந்து…

21.01.2021  12 : 30 P.M

You might also like