புலிக்குத்தி பாண்டி – இன்னொரு ‘குட்டிப்புலி’!

டைட்டிலை கேட்டவுடனே, நாயகனை மையப்படுத்திய கதை என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் கூட அப்படித்தான் நகர்கிறது.

எந்நேரமும் வம்பு வழக்கு என்று திரியும் ஒருவன், ஒரு பெண்ணை திருமணம் செய்தபிறகு முற்றிலுமாக மாறிப்போவதுதான் அடிப்படைக் கதை. அந்த மாற்றம் நிகழ்ந்ததா இல்லையா என்பதை தன் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எம்.முத்தையா.

‘புலிக்குத்தி பாண்டி’ – இயக்குனர் முத்தையாவின் 6-வது திரைப்படம்.

வழக்கமாக, தனது படங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்வையும் வழக்கங்களையும் மையப்படுத்துவது அவரது பழக்கம். இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று சன் டிவியில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’, சன் நெக்ஸ்ட் தளத்தில் காணக் கிடைக்கிறது.

நல்லவனுக்கு நல்லவன்!

சிவகங்கை வட்டாரத்தைச் சேர்ந்த புலிக்குத்தி பாண்டி (விக்ரம் பிரபு), அப்பாவிகளை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்குபவர். பெற்றோர் (சமுத்திரக்கனி – சுஜாதா) இருவரையும் சிறுவயதிலேயே இழந்தவர்.

ஒருமுறை நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் பாண்டிக்கு சீனி சேர்வை (காளீஸ்வரன்) அறிமுகமாகிறார்.

அவரது மகள் பேச்சியை (லட்சுமி மேனன்) பார்த்தவுடனேயே பாண்டிக்கு பிடித்துப் போகிறது.

பெண் கேட்டுப் போகும்போது, அடிதடியே வாழ்க்கையாக இருப்பவருடன் எப்படி குடும்பம் நடத்துவது என்று கேட்கிறார் பேச்சி. அதைக் கேட்டதும், தனது வழக்கங்களை முற்றிலுமாகக் கைவிடத் துணிகிறார் பாண்டி.

பேச்சிக்காக செரட்டை (வேல்முருகன்), சன்னாசி (வேல.ராமமூர்த்தி), அவரது மகன் சரவெடியோடு (ஆர்.கே.சுரேஷ்) பாண்டி மோதும் சூழல் உருவாகிறது. இதனை மீறி பாண்டி – பேச்சி திருமணம் நடக்க, அதன் தொடர்ச்சியைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

வழக்கமான நாயகன் – வில்லன் மோதல் என்றாலும், அது எவ்வாறு துளிர்க்கிறது என்பதைக் காட்டிய விதத்தில் ஈர்க்கிறார் இயக்குனர் முத்தையா. கொஞ்சம் பிசகினாலும் சீரியல் பாணியில் அமைந்துவிடக் கூடிய திரைக்கதையை, அவரது இயக்கம் மாற்றிப் போடுகிறது.

இன்னொரு குட்டிப்புலி!

முத்தையாவின் முதல் படமான குட்டிப்புலிக்கும் புலிக்குத்தி பாண்டிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாயகியாக நடித்த லட்சுமி மேனன் தொடங்கி நாயக பாத்திரத்தின் அமைப்பு, கிளைமேக்ஸ் உட்பட பல அம்சங்களில் இதனைக் காண முடியும்.

சர்ச்சைக்குரிய வசனங்கள் இப்படத்தில் பெரிதாகக் கிடையாது. அதே நேரத்தில், குறிப்பிட்ட சமூகத்தினர் இடையிலேயே பிரச்சனை நடந்து முடிவதாகக் காட்டி வீண் சர்ச்சைகளையும் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.

அது மட்டுமல்லாமல் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களின் மனநிலை, வாழ்க்கைமுறை, அவர்களது செல்வாக்கு போன்றவை இப்படத்தில் அங்குலம் அங்குலமாக முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கொடுத்த கடனுக்காக அதீத வசூல் செய்பவர்கள் ஒரே மாதிரியாகத்தான் செயலாற்றுகின்றனர். ஆட்சியர் அலுவலகங்களில் தீக்கிரையாகும் அவலங்களே இதனை புடம் போட்டுச் சொல்லும்.

அந்த வகையில், வேல ராமமூர்த்தி நடித்த பாத்திரம் வாயிலாக அக்கொடுமையை நம்முன் வைக்கிறார் முத்தையா.

மீண்டும் லட்சுமி மேனன்!

‘றெக்க’ படத்துக்குப் பின் 4 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். நாயகன் மீது காதல் மழை பொழிவது மட்டுமே நாயகியின் பணியாக ஆகிவிட்ட நிலையில், இப்படத்தில் அவருக்குக் கனமான பாத்திரம் தந்திருக்கிறார் இயக்குனர்.

கிளைமேக்ஸில் அவர் சண்டையிடுவது யதார்த்தமாக இல்லை. ஆனால், கொஞ்சம் கூட கேலி செய்யவிடாமல் அக்காட்சிகள் முன்வைக்கப்படுகின்றன.

விஜய் ஆண்டனி போலவே, தனக்கேற்ற ஆக்‌ஷன் படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் அபாயத்தினுள் மாட்டியிருக்கிறார் விக்ரம் பிரபு. இப்படியே போனால் காதல், நகைச்சுவை கலந்த பல பாத்திரங்களை அவர் இழக்க வேண்டியிருக்கும்.

குறைந்தபட்சம், அவரது தந்தையின் வெற்றிப்படங்களை தொடர்ச்சியாகப் பார்த்தாவது கதையை தேர்வு செய்யும் முறையை விக்ரம் பிரபு மாற்றிக்கொள்ள வேண்டும்.

‘கிடாரி’, ‘சேதுபதி’ படங்களைப் போலவே இதிலும் வேல.ராமமூர்த்தியைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது மகன்களாக 4 பேர் காட்டப்பட்டாலும் அருள்தாஸ், ஆர்.கே.சுரேஷுக்கே க்ளோஸ்-அப் ஷாட்கள் கிடைத்திருக்கின்றன.

சிங்கம்புலி, தீனா, பாலாவின் நகைச்சுவை கடுப்பேற்றாமல் காப்பாற்றுகின்றன. இது தவிர ரம்யா, ஜானகி, செல்வராஜ், ராஜசிம்மன், மீனாள் உள்ளிட்ட சிலர் கிராமத்து மனிதர்களாக நம் கண்ணுக்குத் தெரிகின்றனர்.

தாங்கும் ஒளிப்பதிவு!

முத்தையாவின் படங்களில் பெரும்தூணாகச் செயல்படுபவர் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ். இப்படத்திலும் அப்படியே. ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது ஒளிப்பதிவு பறந்தாடுகிறது.

இசையமைப்பாளர் ரகுநந்தன், படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன், கலை இயக்குனர் வீரமணி கணேசன், சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட கலைஞர்களின் ஒருங்கிணைப்பினால், ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு அழுத்தம் கூடியிருக்கிறது.

முடிவில், ‘இது ஒரு உண்மைக்கதை’ எனும் தகவல் முழுப்படத்தையும் மனதுக்குள் ‘ரீவைண்ட்’ செய்ய வைக்கிறது.

முதல் படம் தொடங்கி ‘புலிக்குத்தி பாண்டி’ வரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இயக்குனர் முத்தையாவின் மீது படிந்திருக்கிறது.

அதே நேரத்தில், அவரது படங்களில் பாத்திரங்களின் பாங்கும் திரைக்கதை அமைக்கும் விதமும் கச்சிதமாக இருப்பதையும் நம்மால் உணர முடியும்.

தமிழில் அரிதாகச் சில படைப்பாளிகள் மட்டுமே தெக்கத்தி கிராமங்களின் வாழ்க்கையை சிறுகதை, நாவல் வடிவில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். அவற்றில் சில, முத்தையாவின் கைவண்ணத்தில் திரைப்படங்களாக உருவாக வேண்டுமென்பது விருப்பம்.

அவ்வாறு நிகழ்ந்தால், ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த கதையமைப்பையும் களங்களையும் விட்டு விலகி வெவ்வேறு உலகங்களைத் திறம்பட படைக்க முடியும். முத்தையாவிடம் ஒரு ரசிகனாக எதிர்பார்ப்பது இதைத்தான்..!

  • உதய் பாடகலிங்கம்

21.01.2021 05 : 30 P.M

You might also like