‘மாறா’ – சுழலுக்குள் மாட்டிக்கொண்ட மீன்!
வெற்றி பெற்ற திரைப்படத்தை ‘ரீமேக்’ செய்யும்போது, அதனை முற்றிலுமாகப் பிரதியெடுப்பது அல்லது சிற்சில மாற்றங்களுடன் படியெடுப்பது நிகழும். முதலாவதைவிட, இரண்டாவதில் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த வகையில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த ‘சார்லி’ திரைக்கதையில் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் செய்து வெளியாகியிருக்கிறது ‘மாறா’. மாதவன், சாரதா ஸ்ரீநாத் ஆகியோர் இதில் நாயகன் நாயகியாக நடித்திருக்கின்றனர்.
அமேசான் பிரைம் வெளியீடான ‘மாறா’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகியிருக்கிறது.
மீன் கொண்ட உயிர்!
பறந்தலையும் பறவையைப் போல, தான் எதிர்கொள்ளும் சூழலோடு, மனிதர்களோடு உறவு பாராட்டும் தன்மை கொண்டவர் மணிமாறன் (மாதவன்). தன்னை வளர்த்த வெள்ளையாவின் (மௌலி) காதலே, அவரது தேடலின் பின்னணியில் இருக்கிறது.
பழமையான கட்டடங்களை மீட்டு சீர்படுத்தும் பணியைச் செய்பவர் பார்வதி (சாரதா ஸ்ரீநாத்). கேரளாவுக்கு ஒரு பணிநிமித்தமாக செல்லும் அவர், அங்கு மாறன் வசித்த வீட்டில் தங்குகிறார்.
சிறுவயதில் தான் கேள்விப்பட்ட கதையொன்றை, அந்த வீட்டைச் சுற்றி அவர் படமாக வரைந்திருப்பது ஆச்சர்யத்தைக் கூட்டுகிறது. அந்தக் கணம் முதல் பார்வதி மனதில் மாறனைச் சந்திக்கும் ஆர்வம் மேலிடுகிறது.
ஒரு மீனின் வயிற்றில் தன் உயிரை ஒளித்து வைத்த படைவீரனின் கதை அது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த மீனை வீரன் எப்படிக் கண்டெடுத்தான் என்று அக்கதை முடிவடையும்.
பயணமொன்றில் ஒரு கன்னியாஸ்திரி சொன்ன அந்தக் கதை எப்படி மாறனுக்குத் தெரியும்? இந்தக் கேள்வியே, மாறனைப் பார்க்கும் வேட்கையை பார்வதியிடம் உருவாக்குகிறது.
அதன்பின், அவர் மாறன் வரைந்த ஓவியங்களில் இடம்பிடித்த மனிதர்களைத் தேடிச் செல்கிறார். ஒவ்வொருவர் வாழ்விலும் மாறன் ஏற்படுத்திய மாற்றம் அப்போது தெரிய வருகிறது.
ஒருமுறை கூட சந்தித்திராத மாறன் மீது காதலும் வளர்கிறது. முடிவில், இருவருக்கும் தெரிந்த கதையே அவர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்க்கிறது.
முழுக்க கதை தெரிந்தபிறகும், ‘சார்லி’யைப் பார்க்கையில் எரிச்சலோ, அசூயையோ ஏற்படாது. ஆனால், ‘மாறா’ அதனைச் செய்யத் தவறியிருக்கிறது.
சார்லியின் மீதான அதீத காதல்!
மலையாளத்தில் இக்கதையை ரசித்தவர்களுக்கு, மாறா கொஞ்சமும் பிடிக்காது. காரணம், அதில் நிறைந்திருந்த நடிப்புக் கலைஞர்களின் புத்துணர்வு.
இத்தனைக்கும், நீண்ட நாட்களாக நடித்து வரும் நெடுமுடி வேணு அதில் இடம்பிடித்திருப்பார்.
சீமா, மவுலி, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், அப்புகுட்டி, கிஷோர், அபிராமி, ஜூனியர் பாலையா, ஆர்.எஸ்.சிவாஜி என்று தமிழ் சினிமாவில் அவ்வப்போது தங்கள் திறமையை நிரூபித்த கலைஞர்கள் இருந்தும், மாறாவைப் பார்க்கையில் ஒருவித வறட்சி பாவுகிறது.
இத்தனைக்கும் ‘சார்லி’யின் தொடக்கம் மற்றும் முடிவு இதில் முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், அதைப் பார்க்கையில் ஏற்படும் உற்சாகம் மாறாவில் சுத்தமாகத் தொலைந்திருக்கிறது.
கன்னியாஸ்திரியை மேரியாக வரும் பத்மாவதி ராவ், திருடனாக வரும் அலெக்சாண்டர் பாபு, கனியாக வரும் ஷிவதா ஆகியோர் மட்டுமே ‘ப்ரெஷ்’ உணர்வைத் திரையில் தருகின்றனர்.
வெள்ளையன் வாழ்நாள் முழுக்கத் தேடும் காதலியை, எப்படி பார்வதி கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதையில் ஒரு அற்புதமான இழை. அதனைக் கைக்கொண்ட இயக்குனர் திலீப்குமார், இடைப்பட்ட திரைக்கதையில் மொத்தமாக சார்லியை எடுத்தாண்டிருப்பது ஏனோ?!
இளம் தலைமுறையைச் சேர்ந்த துல்கர், பார்வதியின் பயணங்களும், எதிர்கொள்ளும் மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் வாழ்க்கைப் புரிதல்களும் ‘சார்லி’யின் அடிநாதம். அந்த இளமைத் துள்ளலும் பைத்தியக்காரத்தனமாகத் தோற்றமளிக்கும் தேடலும் இதில் சுத்தமாக மிஸ்ஸிங்.
மேடி மற்றும் சாரதாவின் வயதான தோற்றமும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
ஒரிஜினலை அப்படியே பிரதிபலிப்பதற்கான தேவை இல்லையென்றபோதும், எவ்விதக் கவலையுமற்ற ஒரு இளைஞனை மாதவனில் காண முடிவதில்லை. போலவே, புதிய உலகைத் தரிசிக்கும் வேட்கை சாரதாவின் முகத்தில் தென்படுவதில்லை.
கலை இயக்குனருக்கான படம்!
நாயகி மூலமாக கிளைமேக்ஸ் திருப்பம் உருவாவது, அதற்கான காரணமாக அவர் சிறுவயதில் கேட்ட கதை இருப்பது என்ற இரு விஷயங்களும் ‘சார்லி’யில் இருந்து மாறாவை வேறுபடுத்துகின்றன. திரைக்கதை எழுதிய பிபின் மற்றும் இயக்குனர் திலீப்குமாரை இவ்விஷயத்துக்காக பாராட்டலாம்.
அதே நேரத்தில், இதுவே படத்தின் நீளத்துக்கும் காரணமாகியிருப்பதை மறுக்க முடியாது. இதனால், திரைக்கதை நீண்டு கொண்டிருக்கும்போதே ‘கொஞ்சம் டல்லடிக்குதோ’ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
மாதவன், சாரதா இருவருமே ‘விக்ரம் வேதா’வில் அற்புதமாகத் தங்கள் நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், இப்படத்திற்காக இருவரையும் குறை சொல்வது அவர்களது அடிப்படைத் திறமை மீதான களங்கமாகிவிடும். அதற்கான மொத்த கிரெடிட்டும் இயக்குனரையே சாரும்.
தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமையைத் தரும்விதமாகக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது.
சார்லியின் பாடல்களைப் பிரதியெடுக்காமல், கிட்டத்தட்ட அவை உருவாக்கிய உணர்வை ஏற்படுத்த முயல்கிறது கிப்ரானின் இசை. பின்னணி இசையும் அப்படியே.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜயன் சலிசேரி மற்றும் அவரது குழுவின் மெனக்கெடலைப் புரிந்துகொள்ள முடியும். போலவே, விஎஃப்எக்ஸ் குழுவும் மாறாவில் அபாரமாக உழைத்திருக்கிறது.
ஊர் முழுக்க மாதவன் ஓவியம் வரைந்திருப்பதை சாரதா உணரும் காட்சியில், பின்னணி இசையுடன் இணைந்து அந்த பிரமாண்ட உணர்வு நமக்கும் கடத்தப்படுகிறது.
இதுபோன்ற விஷயங்களைப் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கும் இயக்குனர் திலீப்குமார், கேரளாவை ஏன் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை.
பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்களும் மூலக்கதையும் அந்நிலத்தைச் சேர்ந்திருப்பது அதற்கான காரணமாக இருக்கக் கூடும். ஆனால், இதுவே ‘மாறா’வை ஒரு வேற்றுக்கிரகவாசியாக எண்ண வைக்கிறது.
குறைந்தபட்சம் வேதாரண்யம், நாகப்பட்டினம், மணப்பாடு அல்லது கன்னியாகுமரி பகுதியைக் களமாக்கியிருந்தால், நெய்தல் சார்ந்த அத்தனை விஷயங்களும் நமக்கானதாகி இருக்கும். அதைத் தவிர்த்திருப்பதால், சாரதா போலவே மாதவனும் கேரளாவுக்கு டூர் சென்றது போன்றிருக்கிறது.
சார்லியை தமிழில் ‘டப்’ செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
உலகம் பரந்தது எனும் உணர்வு ‘சார்லி’ முழுவதும் பாவியிருக்கும். மாறாக, படைவீரனின் உயிரைத் தன்னுள் கொண்டிருக்கும் மீன் சுழலுக்குள் சிக்கிய கதையாகியிருக்கிறது ‘மாறா’ தரும் காட்சியனுபவம்!
-உதய் பாடகலிங்கம்
18.01.2021 11 : 59 A.M