தமிழர்களைச் சுற்றி எத்தனை புதுப்புதுத் தமிழ்த் தூண்டில்கள்?

சிலருக்குச் சில நேரங்களில் மட்டும் பார்வை துல்லியமாகத் தெரியும்.

அப்படிப்பல கட்சிகளுக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் கரிசனம் ததும்பியிருக்கிறது. தூக்கத்திலிருந்து சட்டென்று கனவு கண்டு கலைந்ததைப் போலத் தமிழைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக தமிழ்க்கடவுள் முருகனைப் பற்றியும், வேலைப் பற்றியும் பேசி யாத்திரை சென்று வந்த ஒரு தேசியக் கட்சி, பொங்கல் நெருங்கியதும் “நம்ம ஊரு பொங்கல்” என்று நினைவு வந்த மாதிரிப் பேச ஆரம்பித்திருக்கிறது.

திரைப்படங்களில் திடீரென்று சிலர் கண் விழித்து சுற்றிலும் மலங்க மலங்கப் பார்த்துவிட்டு வற்றிய குரலில் “இப்போ நான் எங்கே இருக்கேன்?” என்று கேட்பார்களே, அது ஒன்றைத் தான் இதுவரை கேட்கவில்லை.

மற்றபடி அதே ரகம் தான்.

ஜல்லிக்கட்டுக்கு இதே தமிழகத்திலும்  இன்னும் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தினார்களே, நமது இளைஞர்கள். அப்போது இவர்களுக்குத் தமிழ் உணர்வு வந்துவிடவில்லை.

மெரினா உள்ளிட்ட பல இடங்களில் போராடியவர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டு, அதை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனும் அமைத்தார்களே, அப்போதும் தமிழ் உணர்வு வரவில்லை. (அந்த விசாரணைக் கமிஷன் அறிக்கைக்கு என்ன தான் ஆச்சு? அதாவது நினைவிருக்கிறதா?)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடந்து சில உயிர்கள் பறி போனபோதும், காவிரி உரிமைகளை இழந்தபோதும், பல ரசாயன ஆலைகள் எழுந்து இதே தமிழக மக்கள் போராடிய போதும், இப்படி எத்தனையோ பிரச்சினைகளுக்கெல்லாம் வராத தமிழ் உணர்வு தேர்தல் நெருங்குகிற வேளையில் சிலருக்குத் திரும்பியிருக்கிறது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.

தமிழரின் தொல் நாகரீக அடையாளமாக கீழடியில் நடந்த தொல்லியல் ஆய்வுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், இப்போது தமிழை உலகின் மூத்த மொழி என்கிறார்கள். தோளில் துண்டு, இடுப்பில் வேட்டியுடன் வந்து வேல் முழக்கமிடுகிறார்கள்.

முன்பு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த காங்கிரசும் இதற்கு விதிவிலக்கில்லை.

காங்கிரஸ் தமிழினம் மீது கொண்டிருந்த பாசமும், அரவணைத்த விதமும் உலகுக்கே தெரிந்த விஷயம். அதுவும் ஈழமக்கள் நன்குணர்ந்த விஷயம். அறுபதுகளுக்கு முன் இதே காங்கிரஸ் இந்தியைத் திணிக்க முயற்சித்து எம் தமிழர்கள் எத்தனை பேர் பலியான மொழிப்போராட்ட வரலாறெல்லாம் இன்று தமிழ்ப்பெருமை பேசும் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியுமா?

ராகுல் காந்தியும் தன் பங்கிற்கு தமிழகத்திற்கு வந்து மதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டு விட்டு, தமிழ், தமிழர் பெருமை பற்றிப் பேசுகிறார்.

இன்று தமிழர் பற்றிப் பேசும் நீங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் தவிக்கிற எழுவர் விடுதலையை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? பா.ஜ.க. அதில் மட்டும் எப்படி உங்களுடன் ஒரே கோட்டில் பயணிக்கிறது?

சமஸ்கிருதம், இந்தியைத் திணிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களைத் தாங்கிப் பிடிப்பதிலும், காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையில் ஏதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா என்ன?

காங்கிரஸ் விட்டுக் கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் கட்சிகளால் முடியுமா? எத்தனை தமிழ் மீனவ உயிர்கள் கடலுக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றன?

இப்படிப் பல கேள்விகளை எழுப்ப வைத்த கட்சிகள் தான் தற்போது அதே தமிழகத்திற்குள் வந்து தமிழ் அடையாளங்களைப் பற்றிப் பேசுகின்றன.

வந்தாரை வாழ வைத்துப் பெருமை கொண்ட தமிழகம் தான். ஆனால் இதே தமிழர்களுக்குத் தங்களுக்கு முன்னால் புதிதாகத் தமிழ்ப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு வருகிறவர்கள் யார்? இப்போது தமிழை நினைவுகூர்கிறவர்களின் பின்னணி நோக்கம் என்ன? என்பதெல்லாம் தெளிவாகவே தெரியும்.

தமிழகத்தில் புதிதாகத் தமிழ்த் தூண்டில் போடுகிறவர்களுக்கு இருக்கும் நோக்கங்களை தமிழர்கள் அறியாமல் இல்லை!

வேடிக்கை பார்ப்பது வேறு; இரையாவது வேறு!

-யூகி

15.01.2021 12 : 05 P.M

You might also like