கூட்டணியை இறுதி செய்ய ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி பற்றிய முக்கிய அறிவிப்போ, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதிலும், அறிவிப்பதிலும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே இருக்கும் குழப்பத்தையும் கூட்டணி ஆட்சி பற்றிய ஒரு தன்னிலை விளக்கத்தையும் அளிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல கீழ்க்கண்ட தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசுக்கு பாராட்டு.
2. அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்ததை பொதுக்குழு ஏற்கிறது. வெற்றிவாகை சூட கடுமையாக உழைப்போம்.
3. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.
4. இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
5. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு.
6. உலக முதலீட்டாளர்களை ஈர்த்து, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற அரசுக்கு பாராட்டு.
7. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு.
8. நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி.
9. மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு.
10. நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.
11.பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு.
12. நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கும், பல்வேறு விருதுகளை பெற்றதற்கும், தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு.
13. தமிழக மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு.
14. முதல்வர் பழனிசாமியின் நிர்வாக திறமைக்கும், மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாமல், பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சிக்கும் திமுக தலைவர் மற்றும் அக்கட்சியினருக்கு கண்டனம்.
15 கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க பழனிசாமி , பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம்.
16. தமிழகத்தில் தீயசக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்.
09.01.2021 01 : 55 P.M