நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் வெற்றி பெற…!
தொழில் நுணுக்கத் தொடர்: 14
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் இந்தத் துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற்றுள்ளன.
குறைந்த முதலீடு, வீட்டிலிருந்தபடியே ஓய்வு நேரங்களில் பணியாற்றும் வாய்ப்பு, கைநிறைய வருமானம் போன்ற காரணங்களால் இந்தத் தொழில் பலரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1.நிறுவனப் பின்னணி:
நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய நிறுவனம் நீண்ட காலம் செயல்பட்டு வரக்கூடிய பிரபலமான நிறுவனமாக இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனமாக இருந்தால் நல்லது. நீங்கள் இந்நிறுவனத்தில் பொருள்களைச் சந்தைப்படுத்துகிறபோது, நிறுவனத்தின் பெயர் நன்கு பிரபலமாக இருந்தால் அவற்றின் பொருள்களை விற்பது எளிது.
நிறுவனத்தின் தொடங்குநர்கள் முதல் அவர்களின் கிளைகள்வரை அனைத்து விவரங்களையும் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
2.பொருள்கள் விவரம்:
நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை முதல் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும் காப்பீட்டுத் திட்டங்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்து வருகின்றன.
இந்தப் பொருள்களில் உங்கள் மனதுக்குப் பிடித்த பொருள்கள் என்னென்ன, எவற்றுக்குச் சந்தை வாய்ப்பு இருக்கும், விற்கப்படும் பொருட்களின் தரம் என்ன, அவற்றின் பயன்பாடு எத்தகையது, லாப விகிதம் என்ன என்ற தகவல்களையெல்லாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
3.ஆரம்ப முதலீடு:
பெரும்பாலும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஆரம்ப முதலீடு 5 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வரைதான் இருக்கும். முதலீடு குறையக் குறைய அதில் உறுப்பினர்களைச் சேர்ப்பது சாத்தியமாகும். மேலும் இந்த முதலீட்டுத் தொகையில் எவ்வளவு பணம் பதிவுக் கட்டணமாகப் பெறப்படுகிறது, மீதி எவ்வளவு பணத்துக்கு நமக்குப் பொருள்கள் தரப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
4.நெட்வொர்க் முறை:
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான நெட்வொர்க் முறையைப் பின்பற்றுகின்றன. உங்களுக்குக் கீழ் உள்ள சங்கிலியில் 2, 3 அல்லது 4 பேர் என எத்தனை பேரைச் சேர்க்க வேண்டும்? அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை பேரைத் தங்களுக்குக் கீழ் சேர்க்க வேண்டும்? முதல் லெவலுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்? இரண்டாவது லெவலுக்கு எவ்வளவு கமிஷன் என்பன போன்ற பல்வேறு தகவல்களையும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும்.
5.விற்பனைக்குப் பின் சேவை:
ஒரு நிறுவனம் பொருளை விற்ற பிறகு அந்தப் பொருளில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்வதற்கு எப்படிப்பட்ட சேவையை வழங்கும் என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். சாதாரண முக அழகுப் பொருள்களுக்கு இந்த விற்பனைக்குப் பின்னான சேவை அவ்வளவாகப் பொருந்தாது என்றாலும்கூட, மின்னணு சாதனப் பொருள்கள் வாகனங்கள் போன்றவற்றுக்கு இது மிக அவசியம்.
நெட்வொர்க் தொழிலில் சம்பாதிக்க சில அடிப்படைத் தகுதிகள் தேவை.
முதல் தகுதி, கலகல பேச்சு. அடுத்து, ‘காதை மட்டும் காட்டு… எப்படிக் கூறி சம்மதிக்க வைக்கிறேன் என்று பாரு!’ என்னும் குணம் வேண்டும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றோர்தான் இந்தத் தொழிலுக்கான முதல்நிலை வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களுக்கு நல்லது செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்காமல் பொருளை விற்க முடியாது.
அவர்களிடம் வலுக்கட்டாயமாக பொருளை விற்றால், முகதாட்சண்யத்துக்காக அப்போதைக்கு வாங்கிக் கொண்டாலும், பிறகு உங்கள் தொலைபேசி அழைப்பை நிராகரிக்கும் வாய்ப்பும் உண்டு. தொழில் வேறு, உறவு முறை வேறு என்று பிரித்துப் பார்க்கிற தெளிவு வேண்டும்.
அடுத்ததாக, மற்ற தொழில்களைப் போல இவற்றிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மீட்டிங் நடத்துவது, பயணம் செய்வது, பொருள்களை முன்கூட்டியே வாங்கி ஸ்டாக் செய்வது போன்ற முதலீடுகள் அல்லது செலவுகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் அவை எதிர்பார்த்த லாபத்தைத் தராமல் நஷ்டத்தைக்கூட தரலாம்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் வெற்றி பெற்ற பலரும் பின்பற்றுகிற ஒரு தாரக மந்திரம் என்ன தெரியுமா?
‘டார்கெட் த மேக்ஸிமம்… டு கெட் த மினிமம்’
அதாவது நீங்கள் புதிதாக ஐந்து வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 100 பேரையாவது தொடர்புகொண்டு உங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த வேண்டும்.
மற்ற எல்லாத் தொழில்களையும்விட, நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் வெற்றிக்கான வாய்ப்பு விகிதம் குறைவே.
ஆனால், உங்களது வாடிக்கையாளர்கள் உங்களிடம் பொருள்களை மட்டும் வாங்காது, அவர்களும் பொருள்களை விற்கத் தொடங்குவர் என்பதால், உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மிக அதிகம்.
வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டறிவது? சரி 100 பேர், 200 பேர் என பெரிய கூட்டத்துக்கு எங்கே செல்வது?
- அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் என உங்களைச் சுற்றியுள்ள முதல் வட்டத்தில் இருப்பவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
- நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், உறவினரது நண்பர்கள் என உங்களது இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் அடுத்த இலக்கு.
- அன்றாடம் நீங்கள் சந்திக்கக்கூடிய புதிய மனிதர்கள், உங்களுக்கு முகம் தெரிந்தும் இதுவரை பழக்கம் இல்லாத சுற்றுப்புற வீட்டுக்காரர்கள் போன்றவர்கள் மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள்.
- இப்படியாக உங்களது வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே சென்றால், உங்களால் நிறைய நண்பர்களை இனம் காண முடியும்.
இவர்களையெல்லாம் தொழிலுக்கு அழைத்து வரக்கூடிய பேச்சுத் திறன்தான் இத்தொழிலின் மூலதனம்.
இந்தத் தொழிலின் மிகப் பெரிய தேவை விடாமுயற்சிதான். பெரும்பாலானோர் இந்த நிலைகளைக் கடக்க முடியாமல் முதல் வட்டத்தினரைச் சந்திக்கின்றபோதே தன்முனைப்பை இழந்து தோல்வியைத் தழுவி விடுகிறார்கள்.
முதல் ஐந்து பேர் எதிர்மறையாகப் பேசினால், உடனே “இந்தத் தொழில் நமக்கு சரிப்பட்டு வராது” என்று நினைத்து பலர் வீட்டோடு முடங்கி விடுகிறார்கள். தோண்டத் தோண்டத்தான் தங்கம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்தத் தொழிலில் சிலர் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டேயிருப்பர்.
இவர்களோடு நீங்கள் திரும்பத் திரும்பப் பேசி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று, வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்யும் விதத்தைக் காண்பித்தால் ஓரளவு நம்பிக்கை பெறுவர்.
இவர்கள் முதல் வருமானத்தைச் சம்பாதிக்கிற வரை நீங்கள் உடனிருந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் நிச்சயம் இவர்களால் வெற்றி பெற முடியும்.
இந்தத் துறையில் ஈடுபடுவோர் அடிக்கடி சுற்றுப்புறத்தில் உள்ளவர்களது எதிர்மறையான போக்கால் நம்பிக்கை இழந்து விடுவர். எனவே உங்களுக்குக் கீழ் விநியோகஸ்தர்களாகப் பணியாற்றுவோரை வாரத்திற்கு ஒரு முறையாவது கூட்டங்களை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் நீங்கள் அடைந்த வெற்றிகள், உங்களுக்கு மேலே இருப்போர் புரிந்த சாதனைகள், நிறுவனப் பொருட்களின் வித்தியாசமான பயன்பாடு போன்றவற்றைப் பற்றி பேச வேண்டும். சில இலக்குகளைக் கொடுத்து பரிசுகளை அளிக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று நடத்தப்படும் உற்சாகக் கூட்டங்களே, உங்களது நெட்வொர்க்கைத் தக்க வைக்க உதவும்.
எரிபொருள் ஊற்ற ஊற்றதான் வாகனம் ஓடும் என்பதுபோல, நம்பிக்கை கொடுக்கக் கொடுக்கத்தான் நெட்வொர்க் வர்த்தகமும் வளரும்.
(தொடரும்…)
– ராம்குமார் சிங்காரம்
09.01.2021 04 : 45 P.M