நாம் எதையும் எளிதாகக் கடந்து விடுவோமா?

இன்று நம் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் நம் அறிவுலகின் மனச்சாட்சியை உலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அப்படி நம் அறிவுலகம் மாறிவிட்டது.

உலகில் நடந்த மாபெரும் மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் அறிவுஜீவிகள். அறிவு ஜீவிகள் அரசுக்கு அஞ்சுவது கிடையாது. அதேபோல் வாழ்வது அவர்களின் உடலில் அல்ல அவர்கள் உருவாக்கிய கருத்துக்களில். அப்படித்தான் அறிவுஜீவிகள் உலக அளவில் மானுடம் மேம்படுவதற்கான மாற்றங்களுக்காக இதுவரை தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இன்று உலகில் நடக்கும் அவலங்களை அறிவுஜீவிகள் எப்படிக் கடந்து போகின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது, நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. அறிவுலகம் இன்று எந்த அளவுக்கு செயலற்று நிற்கின்றது?

அதற்கான காரணங்கள் என்னென்ன என்று சிந்திக்கும்போது நமக்குத் தெரிவது அறிவுலகத்தின் பின்புலமான கல்வி சிதைக்கப்பட்டிருப்பது என்பதுதான்.

எந்தச் சமூகத்தையும் நீங்கள் சீரழிக்க விரும்பினால், அதன் கல்வியில் கை வையுங்கள், அந்தச் சமூகம் சீரழிந்துவிடும். அடிப்படை மாற்றங்களை உருவாக்கத் தேவையான மனிதர்களைத் தயார் செய்வது கல்விக் கழகங்கள்தான். அதைச் சிதைத்துவிட்டால், அந்தச் சமுதாயமும் சிதிலமடைந்துவிடும்.

இதன் விளைவைத்தான் இன்று நாம் நம் சமூகத்தில் அன்றாடம் பார்த்து வருகின்றோம். நாம் கல்வியில், விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளோம் என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில் இந்தக் கல்வியால், அறிவியலால் தொழில் நுட்பத்தால் மானுடம் சந்திக்கின்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதா என்பதுதான் அடிப்படையான கேள்வி.

இந்தக் கல்வியும், அறிவியலும், தொழில் நுட்பமும் யாருக்கு பயனளித்திருக்கிறது என்று பார்த்தால், அது பெரும்பான்மைச் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வணிகத்தில் லாபம் ஈட்டிப் பிழைப்பு நடத்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த அறிவுலகத்தினரும் லாபம் ஈட்டும் வாழ்வியல் செயல்பாட்டை நோக்கி வேகமாகப் பயணித்து வருகின்றார்கள்.

இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 30 கோடி. அந்த 30 கோடி மக்களில் 80 சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்தனர். கிராமப் புறங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயத்திலும், சிறுகுறு தொழில்களிலும், குடிசைத் தொழில்களிலும்தான் இயங்கி வந்திருக்கிறது.

அந்தக் கிராம மக்களின் வாழ்க்கை என்பது அம்பேத்கர் கூறியதைப்போல, மூட நம்பிக்கைகளிலும், ஜாதிய கட்டுமானங்களிலும், ஏற்றத்தாழ்வு மிக்க, சமூகக் கட்டுப்பாடுகளுக்குள்ளும், அறிவியலை மறுத்த சமூக பழக்க வழக்கங்களிலும்தான் இருந்து வந்துள்ளது.

அதை மாற்றி ஒரு மாதிரி கிராம வாழ்வு முறையை, இந்திய நாகரிகத்தின் பின்புலத்தில் உருவாக்கி உலகுக்கே வழிகாட்ட வேண்டும் என்ற கிராமிய வாழ்வுக்கு அடித்தளமிட்டவர் மகாத்மா காந்தி. எனவே கிராமப் புனரமைப்பு என்பதுதான் சுதந்திர இந்தியாவின் முதன் பணி மற்றும் முக்கியப் பணி.

அந்தப் பணியையும் எப்படிச் செய்ய வேண்டுமென்றால், எவ்வளவு தியாக உணர்வுடன் பொதுமக்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று பணி செய்தார்களோ, அதே தியாக உணர்வுடன் பொதுமக்களின் பங்கேற்புடன் எல்லா சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளும் நடைபெற வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம் கிராமத்து மக்களுக்கு முதலில் ஒரு மரியாதை கிடைக்கும், அடுத்து ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இந்தச் செயல்பாடுகளுக்கான ஒரு கல்விதான் பிரதானமாக இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி எண்ணினார்.

அந்தக் கல்வி 80 % வாழும் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியமான வாழ்விற்கும் தேவையான அறிவு, ஆற்றல் திறன், அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவைகளை உருவாக்கும் ஒன்றாக நம் கல்வி முறை உருவாக வேண்டும் என பெருமுயற்சி எடுத்தார் காந்தி.

அந்தக் கல்விதான் இந்திய மக்களின் மேம்பாட்டுக்கான ஆதாரக்கல்வி, அதுதான் புதிய கல்வி என அனைத்து காந்திய கல்விச் சிந்தனையாளர்களும் எண்ணினர். ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக நம் கல்வி முறையை மேற்கத்தியப் பாணியில் வடிவமைத்து தொழிற்சாலைகளுக்கும், இந்திய அரசாங்க அலுவலகங்களுக்கும் வேலையாட்களையும் சிப்பந்திகளையும் உருவாக்கிடும் ஒரு கருவியாக கல்வியை வடிவமைத்து விட்டனர் நம் தேசக் கட்டுமானத் தலைவர்கள்.

இதன் விளைவு ஒட்டுமொத்த கிராம மேம்பாட்டை புறம் தள்ளி பொருளாதார மேம்பாட்டுக்கு உழைத்திட, பணியாட்களை கிராமங்களிலிருந்து கல்வியின் மூலம் தயாரித்து தொழிற் சாலைகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் வழங்குவதை பணியாகக் கொண்டிருந்தது நம் கல்வி.

வெள்ளையர் சுரண்டிவிட்டுப் போடப்பட்ட கிராமங்களை நகர மேம்பாட்டுக்காக தொடர்ந்து சுரண்டும் பணி ஆரம்பித்து நடத்தப்பட்டது சுதந்திர இந்தியாவில் மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்க அமைப்புக்களாலே என்பதுதான் பெரும் சோக நிகழ்வு.

அதன் விளைவு கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிராம மேம்பாடு என்பது கிராமத்திலிருந்து நகரங்களுக்குச் சென்று படித்து விட்டு, நகரங்களில் குடியேறுவது என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இதன் விளைவு கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழ்ந்து, அங்கு வாழ்வாதாரத்தை பாதுகாத்து, சமூகப் பழக்க வழக்கங்களுடன் ஒரு சுரண்டல் மற்றும் ஆதிக்க வாழ்க்கை முறையில் வாழ்வது என்ற சூழலுக்கு கிராமங்கள் தள்ளப்பட்டன. கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைமுறை பற்றிய அடிப்படை பொது விழிப்புணர்வு கூட இல்லாமல் வாழ வைத்துள்ளதற்குக் காரணம் – மக்களுக்கான கல்வி உருவாக்கப்படாததுதான்.

அந்தக் கல்விதான் கிராமியக் கல்வி. அந்தக் கல்வியில் மக்கள் சுகாதாரம் பேணுதல், வாழும் இடத்தை தூய்மையாக வைத்து வாழத் தேவையான ஒரு விழிப்புணர்வு பெறுதல், கிராம வளங்களை பாதுகாத்து, மேம்படுத்தி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், தேவை அடிப்படையில் இயற்கையுடன் இணைந்து, ஒரு வாழ்வியல் முறையை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவை அடிப்படையாக இருந்தன.

அதேபோல் கிராமங்களில் இருந்த கைவினைஞர்களின் திறன் வளர்க்கப்பட்டு, கிராமத் தொழில்களை மேம்படுத்தி கிராமப் பொருளாதாரத்தை வளர்க்கத் தேவையான ஆற்றலும் செயல்பாடுகளும் இந்தக் கல்வியில் இருந்தன.

கிராமங்களில் இருந்த கலைகள், இலக்கியங்கள் அனைத்தையும் வளர்க்கத் தேவையான முன்னெடுப்புக்களும் இந்தக் கல்வியில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தக் கல்வி முன்னெடுக்கப்படவில்லை. அந்தக் கல்வி அனாதையாக்கப்பட்டு விட்டது, அதுவும் காந்தி மண்ணில் என்பதுதான் அடுத்த பெரும் சோக நிகழ்வு.

இதற்கு எதிர்மறையான கல்வித் திட்டம் நம் நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததன் விளைவு நாமே நம் கிராமங்களைச் சுரண்டுகிறோம் என்ற உணர்வற்று கிராமங்களை தொடர்ந்து சுரண்டும் சூழலை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருப்பது.

கிராமங்கள் ஒரு சுரண்டல்முறைப் பொருளாதாரத்தால் தன் சுதந்திரம் இழந்து நகரத்தில் இருப்பவர்களுக்கு உழைத்திடும் சூழல் தான் சுதந்திர நாட்டில் அரசாங்கத்தின் திட்டங்களால் உருவாக்கப்பட்டது என்பதுதான் அடுத்த கசப்பான உண்மை.

கிராமங்களில் இருந்த வளங்கள் மனித வளம், இயற்கை வளம், தொழில் வளம், இலக்கிய வளம், அனைத்தும் புறந்தள்ளப்பட்டன. அவைகளெல்லாம் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்துவிட்டன. அதன் விளைவாக, சுகாதாரமற்ற, சூழலில் கிராம மக்களை வாழ வைத்துவிட்டன நம் அரசாங்கங்கள். கிராமப் பொருளாதாரம், வாழ்வாதாரமாக மாறிவிட்டது.

மக்கள் அமைப்புக்கள் அனைத்தும் அடியோடு தகர்க்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் கிராம மேம்பாட்டுக்கான திட்டங்கள் என 50 ஆண்டு காலத்தில் 2000-க்கு மேற்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி, கிராமங்களில் பல கட்டுமானங்களை உருவாக்கி பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தின நம் அரசாங்கங்கள்.

ஆனால் மக்களின் பொருளாதார மேம்பாட்டை அனைத்துத் தரப்பினருக்குமானதாக இங்கு கொண்டுவர முடியவில்லை. வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியவில்லை. அதன் விளைவு கிராம மக்கள் நகரங்களுக்கு புலம் பெயர ஆரம்பித்தனர்.

நகரங்களுக்கு குடிபெயர்ந்த மக்களும் நகரங்களில் ஆரோக்யமான வாழ்க்கையை வாழ இயலாமல் நகரங்களில் குப்பங்களையும், சேரிகளையும் உருவாக்கி வாழத் தொடங்கினார்கள். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்களும் நகர்வாழ் மக்களுக்கு உழைப்பதற்கான சுரண்டல் முறை வாழ்க்கையைத் தான் வாழ அனுமதிக்கப்பட்டனர்.

கிராம மக்களுக்கு தூய குடிநீர் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அனைத்துக் குடும்பங்களுக்கும் கழிப்பிட வசதி இல்லை. ஆரோக்யமாக வாழத் தேவையான வசிப்பிட சுகாதாரம் பேணப்படவில்லை. அதற்கான விழிப்புணர்வோ, அறிவோ வளர்த்தெடுக்கப்படவில்லை.

தேக ஆரோக்கியம் பேணுதலுக்கான பொது விழிப்புணர்வும் அறிவும் கொடுக்கப்படவில்லை. உடலுக்குத் தேவையான உணவு என்ற புரிதல் இல்லாது பசிக்கும், நாவிற்கும், குடலுக்கும் உணவு என்ற நிலையில் உணவு தயாரித்து உட்கொண்டு வாழ அனுமதிக்கப்பட்டனர்.

உணவுக்கான புரிதல், அதற்கான விழிப்புணர்வற்று மக்கள் வாழ பழக்கப்படுத்தப்பட்டனர். பெண்கள் உடல் நலம், பேறுகாலக் கவனிப்பு, கற்பகாலக் கவனிப்பு, குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் அறிவியல் அடிப்படையில் நடக்க வைக்காத சூழலில் மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.

கிராமக் கைவினைஞர்களின் நிபுணத்துவம் அழிக்கப்பட்டது. அதன் விளைவு கிராமத் தொழில்கள் மறைந்தன. நகரமயமாதலின் நவீனமயமாதலின், தொழில்மயமாதலின் தாக்கங்கள் கிராமத்தைப் புரட்டிப் போட்டன. கிராமத்தில் வசிப்போர் அனைவரும் அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவோராக தயார் செய்யப்பட்டு விட்டனர்.

இன்றும் கூட உலகமயப் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு கிராமங்களின் வளம் சுரண்டப்படுகிறது. தண்ணீர், மணல் அனைத்தும் சுரண்டப்பட்டு பெருவணிகம் நடைபெறுகிறது. இதில் லாபம் ஈட்டுபவர்கள் யார்? கிராமத்து மக்களா? கிராம வாழ்க்கையை மட்டும் இந்தியாவில் நாம் சீரழிக்கவில்லை. கிராமத்து அடையாளங்களையும் கூடவே சீரழித்து விட்டோம்.

இதற்கு மிக முக்கியக் காரணம் கிராமத்துக்கான கிராமியக் கல்வி உருவாகாததே. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நம் அறிவுலகம் கடந்து செல்கிறது. சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமைப் பிரச்சினை, அனைவர்க்கும் வாழ்க்கைக்குத் தேவையான சிறிய வீடு, தூய்மையான வசிப்பிடம், ஆரோக்கியம் பேண தேவையான விழிப்புணர்வு, விவசாயத்திற்குத் தேவையான தொழில் நுட்பம், விளைந்த பொருள்களை சந்தைப்படுத்த முறையான அமைப்புக்கள், இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பனவையெல்லாம் இன்றும் விவாதங்கள்தான்.

இவைகளெல்லாம் தீர்க்கப்பட கிராம மேம்பாட்டுக்கான கிராமயக் கல்வி இந்த நாட்டில் உருவாகாதவரை கிராமங்கள் அழிவினை நோக்கிச் செல்வதைத் தடுக்க இயலாது.

ஆனால் இதனையும் நம் அறிவுலகம் கடந்து செல்லும். ஏனென்றால் அது நகரத்தில் வாழ்கிறது.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

08.01.2021  12 : 33 P.M

You might also like