சாரதா டீச்சரின் நினைவலைகள்!
லட்சியவாதியுடன் குடும்பம் நடத்துவதும், நடுத்தொண்டையில் விஷத்தை வைத்திருப்பதும் ஒன்றுதான். விழுங்கவோ விலக்கவோ முடியாத விபரீத சூழல் அது. சாரதா டீச்சர், மூன்றுமுறை கேரள முதல்வராயிருந்த ஈ.கே.நாயனாரின் மனைவி.
நாற்பத்தி எட்டாண்டுக் காலம் நாயனாருடன் தோழமைப் பூண்ட அவர், தம்முடைய கடந்தகால நினைவுகளை அப்பட்டமான அன்புடன் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘நினைவுகளில் என் இனிய தோழர்: ஈ.கே. நாயனார்’ என்னும் நூலை, ‘பாரதி புத்தகாலயம்’ தந்திருக்கிறது. மு.சுப்ரமணி, மலையாளத்திலிருந்து தமிழில் பெயர்த்திருக்கிறார்.
நெகிழ்ச்சியும் புகழ்ச்சியுமாக இருக்குமென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், நூலின் சரடோ என்னை நொறுக்கித் தள்ளியது. சராசரி பெண்ணுக்குக் கிடைக்கும் எந்தவித சந்தோசங்களையும் சாரதா டீச்சர் அனுபவிக்கவில்லை.
புரட்சிகர எண்ணமுடைய ஒருவருக்குத் தோழராக இருந்த ஒற்றைச் செய்தியை மட்டுமே திரும்பத் திரும்ப நினைவூட்டி மகிழ்கிறார். தங்கை, தாய் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணத்திற்குக்கூட வரமுடியாத ஓர் இடதுசாரித் தலைவனை, கண்ணீர் மல்கும் வாக்கியங்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான நாயனார், ஒரு குழந்தையின் பிரசவத்திலும் உடனிருக்க முடியவில்லையே என வருந்தியிருக்கிறார். தலைமறைவு வாழ்க்கையின் தாத்பர்யங்களைப் புரிந்தவராகவும் தெளிந்தவராகவுமே அவர் தோழரை நேசித்திருக்கிறார்.
மரணம் சம்பவித்துவிடுமோ என அஞ்சிய நொடியில் ‘புரட்சி ஓங்குக’ என நாயனார் முழங்கியதைக் கவனித்திருக்கிறார். நள்ளிரவில் பூச்செடியுடன் வீட்டுக்கு வந்த அவர், அப்பொழுதே அச்செடியை நட்டுவைக்க துடித்த துடியைச் சொல்லியிருக்கிறார். அந்தச் செடிகளே தற்போது மரங்களாகி மணமும் நிழலும் பரப்புவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
4009 நாள் ஆட்சியில் முதல்வராய் இருந்தவர், ஒரே ஒருமுறைதான் குடும்பத்துடன் சேர்ந்து பயணித்திருக்கிறார். மூன்றாவது முறை பதவியேற்பின்போது மட்டுமே அவ்விழாவில் குடும்பத்தைப் பங்கெடுத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.
பதவியை விடவும் கட்சியின் வளர்ச்சியும், வெகுமக்களின் பேரன்புமே பெரிதெனக் கருதிய நாயனாரின் ஆட்சித் திறம் குறித்தெல்லாம் பேசவில்லை. லட்சியவாதிகளின் தனிவாழ்க்கை, சமூக குணநலன்களைப் பிரதிபலிப்பதல்ல.
விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாயனாருக்கு இருந்த தெளிவுகளையும் அக்கறைகளையும் தெரிவித்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர்களுடன் அவருக்கிருந்த அன்பையும், அவர்களுக்குத் தோழர் மீதிருந்த மதிப்பையும் உவகையுடன் உணர்ந்திருக்கிறார்.
‘விருந்தாளியைப் போலாவது அவ்வப்போது வீட்டுக்கு வந்து போங்கள்’ என்று நாயனாரிடம் அவர் கெஞ்சிய இடங்களில் தோழமைப் பூக்கிறது.
போராட்டக் காலங்களில் பீடியும் தேநீருமாகப் பொழுதைக் கழித்தவர், மரணப்படுக்கையில் ‘ஒரே ஒரு பீடி கொடு சாரதா’ எனக் கேட்டபோது உடல்நிலைக் கருதி கொடுக்காமல் விட்டுவிட்டேனே எனவும் குமுறியிருக்கிறார்.
‘அந்தப் பீடிக் கட்டுகளை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன், அதைப் பார்த்துத்தான் தோழரின் நினைவுகளை மீட்டுக் கொள்கிறேன்’ எனுமிடத்தில் உடல் சில்லிட்டது.
காடுகளிலும் மலைகளிலும் புரட்சிகர எண்ணங்களுடன் சுற்றித் திரிந்த ஒருவர், ஆட்சிக்கு வந்தபின்பு தம்மைப் பாதுகாத்த மக்களுக்கு என்னென்ன செய்ய எண்ணினார் என்பதைச் சொல்லாமலில்லை.
‘பகவானுக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு’ என்று நாயனார் ஒருமுறைப் பேசப்போக அதனால் எழுந்த சர்ச்சனைகளையும், நாயனாரின் அஸ்திக் கரைப்புக்கு எழுந்த எதிர்வினைகளையும் நேர்மையுடன் பதிந்திருக்கிறார்.
லட்சியவாதிகளின் மனைவியர், லட்சியவாதிகளைவிட தியாயத் தளும்பேறியவர்கள். ஓர் அம்மாவாகவும் தோழராகவும் சாரதா டீச்சரை வியக்கலாம்.
ஓர் ஆண் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் பொழுதுவாழ்வை நடத்திச்செல்ல அவனுக்கு வாய்த்தப் பெண் துணையே முதன்மைக் காரணம்.
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’
-என்ற குறளின் வாழ்வியல் எடுத்துக்காட்டாக சாரதா டீச்சர் வாழ்ந்திருக்கிறார். பெண்ணென்னும் பெரும் சக்தியே ஆணை இயக்குகிறது.
வாழ்வை வெல்வதற்கு உற்ற தோழமை ஒன்றுபோதும். கல்யாச்சேரியில் சாரதா டீச்சர் கட்டிய நாயனாரின் வீட்டுக்கு ஒருமுறை போய்வரலாம் என்றிருக்கிறேன். சாரதாக்கள் இல்லாமல் இலட்சிய பயணங்கள் ஈடேறுவதில்லை. இன்றும் காலைச் சூரியன் ஒளிர்கிறது.
நன்றி: யுகபாரதி முகநூல் பதிவு
07.01.2021 2 : 50 P.M