கண்ணதாசன் செய்த மிகப்பெரிய ரசவாத வித்தை!

“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…”

-என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை.

எல்லா உறவுகளையும் தாண்டி கணவன் மனைவிக்குள் உள்ள நெருக்கத்தை, அன்பை, முக்கியத்துவத்தை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். தாம்பத்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றளவும் எடுத்துக்காட்டு இந்தப்பாடல்தானே?

“காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனைத் தாங்கி

வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி

ஆலம் விழுதுகள்போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன

வேரென நீயிருந்தாய்
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”

-என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் அந்த உறவுக்குள் இருக்கும் நம்பிக்கையும் நேசமும் வெளிப்படும். சிவாஜிகணேசனும், பத்மினியும் தங்களுடைய அற்புதமான நடிப்பால் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.

பாடலின் இறுதிக்கட்டத்தில்… ‘என் தேவையை யாரறிவார்…’ என்று ஒரு சிறிய இடைவெளி வரும். பத்மினி இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் அவ்வளவுதானா… என்பது போல் ஓர் ஏமாற்றப் பார்வையை வீசுவார்…

அந்தப் பார்வையில் அவ்வளவு கேள்விகள் இருக்கும். ‘உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று பாடலை நிறைவு செய்வார் கவியரசர்.

இந்த வரிக்குப் பொருத்தமாக வேறு எந்த வரியையும் நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. சிவாஜி அந்தக் கடைசி வரியைப் பாடி முடித்ததும்… பத்மினியின் முகத்தில் தோன்றும் நிம்மதியும் பெருமிதமும் நிறைவும் நம்மையும் ஒட்டிக்கொள்ளும்.

– நன்றி: முகநூல் பதிவு

06.01.2021 03 : 55 P.M

You might also like