இன்று நாம் எங்கேயாவது ஒரு பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தால் இந்தப் பாடலைப் பாடியது எஸ்.பி.பாலசுப்ரமணியமா அல்லது மனோவா என்று யோசித்தால் அதற்குச் சரியான விடை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். அந்த அளவிற்கு இவர்கள் இருவரது குரலும் ஒத்துப்போகும்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் மனோ சினிமாத்துறையில் நடிப்பதற்காகத் தான் முதன்முதலில் சென்னை வந்தார்.
பின்பு ஒரு தெலுங்குப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அந்த கதபாத்திரத்திற்கு உண்டான பாடலைப் பாடுவதற்காக எஸ்.பி.பி வர முடியாத நிலையில் தானே அந்தப் பாடலைப் பாடிக் காட்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.வி இவரது குரலைப் பரிசோதித்து பின் அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
இப்படித்தான் பின்னனிப் பாடகராக மனோ சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார்.
அதன்பின் இவரது குரல் வளத்தினை இளையராஜா அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “செண்பகமே” பாடலும், “மதுரை மரிக்கொழுந்து” பாடலும் இவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.
அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹிட் பாடல்களைப் பாடிய மனோவிற்கு உலகளவில் புகழ் பெற்றுக் கொடுத்தது ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற “முக்காலா“ பாடல்தான்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்காக மனோவைத் தேர்ந்தெடுத்த நிலையில் ஏதேனும் புதுவிதமாக ஆரம்பிக்கும்படி கூறியிருக்கிறார்.
மனோவும் பிரபல பாடகர்களான கண்டசாலா, டி.எம்.எஸ் போன்றோரின் குரல்களை மனதில் வைத்து சில மாடுலேஷனில் பாட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதில் திருப்தியில்லை.
எனவே வேறு எப்படிப் பாடுவது என டீ குடித்துக் கொண்டே யோசித்தவருக்கு இந்திய சினிமாவின் ஆல் டைம் ஹிட் படமான ‘ஷோலே’ படத்தில் ஆ.டி.பர்மன் பாடிய ‘மெஹபூபா’ பாடல் நினைவுக்கு வந்திருக்கிறது.
மீண்டும் ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘ஷோலே’ பாடலை அடிப்படையாக வைத்து ‘ஓலே ஒலே’ என்று ஹம்மிங் பாட ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்துப் போய்விட்டது.
உடனே மளமளவென ரெக்கார்டிங்கைத் துவக்கி பின் மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார்.
சில நாட்களுக்குப் பிறகு மனோவிடம் இந்தப் பாடலைப் போட்டுக் காட்டிய ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையைப் பார்த்து மனோ மெய்சிலிர்த்து விட்டாராம்.
படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.
– நன்றி: முகநூல் பதிவு