எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பற்றையும் ஈடுபாட்டையும் நன்கறிந்தவர், அவருடன் நன்குப் பழகிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள்.
அவர், தமிழுக்கென்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
சிறிதும் தயங்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
உடனே, அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கு கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களையே தலைவராக நியமித்தார்.
1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டது.
ஒரு மொழிக்கென, பல்கலைக்கழகம் தொடங்கும் மரபு இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவி வருகிறது.
மொழிக்கெனத் தொடங்கப்பட்டப் பல்கலைக் கழகங்களை ஒப்பிட்டு நோக்கினால் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தனித்தன்மையும் சிறப்புகளும் புலப்படும்.
பெரும்பாலான மொழிப் பல்கலைக் கழகங்கள், குறிப்பாகச் சமஸ்கிருதத்தைப் பரப்பும் நோக்கோடு அமைக்கப்பட்டுள்ளன.
அவை தொடக்கத்தில், சமஸ்கிருத பயிற்றுக் கூடமாக, பள்ளிகளாக, கல்லூரிகளாக இருந்து மிகவும் பிற்பட்டக்காலங்களில் நிகர்நிலை பல்கலைக் கழங்களாக மாறியுள்ளன – மாற்றப்பட்டுள்ளன.
அவையும், ஒரு தனிநபரின் பெயரில், அல்லது ஓர் அமைப்பின் பெயரில் இயங்குகின்றன.
எடுத்துக்காட்டாக, ராஜஸ்தான் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம், சங்கராச்சாரியார் பல்கலைக் கழகம் என வழங்கப்படுகின்றன.
இவ்வாறு இந்தியாவில் ஏழு சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ளன.
ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில், தரம்வாய்ந்த, உயராய்வு மையங்களாக, ஆய்வு நிறுவனங்களாகத் திகழும் மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நிகராக 1981-ல் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இயங்குகிறது.
மொழிக்கெனத் தொடங்கப்பட்டத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டப் பின்னர் அதனை எம்.ஜி.ஆரின் நண்பர் என்.டி.இராமராவ் ஆந்திராவில், 1985-ல் ‘பொட்டி ஸ்ரீஇராமுலு தெலுங்கு பல்கலைக் கழகம்’ தொடங்கினார்.

அதைப்போல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் பின்பற்றி, 1992-ல் கன்னடப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
பின்னர், 2012-ல் துஞ்சர்த எழுத்தச்சன் மலையாள மொழி பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டுள்ளது,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடங்குவதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் கொண்டாரோ அதைவிடச் சிறப்பாக, அதை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் முழுமையாக ஈடுபட்டார்.
பல்கலைக் கழகம் எங்கே தொடங்கலாம் என்ற வினா வந்தபோது, சென்னையில் தொடங்கலாம் என்பவர்களின் கருத்தை மறுத்து,
“இது தமிழ்ப் பல்கலைக் கழகம். எனவே, தமிழ் மொழி, கலை, பண்பாடு முதலியவற்றைப் பாதுகாத்து வளர்த்து வளப்படுத்திய, பாரம்பரிய பெருமைக்குரிய சோழர்களின் தலைநகரமாகிய தஞ்சையில் தான் தொடங்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.
ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தவர்கள் 100 ஏக்கர் நிலம் வேண்டினர். எம்.ஜி.ஆர் அவர்கள் 1000 ஏக்கர் நில ஒதுக்கீடு செய்தார்.
கட்டடம் கட்டத் தொடங்கும் முன்னர், கட்டட வரைவு படத்தைத் தம்மிடமும் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே, பணி தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன்படி, கட்டடக் கலை வல்லுநர்களை அழைத்து அவர்களிடம், முகப்புக் கட்டடம், சோழ மரபுக்கேற்ப, கோபுரங்களுடன் அமைய வேண்டும்.
அதைச்சுற்றியுள்ள பல்வேறு துறைகளின் கட்டடங்கள் ‘தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஓர் எழுத்து வீதம் 5 கட்டடங்கள், 5 எழுத்துக்களில் கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டு, அதன் படத்தைப் பார்த்தபின் ஒப்புதலளித்தார்.

பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது வேண்டியோர், வேண்டாதவர் என்று பார்க்காமல், நேர்மை, உண்மை, நாணயம், ஒழுக்கம், உழைப்பு, தமிழ்ப் புலமை ஆகியவற்றிற்கு எடுத்துக் காட்டாய்த் திகழும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
எம்.ஜி.ஆர் விரும்பியவாறே, அகில இந்திய அளவிலும், மேலை நாடுகளிலும் தம் மொழி மற்றும் மொழியில் புலமையால் புகழ்பெற்ற (Reputed scholar) கேரள பல்கலைக் கழகத்தில், தமிழ் மற்றும் தமிழியல் துறையின், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேரா. வ.அய்.சுப்பிரமணியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றளவிலும் அவருக்கு இணையாக இன்னொருவரைப் பார்க்க இயலவில்லை. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்று வரையிலும் யாராலும் பூர்த்தி செய்ய இயலவில்லை.
பேராசிரியர் ம.செ.ரபிசிங் தொகுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு நூலிலிருந்து.
