‘அட!’
இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் நீங்கள் இப்படிச் சொல்லலாம். அடடே என்றுகூட வியப்படையலாம். சரி… பதிவுக்குள் போகலாம்.
அந்தப் பெண்ணின் பெயர் அடா பிளாக்ஜேக். வயது வெறும் 23 தான். இனுபியாக் என்ற எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்த பெண் அவர்.
மகன் பென்னட்டுக்கு எலும்புருக்கி நோய் ஏற்பட்ட நிலையில் அதற்கு பண்டுவம் பார்க்க அடாவின் கையில் பணமில்லை.
அதனால், ஆர்ட்டிக் பகுதியில் சைபீரியாவுக்கு வடக்கே உள்ள ராங்கல் தீவுக்குப் புறப்பட்ட ஒரு பயணக்குழுவில் சமையல்காரியாக அவர் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் 50 டாலர் சம்பளம்.
அந்தக் குழுவில் விக்டோரியா என்ற பூனை உள்பட மொத்தம் 6 பேர் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களில் 4 பேர் ஆண்கள். அடாவும், விக்டோரியாவும் பெண்கள்.
ராங்கல் தீவுக்குப் போய் அதை எப்படியாவது பிரிட்டன் அல்லது கனடாவுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதுதான் பயணக்குழுவின் நோக்கம். இந்தக் குழு ராங்கல் தீவுக்குப் போய்ச் சேர்ந்தது.
உணவுப்பொருள்கள் தீர்ந்து போன நிலையில், உதவிப் பொருள்களுடன் வரவேண்டிய கப்பல் எதுவும் அந்த தீவுக்கு வரவே இல்லை.
1923ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குழுவில் இருந்த 3 ஆண்கள், பனியால் உறைந்து போயிருந்த சுக்சி கடலைத் தாண்டி சைபீரியாவுக்குப் போய் உதவி கேட்டு வருவதாகப் போனார்கள். போனவர்கள் போனவர்கள்தான். வரவே இல்லை.
அடாவுடன் இருந்த லோரின் நைட் என்பவர் ஸ்கர்வி நோய்த் தாக்கி அதே ஆண்டு ஜூன்மாதம் இறந்து போனார்.
இப்போது அந்த பனித்தீவில் அடாவையும், விக்டோரியா பூனையையும் தவிர யாருமில்லை. பனி, குளிர், பசி, பட்டினி, மனிதர்கள் அற்ற தனிமை.
அடா பயப்படவில்லை. ஆபத்து நிறைந்த நெருக்கடியான சூழ்நிலையில், உயிர்வாழும் திறமை அவரது எஸ்கிமோ இனத்து மரபணுவில் இருந்தது.
முன்பின் பழக்கம் இல்லாவிட்டாலும் அவர் துப்பாக்கியையும், தூண்டில் முள்ளையும் பயன்படுத்தினார். பொறி வைத்து ஆர்ட்டிக் நரிகளைப் பிடித்தார். பனியை உருக்கி நீராக்கினார்.
ஆர்ட்டிக் பெர்ரி பழங்கள், கடல் பாசி, மீன் சினை, சீல் விலங்கின் கொழுப்பு. இவற்றை அவருக்கும், அவரது பூனைக்கும் உணவாக்கினார்.
தனிப் பெண்ணாக படகு ஒன்றையும் அவர் கட்ட முயன்றார். நோய்வாய்ப்பட்ட மகனின் நினைப்பும், பூனையின் துணையும் அவரை உறுதியுடன் உயிர் வாழ வைத்தது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி ஓடிய நிலையில், 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம்தேதி ஒரு மீட்புக்கப்பல் அவரைத் தேடி வந்து மீட்டது. (என்னப்பா. இவ்வளவு லேட்டா வர்றீங்க?)
அடா அவரது மகன் பென்னட்டை சியாட்டில் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பிறகு 85 வயது வரை அவர் உயிர் வாழ்ந்தார்.
ராபின்சன் குருசோ போல எத்தனையோ ‘கேஸ்ட் அவே’ (Cast Away) கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம்.
ஆனால், அடா பிளாக்ஜேக்கின் கதையை இதுவரை கேட்டிருக்கிறோமா?
இது ஒரு பெண்ணின் சாகசக் கதை என்பதால் யாரும் இந்தக் கதையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை போலிருக்கிறது.
அடாவின் கதையைக் கேட்டபிறகு ‘அட’ என்பீர்களா? ‘அடடே’ என்பீர்களா? சும்மா சொல்லுங்கள்.
– மோகன ரூபன் முகநூல் பதிவு
