தவெகவில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக!

தவெக எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய், சில மாதங்களில் விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு நடத்தி, பிரதான அரசியல் கட்சிகளை அதிர வைத்தார்.

அந்த மாநாட்டில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்’ என விஜய் அறிவித்தார்.

அவரது தூண்டிலில் எந்தக் கட்சியும் சிக்கவில்லை. இதனால் வேறு வழி இன்றி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்தார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி என எந்த முதலமைச்சரும் இரண்டு இடங்களில் போட்டியிட்டதில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு காங்கேயம், பர்கூர் என இரு தொகுதிகளில்  போட்டியிட்டார். அதன் பிறகு இரு இடங்களில் போட்டியிடும் கட்சித் தலைவர் விஜய்தான்

திமுகவில் இப்போது, அதிமுக முன்னாள் வி.ஐ.பி.க்கள் ஆதிக்கம் இருப்பது போல், தவெகவில் அதிமுக ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் நேற்று அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் ஜே.சி.டி.பிரபாகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், தூசி மோகன், வி.எஸ்.பாபு ஆகியோர் குறிப்பிடத்தக்க வி.ஐ.பி.க்கள்.

அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷுக்கும் எம்.எல்.ஏ. சீட் கொடுத்துள்ளார் விஜய்.

தனபால் ஜெயித்த ராசிபுரம் தொகுதியில் லோகேஷ், தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவெக வேட்பாளர் தேர்வில் ஒரு முக்கிய விஷயத்தைம் இங்கே குறிப்பிட வேண்டும்.

விஜய்யிடம் கார் ஓட்டுநராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இப்போது விஜய்யின் உதவியாளராக அவரது நிழல்போல இருப்பவர்.

அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்ட நிலையில், தனக்கு வயதாகிவிட்டதாக கூறி ராஜேந்திரன் மறுத்ததால், அவரது மகன் சபரிநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினார் விஜய்.

தற்போது சபரிநாதன் விருகம்பாக்கம் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரு முனைப் போட்டிதான்:

தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என வேட்பாளர் பட்டியலை அறிவித்த விஜய் பிரகடனம் செய்தார். அதோடு வழக்கம் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்தார்.

விஜய் பேச்சின் சுருக்கம்:

“இந்தத் தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி.

உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போல, கிழிந்த துணியை தைத்து வைத்தது போல திமுக கூட்டணி ஒரு ஒட்டு போட்டக் கூட்டணி.

எனவே உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் விசில் சின்னத்தில் பதிவிடுங்கள்.

இது பாமரர்களுக்கும், ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் செய்யும் அடிமைகளுக்கும் நடக்கும் தேர்தல். இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

இந்தத் தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like