பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், முணுமுணுக்கிறவர்களுக்கிடையில் கண்ணீருக்கும் சிரிப்புக்கும் இடையில், பிரதான கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்திருக்கிறது.
கூட்டணி முடிவாவதற்குள் தொலைக்காட்சி ஊடகங்கள், இத்தகைய தொலைக்காட்சி சீரியல்கள் கண்கலங்க வைக்கும் செண்டிமென்ட் காட்சிகளை விட பல காட்சிகளை நேரலைகளாக ஒலிபரப்பிப் பார்வையாளர்களை கதி கலங்க வைத்துவிட்டன.
தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதற்கு இன்னும் ஏறத்தாழ ஒரு வாரங்கள்தான் இருக்கின்றன.
அதற்குள் கூட்டணிக்குள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளைக் கூட்டணி தர்மத்தின்படி பெருந்தன்மையுடனும் பொறுமையுடனும் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுவிட்டு பிரச்சாரத்திற்கு பல தலைவர்கள் கிளம்பி விடலாம்.
ஆனால், பல கட்சிகளின் அடுத்தடுத்த நிலையில் இருக்கிற கட்சிப் பொறுப்பாளர்களே சில கூட்டணிகள் குறித்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கட்சிக்காக அதி தீவிரத்துடன் உழைக்கும் கட்சித் தொண்டர்கள் என்ன செய்வார்கள்?
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் தலைமை மட்டத்தில் இருக்கிற மனப்புழுக்கத்தை அறிக்கை வாயிலாகவும் பேச்சுக்கள் வாயிலாகவும் தொல்.திருமாவளவன் வெளிப்படுத்தி இருக்கும்போது விசிக தொண்டர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? அவர்கள் எந்த விதத்தில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபடுவார்கள்.
இதே நிலை இரு பொதுவுடமைக் கட்சிகளுக்கும் பொருந்தும். மிகக் குறைந்த தொகுதி ஒதுக்கீட்டை பெற்றிருப்பதாக தலைவர்களே முணுமுணுக்கும்போது அந்தக் கட்சித் தொண்டர்கள் எந்த அளவுக்கு இணக்கமாக பணியாற்றுவார்கள்?
இதே நிலைதான் அதிமுக – பாஜக கூட்டணியிலும் நீடிக்கிறது.
சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது அதற்கெதிராக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து போராடுவதைப் பார்க்க முடிந்தது. தீக்குளிக்க முயற்சிப்பது வரை கூட நடந்திருக்கிறது.
இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள தொண்டர்கள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எப்படி மன ஒப்புதலுடன் வேலை செய்வார்கள்?
கட்சி என்பது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை மட்டும் சார்ந்த ஒன்றல்ல. கட்சிக்குத் தலைமை தாங்குவோர்களுக்கு இருக்கும் பொறுப்பை விட கட்சித் தொண்டர்களுக்கு இருக்கும் பொறுப்பும் செயல்பாடும் மிகவும் முக்கியம்.
அப்படி, தொண்டர்களுக்கும் கட்சித் தலைமைக்குமான இடைவெளி அதிகரிப்பதை இந்தக் கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு பரவலாகவே பார்க்க முடிகிறது.
தொண்டர்களின் இத்தகைய எதிர்வினையை அந்தந்த கட்சித் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் உரிய முறையில் ஜனநாயக மதிப்பளித்து உணர்ந்திருக்கிறார்களா?
– யூகி