எதிர்பாராத அதிர்ஷ்டம் என்று சொல்வோமே அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவேக் ரோத்தியாவுக்கு அடித்துள்ளது.
விவேக் ரோத்தியாவின் தாத்தா சேத் ஜும்மா லால் ரூதியா, முதலாம் உலகப் போரின்போது இங்கிலாந்து அரசுக்கு 35 ஆயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார்.
இப்போது அது தொடர்பான ஆவணம் பேரன் விவேக் ரோத்தியாவுக்கு கிடைக்க, அந்த காலத்தில் 35,000 ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப அந்த பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பித் தரச்சொல்லி இங்கிலாந்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் விவேக் ரோத்தியா.

விஷயம் இதுதான்…
சேத் ஜும்மா லால் ரூதியா, கடந்த நூற்றாண்டில் பெரிய பணக்காரராக இருந்திருக்கிறார்.
செகோர் நகரில் துணி மற்றும் தானிய வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார் சேத் ஜும்மா லால் ரூதியா.
அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான ரூபாயை வைத்திருந்தாலே மிகப்பெரிய பணக்காரர் இல்லையா?..
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெரும் செல்வந்தராக இருந்திருக்கிறார்.
அந்த காலகட்டத்தில், அதாவது 1917-ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் நடந்துகொண்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து அரசுக்கு கொஞ்சம் பணமுடை. அதனால் இந்தியாவில் உள்ள சில பணக்காரர்களிடம் பணம் கடனாகக் கேட்டுள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்று 1917-ம் ஆண்டில் சேத் ஜும்மா லால் ரூதியா, இங்கிலாந்து அரசுக்கு 35,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார்.

இந்தக் கடனை சேத் ஜும்மா லால் ரூதியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டதற்கான ஆவணத்தை அவரிடம் இங்கிலாந்து அரசு கொடுத்துள்ளது.
நாளடையில் பணம் கொடுத்த விஷயத்தையும், அது தொடர்பான ஆவணம் இருப்பதையும் சேத் ஜும்மா லால் ரூதியா மறந்துவிட்டார்.
அவரது மறைவுக்கு பிறகு, மகன் சேத் சந்த் ரூதியாவிடம் இந்த ஆவணம் இருந்திருக்கிறது.
2013-ம் ஆண்டில் அவரும் இறந்துவிட்டார்.
இந்தச் சூழலில்தான் 109 ஆண்டுகளுக்கு பிறகு, சேத் ஜும்மா லால் ரூதியாவின் பேரன் எதையோ தேடும்போது இந்த ஆவணம் கிடைத்துள்ளது.
“சேத் ஜும்மா லால் இந்திய போர்க்காலக் கடனுக்காக 35,000 ரூபாயை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கும் சாம்ராஜ்யத்திற்கும் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்” என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டபிள்யூ.எஸ்.டேவிஸ் என்பவர் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

உடனே இங்கிலாந்து அரசு தனது தாத்தாவிடமிருந்து பெற்ற 35,000 ரூபாய் போர்க்கால கடனை, பணவீக்கம், வட்டி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கோடிக்கணக்கான ரூபாயாக திருப்பி தரவேண்டும் என்று உரிமை கோரியுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சர்வதேச சட்டத்தின்படி, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இங்கிலாந்து கடமைப்பட்டுள்ளது என்பது விவேக்கின் வாதம்.
தனது தாத்தாவின் உயிலைப் பரிசோதித்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நடந்த கடிதப் போக்குவரத்துகள் மற்றும் கடன் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
முன்னோர் செய்த புண்ணியம் அடுத்த தலைமுறைகளைச் சேரும் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்து அரசுக்கு தாத்தா கொடுத்த 35,000 ரூபாய் இன்று கோடிக்கணக்கான ரூபாயாக பேரன் விவேக் ரோத்தியாவுக்கு கொட்டப் போகிறது.
– பி.எம். சுதிர்