பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, கடந்த ஆண்டு பல மாதங்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கவில்லை. பொது நிகழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக வரவில்லை. இதைத்தொடர்ந்து மம்முட்டிக்கு என்ன ஆனது என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கேரளாவில் அவருக்கு இணையாக புகழ்பெற்ற மற்றொரு நடிகரான மோகன்லால்கூட சபரிமலைக்கு சென்று சிறப்பு பூஜை மம்முட்டிக்காக ஐயப்ப சுவாமியிடம் வேண்டினார். இதனால் மம்முட்டியின் உடல்நிலை குறித்த பல சந்தேகங்கள் அதிகரித்தன. அவருக்கு புற்றுநோய் என்றுகூட சில வதந்திகள் வந்தன.
அந்த வதந்திகளை பின் தள்ளிவிட்டு, மீண்டும் நடிக்கவந்த ‘மம்முட்டியின் ‘கலம்காவல்’ திரைப்படம் சமீபத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்போது ’பாட்ரியாட்’ எனும் படத்தில் நடித்துவரும் மம்முட்டி, அடுத்ததாக அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘படயாத்ரா’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இடையில் ஒரு ஆண்டு மம்முட்டி சைலண்ட் மோடுக்குப் போனது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்க, இப்போது அதற்கான விடையைச் சொல்லியிருக்கிறார் மம்முட்டி.
செவித்திறன் குறைவு உள்ளவர்களுக்கான காது கேட்கும் கருவியை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்ச்சியில் பேசும்போது, “மனிதர்களின் வாழ்க்கையில் பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் மிக முக்கியமானவை. ஒரு சில மனிதர்கள் எதையும் நுகர்ந்து பார்க்கும் தன்மை இல்லாமல்கூட கஷ்டப்படுகிறார்கள்.
நான்கூட சமீபத்தில் நுகர்ந்து பார்க்கும் திறனையும், ருசியைத் தெரிந்துகொள்ளும் திறனையும் இழந்து நீண்ட நாள் கஷ்டப்பட்டேன். இப்போதுதான் அந்தத் திறன் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இதுபோன்ற திறன்களை இழக்கும்போதுதான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம்.
ஒருவர் சத்தமாக பாட்டு கேட்கும்போது, அதைக் குறைக்கச் சொல்லிக் கேட்பது நமக்கு கேட்கும் திறன் இருப்பதால்தான். ஒருசிலர் பாடல்கள் பிடிக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். செவித்திறன் இல்லாதவர்கள் ஒரு சத்தத்தைக் கேட்க முடியாதா என்று ஏங்குகிறார்கள். செவித்திறன் இருப்பது என்பது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனுகிரகம்” என்று கூறியுள்ளார் மம்முட்டி.
இதிலிருந்து உடல்நலக் குறைவு காரணமாகத்தான் கடந்த ஆண்டு பல மாதங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார் என்பது நிரூபணமாகி உள்ளது.
மம்முட்டிக்கு ஏன் இப்படி ஆனது? அவரால் ஏன் மணத்தை நுகரவும், ருசியைத் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை என்பது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று மருத்துவர்களின் கருத்துகளைக் கேட்டு வெளியிட்டுள்ளது.
மம்முட்டிக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், “வாசனை மற்றும் சுவை உணர்வு குறைபாடு என்பது வெறும் மூக்கு அல்லது நாக்கு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது பெரும்பாலும் ஒரு சிக்கலான நரம்பியல் மற்றும் உடலியல் சார்ந்த எதிர்வினையாகும்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 14% முதல் 18% பேர் புதிய வகையான வாசனை அல்லது சுவையை அறியும் திறனை இழந்ததாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் 50 முதல் 80 சதவீதம் பேர்வரை இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மம்முட்டி விஷயத்தில் அவரது வயதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம். பொதுவாக ஒருவர் 70 வயதைக் கடந்த பிறகு, அவரது உடலில் உள்ள உணர்வு செல்கள் மீண்டும் உருவாவது அல்லது புதுப்பிக்கப்படுவது மெதுவடைகிறது. அதனால்கூட இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஒரு சிலருக்கு இது பார்கின்ச்சன்ஸ் நோயின் அறிகுறியாககூட இருக்கும். உரிய மருந்துகளை எடுப்பது மற்றும் தெரபிக்கள் மூலம் வாசனை மற்றும் சுவையை அறியும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கலாம்” என்று கூறியுள்ளனர்.
பெரிய அளவிலான பிர்ச்சினைகள் ஏதும் இல்லாமல் மம்முட்டி தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களை தரவேண்டும் என்பதே நம் விருப்பம்.
– பி.எம்.சுதிர்