வயதான காலத்தில் துணையின்றித் தனியாக வாழ்பவர்களை இன்று ‘அன்கபில்ட்’ (Uncoupled) என்று அழைக்கிறார்கள்.
எழுத்தாளர் அமண்டா ஸ்டெர்ன் எழுதிய “தனியாக இருப்பதன் அரசியல்: தனிமையில் இருப்பவர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாடு” என்ற கட்டுரை, இந்தக் கருத்தாக்கத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
கடந்த காலப் பெருந்தொற்று காலத்தில், குடும்பமாக இருந்தவர்கள் தங்களுக்குள் ஒரு பாதுகாப்பான வட்டத்தை (Pods) உருவாக்கிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர்.
ஆனால், அமண்டா ஸ்டெர்ன் போன்ற தனியாக வசித்தவர்களுக்கு அது ஒரு நரகமாகவே இருந்தது.
சமூக வலைதளங்களில் மற்றவர்கள் குடும்பத்துடன் உணவருந்துவதைப் பார்த்தபோது, தான் இந்த உலகிற்கே “மறைந்துவிட்டதாகவே” அவர் உணர்ந்தார்.
உண்மையில், இந்த உலகம் ஜோடிகளையும் குடும்பங்களையும் மையப்படுத்தியே ஆழமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் காதலில் இருக்கும்போது அவருக்குக் கிடைக்கும் சமூக மதிப்பும் விருந்து அழைப்புகளும், அவர் அந்த உறவிலிருந்து பிரிந்தவுடன் (Breakup) மாயமாய் மறைந்துவிடுகின்றன.
நண்பர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர்களின் உலகம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக் கொள்கிறது; அங்கே தனித்து வாழ்பவர்களுக்கு இடமில்லாமல் போகிறது.
சமூகம் சில நிகழ்வுகளை மட்டுமே கொண்டாட்டத்திற்குரிய மைல்கற்களாகக் கருதுகிறது. திருமணம், வளைகாப்பு, குழந்தைகளின் பிறந்தநாள் எனச் சங்கிலித் தொடராகச் சடங்குகள் உள்ளன.
ஆனால், தனித்து வாழ்பவர்களின் வாழ்வில் நிகழும் முக்கியமான முன்னேற்றங்களுக்குச் சமூகம் எந்தச் சடங்குகளையும் வைத்திருப்பதில்லை.
மேலும், குடும்பமாக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றித் தனிமையில் இருப்பவர்களிடம் வந்து புலம்புவார்கள்.
ஆனால், தங்களது மகிழ்ச்சியான கொண்டாட்டங்களின்போது அவர்களைப் புறக்கணித்துவிடுவார்கள்.
பிரச்சனைகளின் போது தேடி வரும் நண்பர்கள், கொண்டாட்டங்களின் போது ‘தனி நபரால்’ என்ன பயன் என்று ஒதுக்கிவிடுகிறார்கள் என்கிறார் அமண்டா.
உலகம் குடும்பத்தினை மையபடுத்தியே உருவாக்கப்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், காப்பீட்டுத் திட்டங்கள், ஏன் உணவகங்களில் உள்ள இருக்கைகள் கூட குடும்பங்களை மனதிற்கொண்டே உருவாக்கப்படுகின்றன.
பள்ளிகள், பூங்காக்கள் முதல் சுற்றுலாத் தலங்கள் வரை அனைத்தும் குழந்தைகளுள்ள குடும்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
இதனால் தனித்து இருப்பவர்கள் தங்களை ஒரு “அன்னியமாகவோ” அல்லது “உபரியாகவோ” (Extra Person) உணர வேண்டிய சூழல் நிலவுகிறது.
இருபது மற்றும் முப்பதுகளின் தொடக்கத்தில் தனிமை என்பது ஒரு மாபெரும் “சுதந்திரமாக” (Freedom) தெரியும்.
நினைத்த இடத்திற்குச் செல்லலாம், யாரையும் கேட்க வேண்டியதில்லை என்ற உணர்வு ஒரு போதையைத் தரும். ஆனால், 40 வயதைக் கடந்த பின் நிலைமை மாறத் தொடங்குகிறது.
40 முதல் 80 வயது என்பது வெறும் காலம் அல்ல; அது வாழ்க்கையின் பாதியளவு, அதாவது நான்கு நீண்ட தசாப்தங்கள்.
நம் 40+ வாழ்க்கை நம் 20+ வாழ்க்கையில் தீர்மானிக்கபடுகிறது.
~ நியாண்டர் செல்வன்