‘பொன்னை விரும்பும் பூமியிலே… என்னை விரும்பும் ஓர் உயிரே…’ என்கிற திரைப்படப் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. பொன்னை தற்போது விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்?
குழந்தை பிறப்பிலிருந்து வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு மங்கல நிகழ்ச்சிகளுக்கும் ஏன்?, மயானச் சடங்குகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் சடங்குகள் செய்வது எப்படி ஒரு பொது செயல்பாடாக இருக்கிறதோ, அதைப்போலவே தங்கமும் வெள்ளியும் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கத்தினைப் போல் பிணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
வரதட்சணை வாங்கக் கூடாது என்கின்ற சட்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அதையெல்லாம் மீறி இவ்வளவு பவுன் நகை என்று கல்யாணங்களுக்கு முன் பேசப்படுவதை இயல்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முந்தைய அரசு ‘தாலிக்குத் தங்கம்’ என்கிற பெயரில் தங்கத்தை முதன்மைப்படுத்தி அரசின் சலுகைகளில் ஒன்றாக அதை மாற்றி இருந்தது.
இதைத் தவிர அரசியல் கட்சிக்காரர்கள் அவரவர் சம்பாத்தியத்திற்கேற்ப கனமான நகைகளை அணிந்து வலம் வருகிறார்கள்.
ஏற்கனவே அப்படி வலம் வந்த முன்னாள் முதலமைச்சர், அந்தக் காட்சி ஊடகங்களில் பரவி சர்ச்சையானதும், “இனிமேல் வாழ்நாள் முழுவதும் நகை அணிய மாட்டேன்” என்று சபதமே எடுத்திருந்தது இதைப் படித்துக் கொண்டிருக்கிற வாசர்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
தற்போது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவாக தங்கத்தின் விலை ஒரு பவுன் ஒன்னேகால் லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெள்ளியின் விலையும் இதே நிலைதான்.
இந்த நிலையில் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், தன்னுடைய வீட்டில் ஒரு காதணி விழா, சடங்கு, திருமணம், குழந்தைப் பிறப்பு என்று எது நடந்தாலும் எப்படிச் சமாளிக்கும்?
இவ்வளவு விலைவுயர்ந்த பிறகும் அவர்களால் இந்த அளவுக்கு மதிப்பேறிய நகையை எப்படி வாங்க முடியும்? அப்படி வாங்கும் சக்தி இப்போது சாமானிய மக்களுக்கு இருக்கிறதா?
வசதியானவர்கள் தங்கம் விலை உயரும் நிலையில், அதில் முடிந்த அளவுக்கு முதலீடு செய்கிறார்கள். வெள்ளிக் கட்டிகளை வாங்குகிறார்கள். பணத்தை சேமிப்பதில் உள்ள ஆபத்தை இரண்டு கட்டங்களாக, நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அவர்களுக்கு உணர்த்திருக்கின்றன.
அதனால் உருவான ஜாக்கிரதை உணர்வுடன் அவர்கள் நகைகளில் முதலீடு செய்கிறார்கள்.
அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு நகைகளைக் கொண்டு வரலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனால் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு தங்க வரத்து அதிகரிக்கலாம்.
ஆனால், என்னதான் நடந்தாலும் சாமானிய மக்கள் என்ன தான் செய்ய முடியும்?
ஒன்று செய்யலாம் காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில், அன்னியத் துணிகளை புறக்கணித்து நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை நடத்தியபோது மகளிர் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று இருக்கிறார்கள்.
அதேமாதிரி நாம் நமக்கு முன்னால் உருவாக்கப்பட்டிருக்கிற சடங்கு முறைகள் ஒவ்வொன்றிலும் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிற நகைகளை வாங்குவதைப் புறக்கணித்தால், அதற்கு பதில் பணத்தையோ அல்லது வேறொரு பொருளையோ கொடுப்பதை செய்யும் பட்சத்தில் பொதுவெளியில் நகைக்கு நாம் கொடுக்கிற மதிப்பு குறையும்.
யாரோ தீர்மானித்து தங்கத்தின் மதிப்பை உயர்த்தி, தினமும் நம்மை கதிகலங்க வைப்பதைவிட அதே தங்கத்தின் மீது நாம் வைத்திருக்கிற மதிப்பைக் குறைத்து புறக்கணிக்கும் பட்சத்தில், நமது தேவைகளுக்கு ஏற்றபடியான ஒரு மாற்றத்தையும் நாம் நிகழ்த்திக் கொள்ள முடியும்.
இதற்கு முதற்கட்டமாக பெண்களுக்கு நகைகள் மீது இருக்கிற மோகமும் ஏக்கமும் குறைய வேண்டும்.
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதையெல்லாம், நமது நலன் கருதி நிறுத்திவிட வேண்டும்.
செய்யத் தயாராக இருப்பார்களா நமது பெண்கள்?
– சி. ஆனந்த செல்வி