உபசரிப்பு – எவ்வளவு அழகான இயல்பு.
விருந்தினரை மட்டுமல்ல நண்பர்களை மட்டுமல்ல வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எங்கு ஒருவர் வந்தாலும், அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று பாரபட்சம் காட்டாமல் உபசரிப்பது நம்முடைய தமிழர் மரபின் ஒரு அற்புதமான அங்கமாகவே இருந்திருக்கிறது.
ஊடகம் சார்ந்த வாழ்வுக்குள் நுழைந்து 45 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும் இந்த ஊடக அனுபவத்தில்தான் எவ்வளவு அன்பான உபசரிப்புகள்.
கேட்டால் ஆச்சர்யமாக இருக்கலாம்.
மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டிக்கு அருகில் எம்.ஜி.ஆருடைய தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு பின் வந்த ஊடகவியலாளர்களின் வேனில் நானும் இருந்தேன்.
நள்ளிரவு. ஒரு ஊரைத் தாண்டி போய்க்கொண்டிருந்தோம். சுற்றிலும் கனமான இருட்டு. சற்று ஓரத்தில் நீண்டதொரு பொட்டல் வெளி. அந்தப் பகுதியில் வாகனங்களை ஓரமாக நிறுத்தச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அடுத்தடுத்து இரைச்சலுடன் நிறுத்தப்பட்டன வாகனங்கள். உடன் வந்தவர்களுடன் அந்தப் பொட்டலுக்கு நடந்துபோனார் எம்.ஜி.ஆர். இருவர் கை டார்ச்லைட்டுடன் முன்னே போனார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் தரையில் பெரிய ஜமுக்காளத்தை விரிக்கச் சொன்னார். அதன்படியே விரித்தார்கள். விரித்த இடத்தில் அதன்மீது அமர்ந்தார் எம்ஜிஆர்.
எதிரே இன்னொரு விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில், பத்திரிகையாளர்களான எங்களை அமரச் சொன்னார். பத்து பேர் வரைதான் இருந்தோம். அமர்ந்ததும் இரவு உணவுக்கான வெவ்வேறு டிபன் கேரியர்களை தூக்கி வந்தார்கள்.
சற்று தூரத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களில் இருந்த ஹெட்லைட் வெளிச்சத்தைக் கீழே நாங்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கித் திருப்பச் சொன்னார். சட்டென்று எங்களைச் சுற்றி வெளிச்சம் பரவியது.
டிபன் கேரியர்கள் திறக்கப்பட்டதும் சுற்றிலும் மசாலா கலந்த அசைவ உணவின் வாசனை. மட்டன், சிக்கன், மீன் என்று பல்வேறு விதமான அசைவ உணவுகள்.
உடனிருந்த பத்திரிகையாளர் ஒருவர் சாப்பிடத் தயங்கியபோது, “காலைல வரை, என்கூட வரணும்ல… நேரத்தைப் பாருங்க. எல்லாருக்கும் பசிக்கிற நேரம் தான், சாப்பிடுங்க” என்று தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்த நிலையில், அவர் சொன்னார்.
தேர்தல் நேரத்தில் ஒரு நள்ளிரவில் அந்தப் பொட்டல் வெளியில் பெருவாரியான மக்களின் நேசத்திற்கு உள்ளான எம்.ஜி.ஆருடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட அனுபவத்தையும், “எடுத்து வைங்க” என்று எம்.ஜி.ஆர். மென்மையாக உபசரித்ததும் இப்போதும் நினைவில் பசுமையாக பதிந்திருக்கும் அனுபவம்.
இதேமாதிரியான அனுபவத்தை விருதுநகரில் சந்திக்க நேர்ந்தது.
அங்கு பகல் நேரத்தில், மேசை மேல் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன. எங்களுக்கு நேர் எதிரே எம்.ஜி.ஆருக்கும் அவருடன் வந்த மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டிருந்தது.
அந்த இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர். நேரே சாப்பாட்டு மேஜைக்கு அருகில் வந்தார். எங்களுக்குப் பரிமாறப்பட்டிருந்த அசைவ உணவுகளை உன்னிப்பாக கவனித்தவர், எதிரே அவருக்குப் பரிமாறப்பட்டிருந்த உணவு வகைகளையும் கவனித்தார்.
முகம் சற்றே மாறிய நிலையில், ”ஏன்? இவங்களுக்கு குறைச்சு வைச்சிருக்கீங்க.. எனக்கு அதிகமாக வைச்சிருக்கீங்க. ஒன்னு இவங்களுக்குக் கூடுதலா வைங்க, அல்லது என் இலையில உள்ளதை எடுத்துருங்க..” என்று கடிந்து கொண்டதும்,
அவசர அவசரமாக எங்களுடைய மேசைக்கு அந்தக் கூடுதலான உணவு வகைகள் பரிமாறப்படும் வரை எதிரே கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தார் எம்ஜிஆர்.
இந்த உபசரிப்பில் வெளிப்பட்ட பாரபட்சமற்ற தன்மையையும் மறக்க முடியவில்லை.
இதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற கட்சியைத் துவக்கி, தூத்துக்குடியிலிருந்து சென்னை வரை காரில் பயணப்பட்டபோது, அதே காரில் அவருடன் பயணிக்க வாய்ப்புக் கிடைத்தது.
சிவாஜியிடம் அப்படி ஒரு உபசரிப்பு. தூத்துக்குடியில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அவருடன் அமர்ந்து அவருக்கென அவரது ரசிகர்கள் கொண்டுவந்த பெரிய சைஸ் இறாலை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்ததும்,
திருவண்ணாமலைக்கு அருகில் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தெருவோர டீக்கடையோரம் காரை நிறுத்தச் சொல்லி ரோட்டில் நிறுத்தப்பட்டக் காரின்மேல் சாய்ந்தபடி, சிவாஜியுடன் நாங்களும் டீக்குடித்த அனுபவத்தையும்,
பிறகு சென்னை திரும்பியதும், அன்னை இல்லத்தில் அவருடைய மனைவி கமலாம்மாள் பரிமாறியபோது பரிமாறப்பட்ட கீரை வகைகளும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதுமாக அவ்வளவு நேசத்துடன் இருந்தது அவருடைய உபசரிப்பு.
இதற்கு இணையாக உபசரிப்பில் அவ்வளவு அக்கறை காட்டியவர் வைகோ. அவருடைய கலிங்கப்பட்டி வீட்டில் அவருடைய தாயார் மாரியம்மாள் பரிமாற, அவருடன் சாப்பிட்ட அசைவ உணவுகளை அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
“அம்மா அவ்வளவு அருமையாக சமைப்பாங்க” என்று சொன்னபோது அவரது முகமே மலர்ந்திருந்தது. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் பலமுறை சாப்பிட்டபோதும், அதே கனிவான உபசரிப்பு.
பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாசை பார்க்க பலமுறை அவரது தைலாவரம் தோட்டத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்னையிலிருந்து காரில் என்னை அழைத்துப் போனவர், மருத்துவர் அன்புமணி.
தைலாவரத்திற்கு நாங்கள் போய் சேர்ந்ததும், பசிக்கக் கூடிய அந்த மதிய நேரத்தில், பல்வேறு அசைவ உணவுகளை அன்புமணியின் தாயார் பரிமாறினார்.
மருத்துவர் ராமதாஸ், மகன் அன்புமணி உள்ளிட்ட பலரும் அமர்ந்து சாப்பிட்டதெல்லாம், நினைவு கொள்ளத்தக்க அனுபவம்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவனுடன் அவரது அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து அவரும் நானும் சாப்பிட்டிருக்கிறோம். அவர் சைவ உணவை அருந்திய நிலையிலும் எனக்கு வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட அசைவ உணவைப் பரிமாறச்சொல்லி, நட்புணர்வுடன் உபசரித்திருக்கிறார்.
அரசியல்வாதிகள் பலருடன் பழகினாலும் மிகவும் தனித்துவமானது ம.நடராசனுடனான நட்பு.
தஞ்சை, குற்றாலம், சென்னை என்று பல இடங்களில் அவருடன் சாப்பிட்டிருக்கிறேன். உபசரிப்பதில் அவர் உச்சபட்ச ரகம்.
ஒருமுறை தஞ்சையில் உள்ள அவரது வீட்டிற்கு பாஜக தலைவரான இல.கணேசன் வந்தபோது, அவர் நடராசன் உபசரித்த விதத்தைப் பார்த்து பாராட்டு மழையில் நனைத்து எடுத்துவிட்டார். அவருடைய வீட்டிற்கு வந்த பலரையும் சாப்பிட வைக்காமல் அனுப்பியதில்லை.
இதைப்போலவே பல்வேறு எழுத்தாளர்களுடன் உணவருந்திய அனுபவமும் கிடைத்திருக்கிறது.
என்னுடைய இருபதாவது வயதில், நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை பார்க்க போனபோது அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது காலை நேரத்திலும் விதவிதமான உணவு வகைகளோடு சாப்பிட்டிருக்கிறேன்.
மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அவரோடு உணவு அருந்தியிருக்கிறேன். சாப்பிடுவதில் தேர்ந்த ருசியை வெளிப்படுத்தும் அவர், வருகிறவர்களை உபசரிக்கும் விதமும் அவ்வளவு ருசிகரமாக இருக்கும், அன்புமயமாகவும் இருக்கும்.
எழுத்தாளர்கள் ஜெயந்தன், பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுரேஷ்குமார இந்திரஜித், நா.முருகேச பாண்டியன் என்று பலருடைய வீடுகளில் சாப்பிட்ட அனுபவம் இருந்தாலும்,
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் புதுவை வீட்டில் அவரது மனைவி முறுகலான தோசைகளை பரிமாறி, கி.ரா கிராமிய மணத்துடன் உபசரித்ததையும் அந்த முதுமையிலும் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து வழியனுப்பி வைத்ததையும் மறக்க முடியாது.
அதேமாதிரி டெல்லியில் ராணுவ ஜெனரலான பத்மநாபனின் வீட்டுக்கு பலதரப்பட்ட பாதுகாப்பைக் கடந்து அவருடைய பிரம்மாண்டமான வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்ட டின்னரும், மறுநாள் சாப்பிட்ட மதிய உணவையும் மறக்க முடியாது.
காரைக்குடிக்கு அருகே உள்ள கானாடுகாத்தான் ஊரிலுள்ள செட்டிநாட்டு அரசரின் மிகப் பிரம்மாண்டமான வீட்டிற்கு போனபோது, பிரமித்துப் பார்த்திருக்கிறேன்.
அவருடைய வாரிசான எம்.ஏ.எம். ராமசாமி சென்னையில் உள்ள அவருடைய பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டில் மாலை நேரம் வெள்ளிப் பாத்திரங்களில், அப்பம் உள்ளிட்ட செட்டிநாடு உணவு வகைகளை எளிய உடையிலிருந்த அவருடன் அமர்ந்து உணவு அருந்தியதையும், அந்த பங்களாவிற்குள் வெளிப்பட்ட பேரன்பான உபசரிப்பையும் நினைவில் உள்ள வரை மறக்க முடியாது.
இப்படியே பலர், இந்த ஜேனர்லிச வாழ்வில், அன்பான உபசரிப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்றாலும், கிராமியப் பாடகரான கொல்லங்குடி கருப்பாயி வீட்டிற்கு நான் போயிருந்தபோது, அவர் காட்டிய உபசரிப்பு அவ்வளவு கனிந்த ரகம்.
அவரது வீட்டுத் திண்ணையில், உட்கார்ந்து அவரிடம் பேட்டி எடுத்துவிட்டு கிளம்ப ஆயுத்தமானபோது, “காப்பி, தண்ணி குடிக்க மாட்டேனுட்ட… குண்டு சோடாவும் வேணான்னு சொல்லிட்ட… எங்க வீட்ல ஒரு வாய் சாப்பிட்டுப் போனா என்ன?” என்று கேட்டார்.
சரி சாப்பிடலாம் என்று நான் தலையாட்டியபோது, பூரிப்புடன் அவர் சொன்னார், “ஆமா, உன்னைப் பார்த்தா சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துல இருக்க… நீ கருவாட்டுக் குழம்பெல்லாம் சாப்பிடுவியா?” கேட்டதும், தலையசைத்தேன்.
வீட்டுக்குள் அழைத்துப் போனவர், ஒரு தட்டில் சோற்றைப் பரிமாறி மேலே கருவாட்டுக் குழம்பை ஊற்றியபோது, மெல்லிய கிராமியப் பாடல் ஒன்றையும் முணுமுணுத்தபடியே பாடினார்.
அதைக் கேட்டபோது, காதுக்கு மிக அருகில், ஈசல் பரப்பதைப்போல் இருந்தது.
ஒரே நேரத்தில் வாய்க்குள் கருவாடும், காதுகளுக்குள் அந்த கிராமத்து இசையும் நுழைந்த அனுபவத்திற்குப் பின்னால், எவ்வளவு அன்பு நிறைந்த உபசரிப்பு.
இத்தகைய கனிந்த உபசரிப்புகளையும், இவற்றிற்குப் பின்னால் வெளிப்படும் மகத்தான நேசத்தையும் எப்படி மறக்க முடியும்.
– எழுத்தாளர் மணா
(அடுத்த வாரம் தொடரும்…)