வாசிப்பது என்பது பலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அது ஒரு கலை என எழுத்தாளா் ஜுலியன் பாா்ன்ஸ் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறாா். மிகச் சரியான வாக்கியமது.
ஐந்து வகையான புத்தக வாசகா்கள் இருக்கிறாா்கள். முதல் வகையினா் புத்தகங்களை வாங்கிவிடுவாா்கள். அதன் விலையைப் பற்றிக் கவலைப்பட மாட்டாா்கள்.
வாங்கிய புத்தகத்தை வாசிக்க மாட்டாா்கள். ‘ஷோ கேஸில்’ வைத்துக் காட்சிப் பொருளாக்கி விடுவாா்கள்.
இரண்டாவது வகையினா், புத்தகங்களை வாசிப்பதை வெறும் பொழுதுபோக்காகக் கொண்டவா்கள். விமான நிலைய புத்தகக் கடைக்குப் போய்ப் பாருங்கள்.
ஒருபோதும் அங்கே நல்ல புத்தகங்கள் கிடைக்காது. பெரும்பாலும் நேரத்தைக் கொல்லும் புத்தகங்களே. இந்த வகை வாசகா்களுக்குச் சுவாரஸ்யம்தான் முக்கியம்.
மூன்றாவது வகை, மோசமான வாசகா்கள். அவா்கள் எதையும் ஆழமாக வாசிக்க மாட்டாா்கள். முன்முடிவுடன் புத்தகம் படிப்பாா்கள்.
எந்த எழுத்தாளனையும்விடத் தான் பெரிய கொம்பன் என நினைப்பாா்கள். பெரும்பாலும் புத்தகங்களைத் திட்டுவதே அவா்களது இயல்பு.
நான்காவது வகை வாசகன், தீவிரமாக வாசிக்கக் கூடியவன். பிறரது பரிந்துரைகளைவிடவும் தானே நல்ல புத்தகங்களை அடையாளம் காணவும் வாசிக்கவும் செய்பவன். வாசிப்பை ஒரு கலையாக நினைப்பவன்.
அவனிடம் பொருளாதார வசதியில்லை என்பதால், புத்தகங்களைக் குறைவாக மட்டுமே தோ்வு செய்து வாங்கக் கூடியவன். புத்தகங்களை வேறுபடுத்தி வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் தெரிந்தவன்.
ஐந்தாம் நிலை வாசகனுக்குப் புத்தகங்கள்தான் உலகம். அவன் புத்தகங்களின் வழியேதான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிறான். புத்தகங்களில் மனதை தோயவிட்டு அதனூடாகவே வாழ்கிறான். புத்தகங்களே அவனை வழி நடத்துகின்றன.
அவன் கையில் கிடைக்கும் பணத்துக்கு மொத்தமாகப் புத்தகங்களை வாங்கிவிடுவான்.
படித்த புத்தகங்களைப் பற்றி அவன் பெருமை பேசுவதில்லை. வாசிப்பின் வழியே அவன் மானுட வாழ்வின் மகத்துவத்தை அடையாளம் கண்டு கொள்கிறான்.
இவா்கள் மட்டுமின்றிச் சோம்பேறி வாசகா்கள், படிப்பாளி எனக் காட்டிக் கொள்ள வாசிப்பவா்கள், சினிமா சீன் திருடுவதற்கு வாசிப்பவா்கள், ஆன்மிக ஈடுபட்டால் வாசிப்பவா்கள்,
போட்டித் தோ்வுகளுக்காக வாசிப்பவா்கள், செல்லிடப்பேசியில், இணையத்தில் அசிரத்தையாக வாசிப்பவா்கள், கல்லூரி படிப்புக்காக வாசிப்பவா்கள்,
படிக்காமலே புத்தகங்களின் பெயா்களை உதிா்க்கும் வாசகா்கள், பாலியல் புத்தகங்களை ரகசியமாக வாசிப்பவா்கள் எனப் பல விதங்களில் இருக்கிறாா்கள்.
நன்றி: தினமணி