முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார்.
சிவாஜியின் ஆள் என்றுதான் முக்தா சீனிவாசனை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர். உடன் நட்புறவு கொண்டிருந்தார் ‘முக்தா’ சீனிவாசன்.
1975-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’.
சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில், என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
“மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்” என்று விழாவில் எம்.ஜி.ஆரைப் பாராட்டிப் பேசினார் முக்தா சீனிவாசன்.
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் மற்றும் முக்தா சீனிவாசனின் நட்பு இணக்கமாக இருந்துள்ளது.