நகைக்கடன் வழங்கும் முறை எளிமையாக்கப்படுமா?

திடீர் மருத்துவச் செலவு, கல்விச் செலவு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு சாமானிய மக்களுக்கு இதுவரை கைகொடுத்தது தங்கநகைக் கடன்.

வட்டிக் குறைவு என்பதால் தேசிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகளில் மக்கள் நகைக்கடன் பெற்றனர்.

எளிமையான முறையில் நகைக்கடன் பெற்றுவந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி திடீரென சில புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

நகை வாங்கிய ரசீதை வங்கியிடம் காட்டினால்தான் இனிமேல் கடன் பெற முடியும். ரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையது என்பதை உறுதிச் சான்றிதழை வங்கியிடம் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற கெடுபிடிகள் சாமானிய மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வங்கிகளில் பெற்ற தங்க நகைக் கடன் தொகைக்கு வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்கலாம் என்ற நிலை இருந்தது.

தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கியின் புதிய விதி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல தங்க நகைகளின் தரம் 22 காரட் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் வங்கிகள் சொல்லத் தொடங்கியிருக்கின்றன.

தங்க நகைக் கடன் பெறுவதில் ஏற்பட்டுள்ள இந்தக் கெடுபிடிகள் எளிய மக்கள், சிறு விவசாயிகள், சிறுவணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் நகைகள் ஏலத்துக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி நகையை மீட்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதனால் அடகு நகையை மீட்க கந்துவட்டிக்காரர்களை அணுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

நகைக்கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆனால், எளிய, சாமானிய மக்களின் அதிருப்தியை, சங்கடங்களை உணர்ந்து இந்திய அரசு முன்பிருந்த நகைக்கடன் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்பதே எல்லோரது வேண்டுகோளாகும்.

  • நன்றி : குமுதம் (தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி…)
You might also like