இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக இன்று (மே-24, 2025) முடிசூடி இருக்கிறார் சுப்மன் கில். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இதுவரை இந்தியக் கிரிக்கெட்டின் இளவரசனாக இருந்த சுப்மன் கில்லுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அவர் கேப்டனாக செயல்படப் போகிறார்.
இந்த உச்ச்சத்தை சுப்மன் கில் அத்தானை சுலபத்தில் அடையவில்லை. அதற்காக, கில் பட்ட கஷ்டங்கள் பல. சுப்மன் கில் மட்டுமல்ல, ஆவரது அப்பா லக்வீந்தர் சிங்குக்கும்கூட இந்த வெற்றியில் முக்கியப் பங்கு இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசில்கா என்ற ஊரில் விவசாயியாக இருந்தவர் லக்வீந்தர் சிங். சிறுவயதில் லக்வீந்தருக்கு கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது.
ஆனால், குடும்பச் சூழலால் அவரால் கிரிக்கெட் வீரராக முடியவில்லை. தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்யவேண்டி வந்தது.
பின்னாளில் தன் மகன் சுப்மன் கில்லுக்கு கிரிக்கெட்டில் விருப்பம் இருப்பது தெரிந்ததும், அவர் அதில் ஜெயிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
முதல் கட்டமாக தனது வயலில் ஒரு பகுதியை நிரவி அங்கு கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்தினார். அதன் நடுவில் பிட்ச்சை அமைத்து சுப்மான் கில்லுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார்.
“தினமும் 500 முதல் 700 பந்துகள்வரை சுப்மான் கில்லுக்கு வீசி பேட்டிங் பயிற்சிக் கொடுத்தேன். இந்தப் பயிற்சிக்காக ஊரில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையெல்லாம் பயன்படுத்தினேன்.
சுப்மன் கில்லை அவுட் ஆக்கினால் 100 ரூபாய் பரிசு என்று அறிவித்தேன். இதனால் பல சிறுவர்கள் கில்லுக்குப் பந்துவீச முன்வந்தனர்.
பந்தை வீசுவது மட்டுமின்றி வேகமாக அவரை நோக்கி எறிந்தும் கில்லுக்குப் பயிற்சி கொடுத்தனர்” என்கிறார் அவரது அப்பா லக்வீந்தர் சிங்.
இதில் மற்றொரு விசேஷமும் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக மைதானம், பந்துவீச்சாளர்கள் என்று எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த லக்வீந்தர் சிங், பேட்டை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
பேட்டுக்கு பதில் ஸ்டம்பை வைத்து பேட்டிங் செய்ய வைத்தார்.
பேட்டை விட ஸ்டம்பின் அகலம் குறைவு என்பதால், பிற்காலத்தில் பந்தை சரியாக மிடிலிங் செய்ய சுப்மான் கில்லுக்கு இது உதவியாக இருந்தது.
சுப்மன் கில்லின் கிரிக்கெட் ஆர்வமும், திறமையும் அதிகரிக்க, அவருக்கு மேலும் பயிற்சி வழங்குவதற்காக மொஹாலிக்கு இடம் மாறினார் லக்வீந்தர் சிங்.
அங்குள்ள பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அன்றிலிருந்து அவரது வளர்ச்சி அபாரமானதாக இருந்தது.
2014-ம் ஆண்டில் நடந்த மாநில அளவிலான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 351 ரன்களைக் குவித்தார்.
பின்னர் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து சதங்களைக் குவித்தார். 2019-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சுப்மன் கில்தான் ஹீரோ.
இந்தத் தொடரில் இறுதிப் போட்டியைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் 50 ரன்களைக் கடந்தார். இந்தத் தொடரில் அவரது சராசரி ரன்கள் 104. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த நேரத்தில் சுப்மன் கில்லின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த விராட் கோலி, “சுப்மன் கில் வலைப்பயிற்சி செய்யும்போது பார்த்தேன். எனக்கு 19 வயதாக இருந்தபோது சுப்மன் திறமையில் 10 சதவீதம்கூட இல்லை” என்று பாராட்டினார்.
இப்படித் தன்னை பாராட்டிய விராட் கோலியின் பல சாதானைகளை முறியடித்த சுப்மன் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1893 ரன்களைக் குவித்துள்ளார்.
55 ஒருநாள் போட்டிகளில் 2,775 ரன்களையும், 21 டி20 போட்டிகளில் 578 ரன்களைக் குவித்துள்ளார். இப்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில்கூட அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறார்.
25 வயதுக்குள் இத்தனை சாதனைகளைப் படைத்த சுப்மன் கில், இந்தியக் கிரிக்கெட்டின் புகழை உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் செல்வார் என்று நம்புவோம்.
– பிரணதி