ஆமை வாழ்வு எளிதல்ல…!

’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை நுழைஞ்ச வீடு மாதிரி’ என்று சிலரது வருகையை அவமானப்படுத்தவும் அந்த விலங்கைச் சுட்டிக்காட்டுவதுண்டு. ஆனால், இது போன்ற எந்தவொரு விஷயத்தையும் ஏற்றிக்கொள்ளாமல் டைனோசர் காலம் தொட்டு சுமார் 26 கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து வருகின்றன ஆமைகள்.

எங்கும் வாழும்..!

ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஆமைகள் மிக மெதுவாக நகரும் தன்மை படைத்தவை. இதனைச் சொல்ல, நமக்கு முயலும் ஆமையும் கதையானது சிறு வயதிலேயே சொல்லித் தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க 350-க்கும் மேற்பட்ட ஆமை வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குளம், குட்டைகள், ஏரிகள், ஆறுகள் முதலான நன்னீர் நிலைகள் மட்டுமல்லாமல் கடலிலும் ஆமைகள் (turtles) வாழும். இவற்றில் சில வகை நிலத்தில் வாழும். இவை ஆங்கிலத்தில் ‘tortoise’ என்றழைக்கப்படுகின்றன. காடுகளிலும் பாலைவன நிலத்திலும் கூடச் சில ஆமைகள் வாழுமாம். அதற்கேற்ப இவற்றின் அளவும் கூட வேறுபடும்.

பொதுவாக இவை புழுக்கள், நத்தைகள், பூச்சிகள், ஜெல்லி மீன் உள்ளிட்டவற்றை உண்டு வாழும். இது கடல் ஆமைகளுக்கே பொருந்தும். நிலத்தில் வாழ்பவை தாவர உண்ணிகள் தான்.

ஆமைகள் உண்ணும் உணவைக் கொழுப்பாகச் சேமித்து வைக்கும். சில ஆமைகள் நீராகவும் உடலில் உணவைச் சேமிக்கும். சில நாட்களுக்கு, வாரங்களுக்குக் கூட உணவுண்ணாமல், நீர் பருகாமல் இருக்கவல்லவை.

இவை நிலத்தில் முட்டையிடும். ஒரு குழியைத் தோண்டி அதில் முட்டைகளை வைப்பது இவற்றின் வழக்கம். நிலத்தின் வெப்பம் மற்றும் தன்மையானது ஆமையின் பாலினங்களைத் தீர்மானிப்பதாகச் சொல்லப்படுகிறது. வெப்பமான சூழலானது பெண் இனத்தைப் பெருக்க்க உதவுகிறதாம்.

ஆமைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. நிலத்தில் வாழ்பவை 100 முதல் 200 ஆண்டுகள் கூட வாழும். இவை அதிகபட்சம் 2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்; சுமார் 680 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

இவற்றின் மீது ஓடு உண்டு. அதுவே இவ்வுயிர்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஆமைகளின் விலா எலும்பு, முதுகெலும்புடன் சேர்த்து சுமார் 50-க்கும் மேற்பட்ட எலும்புகளால் இந்த ஓடு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கும் உயிரிகளிடம் இருந்து ஆமைகளைக் காக்கக் காலம்காலமாக இந்த ஓடு உதவுகிறது.

சில அபாயங்கள்!

எந்தவொரு அரிய வகை உயிரினமாக இருந்தாலும், ‘அவற்றால் தனக்கு என்ன பயன்’ என்று சிந்திப்பதே மனிதனின் வேலை. அப்படி யோசித்ததன் பலன் ஆமைகளையும் பாதித்திருக்கிறது. ஆமைகளின் ஓடுகள் பாதுகாப்பு அரண்களாக விளங்குபவை என்று அறிந்ததும், பதினெட்டாம் நூற்றாண்டில் அதற்காகவே ஒரு கூட்டம் வேட்டையாடக் கிளம்பியது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆமைகளில் இருந்து கிடைக்கும் பயன்கள் நிறைய என்று சொல்லி ஒரு கும்பல் அதனைச் சுற்றி வளைத்து வருகிறது. சில நேரங்களில் விமானநிலையங்களில் ஆமைகளைக் கடத்திச் சென்ற சிலர் பிடிபட்டதாகச் செய்திகள் வருமே, அவற்றின் பின்னிருப்பது இது போன்றக் காரணங்களே.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படும் வாழ்விட அபாயங்கள், வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத விலங்குகள் விற்பனையின் காரணமாக இவற்றின் வாழ்வு கேள்விக்குறியாகிவுள்ளது. சுமார் 130-க்கும் மேற்பட்ட ஆமை வகைகள் அழியும் நிலையில் உள்ளதாகச் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆமைகளைக் காக்கும் வகையில், அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு மே 23-ம் தேதியன்று ‘உலக ஆமைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமைகள் பாதுகாப்புக்காக ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது அனுசரிக்கப்படுகிறது.

முடிந்தவரை கடல் மற்றும் நிலப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நல்லதொரு சுற்றுச்சூழலை உருவாக்க நம்மால் முடிந்தளவுக்குப் பாடுபடுவோம். அதன் வழியே உலகின் எங்கோ ஓரிடத்தில் வாழும் ஆமையின் ஆயுட்காலத்தையும் பாதுகாப்பையும் நீட்டிக்க உதவுவோம். ஏனென்றால், பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஆமைகள் இப்போது தான் எதிர்காலம் குறித்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளன. ஆமைகளாக வாழ்வது எளிதல்ல. எப்போதும் சொல்வது போல, அவையாக வாழ்ந்தால் மட்டுமே அது நமக்குத் தெரிய வரும்..

– மாபா

You might also like