மே 23: தேசிய சாலைப் பயண தினம்:
பாதுகாப்பான பயணம் என்பது எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்று. பொதுவாக பயணம் என்பது ஜாலியாகவும், ஒரு சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது.
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்வது முக்கியம்.
ஆடை முதல் அவரசர மருந்துகள் எல்லாம் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வைக்க வேண்டும்.
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் விதமாக, இன்று (மே 23) தேசிய சாலை பயண தினம் கொண்டாடப்படுகிறது.
பயணத்தின் போது நடக்கக்கூடிய அனுபவங்கள், சுவாரஸ்யங்கள், நாடுகள் மற்றும் நகரங்களுக்கான நெடுஞ்சாலைகள், இயற்கை சூழ்நிலைகள், மாறுபட்ட தட்பவெட்பங்கள், உணவு முறைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு என நிறைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது பயணங்கள்.
தேசிய சாலைப் பயண தினம் எப்போது தொடங்கப்பட்டது?
ஹொராடியோ நெல்சன் ஜேக்சன் (இவர் ஒரு மருத்துவர், ஆட்டோமொபைல் முன்னோடி). அவரிடம் ஒருவர் 90 நாட்களுக்குள் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நியூயார்க் நகருக்கு பயணிக்க முடியுமா என சவால் விட்டார்.
இதை முறியடிக்க மெக்கானிக் செவால் கே. க்ரோக்கர் மற்றும் பட் என்ற நாயுடன் சேர்ந்து 20 குதிரைத்திறன் கொண்ட வின்ஸ்டன் காரில் புறப்பட்டனர்.
இந்தப் பயணத்தின்போது ஏராளமான விபத்துக்களை சந்தித்தபோதும் சோர்வடையாமல் ஜாக்சனும் க்ரோக்கரும் 63 நாட்களில் தங்களது பயணத்தை முடித்தனர்.
அதன் பிறகு 1930-களில் அமெரிக்காவில் ரூட் 66 திறக்கப்பட்டபோது அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் வளர்ச்சி அடைய தொடங்கியதும் மக்கள் பயணம் என்பதை சுற்றுலாவாக பார்க்கத் தொடங்கினர்.
அதன் பிறகு பயணங்களை ரசிக்கவும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் மற்றும் ஜாலியான பொழுது போக்காக சாலைப் பயணம் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது.
ஒரு பயணத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது ஆகும். அப்படி போகும்போது பல விஷயங்களை கடந்தும், சிலவற்றை ரசித்தும், பல நேரங்களில் இன்பமாகவும் சில நேரம் துக்கமாகவும் அமையலாம். பயணங்கள் எப்படி அமையும் என்பது சூழ்நிலையே முடிவு செய்கிறது.
பயணங்கள் பற்றி வி.கே.டி. பாலன்
மதுரா டிராவல்ஸ் நிறுவனரும் சுற்றுலாத் துறையின் முன்னோடி மறைந்த கலைமாமணி வி.கே.டி பாலன் அவர்கள், பயணங்கள் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
அதில், எனக்கு எப்போதும் சாலைகளில் பயணம் செய்வதில் தான் ஆனந்தம். காரணம் விமானப் பயணத்தில் பயண அனுபவம் நமக்கு பெரிதாகக் கிடைக்கப்போவது இல்லை.
ஒரு மணி நேரத்தில் விரைவாகச் சென்றுவிட முடியுமே தவிர, மக்களோடு மக்களாக, அவர்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ளவே முடியாது. நான் எப்போது இரயிலில் பயணம் செய்தாலும் சாதாரண பெட்டியில் தான் பயணம் செய்வேன்.
ஏசி பெட்டியில் பயணம் செய்வதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன். செல்வாக்கு காரணமாக ஏசியில் அமர்ந்துகொண்டு தனிமையில் பயணம் செய்வதில் என்ன சுகம் கிடைத்து விடும்?
நாடு விட்டு நாடு என்றால் விமானம் சரியாக இருக்கும். நாட்டுக்குள்ளே என்றால் சாலைப் பயணம் தான் நான் விரும்புவேன்.
அப்படி பயணிக்கும்போது தான் ஊர்களையும், அங்கு இருக்கும் இயற்கை வளங்கள், காலச் சூழநிலைகள், கலாச்சாரம், மக்களின் மொழி, அவர்களின் வாழ்வாதாரம், நிறைகுறை என எல்லாவற்றையும் அனுபவித்து முழுமையாக பயணத்தின் பலனை அடைய முடியும்.
நெடுந்தூரம் பயணத்தின்போது மன அழுத்தம் குறைக்கப்படும்.
ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் சூழ்நிலை. இதனால் ஒற்றுமை நிலவும். குடும்பமாக, நண்பர்களாக பயணங்கள் செல்லும்போது, வளைவு நெளிவான சாலைகளை கடக்கும்போது வாழ்க்கையின் அர்த்தம் புலப்படும்.
நமது வாழ்க்கைக்கும் பயணங்களுக்கு நிறைய தொடர்புகள் உண்டு. வாழ்க்கை என்பது இன்பமாக மட்டும் எப்போதும் இருக்காது. அதுபோல் தான் பயணங்கள், இடங்கள் நகர்ந்து கொண்டே செல்லும்போது சூழ்நிலைகள் மாறுகின்றன.
சில நேரம் வளைவு, நெளிவான சாலைகள், கரடு முரடான இடங்கள் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றையும் கடந்தால் தான் பயணம் முழுமை பெறும். அதேபோல் தான் நமது வாழ்க்கையும், சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். இதைத்தான் நமக்கு பயணங்கள் கற்றுக் கொடுக்கிறது.
ஆகையால் சாலைப் பயணம் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கக்கூடியது. சவால்களை எதிர்கொள்ளவும், அதைக் கடந்து செல்லவும் பயணங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
ஆகையால் சாலைப் பயணம் போல் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியுடன் கடந்து செல்வோம் என வி.கே.டி பாலன் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார்.
நமது வாழ்க்கையும் பயணங்கள் போன்றதுதான். சில நேரம் பயமுறுத்தும், சில நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதை நினைவில் கொள்வோம்.
– யாழினி சோமு