இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர் எனவும் என்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என்றும் இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.