‘நெனச்சு நெனச்சு’ உருக வைத்த கவிதைகள் தந்த கபிலன்!

புதுச்சேரியில் பிறந்த கவிஞர் கபிலன், வளர்ந்தது சென்னை வியாசர்பாடியில். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம்.

இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னமோ, கபிலனுக்கு சென்னை தமிழ் பாடல்கள் கை வந்த கலை.

சிறு வயது முதல் கவிதை மேல் கொண்ட ஈர்ப்பால், சினிமாத்துறையில் கால் வைத்தவர், ‘உன் சமையல் அறையில்’ என மெலடி பாடல்கள் முதல், ‘மெரசலாயிட்டேன்’ என குத்து பாடல்கள் வரை, வெர்சடைல் ரைட்டர்.

’யூத்’ படத்தில் கேட்பவரையெல்லாம் சிம்ரனுடன் சேர்ந்தாட வைக்கும் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலை கபிலன் எழுதிய அந்த நிமிடத்தில் ‘இது என்ன தமிழ்… நல்லாவே இல்லை…’ என அருகில் இருப்பவர்கள் எல்லாம் தவிர்த்தபோது,

‘யூத்’ படத்தில் அப்போது பணிபுரிந்த மிஷ்கின்தான் “சென்னையின் அடையாளத்தை தொட்டுச் செல்லும் இந்தப் பாடல் நிறையப் பேசப்படும்’’ எனச் சொல்லி நிறைமொழிந்திருக்கிறார்.

அதே மிஷ்கின் இயக்க இளையராஜாவின் மழையிசையில் சித் ஶ்ரீராமின் ஜரிகைக் குரலில் கபிலன் நெய்து… மிகவும் புகழ் பெற்றிருக்கிறது ‘உன்ன நெனச்சு… உன்ன நெனச்சு…’ பாடல்.

இப்பாடலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்வையற்றவர்களுக்கு வாசமும், ஓசையும்தான் எல்லாமே. அதை இப்பாடலில் ‘வாசம் ஓசை இவைதான் எந்தன் உறவே’ என்று நுட்பமாக கபிலன் பதிவு செய்திருப்பதை காலம் தன் உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளும்.

நான் ’தினகரன்’ நாளிதழில் பணிபுரிந்தபோது அதன் இலவச இணைப்பான ’வசந்தம்’ இதழில் ’கானா’ பாடல்களைப் பற்றி எழுத விழைந்தபோது…

ஒரு சந்திப்பில் நானும், வே.மதிமாறனும் பேராசிரியர் பெரியார்தாசனை சந்தித்தபோது ‘’நம்ம கபிலன் ’கானா’ பாடல்களை ஆய்வுசெய்து எம்.ஃபில் பட்டம் வாங்கியிருக்கார். அவரைப் பாருங்கள்… நிறைய ‘கானா’ செய்திகள் கொட்டும்’’ என்றார்.

‘கானா’ தொடர்பாக கபிலனிடம் தொலைபேசியிலேயே உரையாடி… ஒரு பெட்டி செய்தியை ‘வசந்தம்’ இதழில் வெளியிட்டிருந்தேன். அப்போது இருந்தே கபிலன் என்றால் எனக்கு நட்பூக்கள் மலரும்.

நடிகர் விஜய் படங்களில் கபிலன் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். ‘ஆல் தோட்ட பூபதி நானடா’, ‘கில்லி’ படத்தில் ’அர்ஜுனரு வில்லு’, ‘போக்கிரி’ படத்தில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ’வேட்டைக்காரன்’ படத்தில் ’நான் அடிச்சா தாங்க மாட்ட’, ’கரிகாலன் காலப் போல கருத்திருக்கு குழலு’, மற்றும் ‘வாடியம்மா ஜக்கம்மா’, ‘மச்சான் பேரு மதுர’ போன்ற பாடல்கள் அத்தனையும் தமிழ் ரசிகர்களால் உச்சரித்து கொண்டாடும் உற்சவங்கள்.

சினிமாப் பாடல்களில் நாயக – நாயகனின் பிம்ப அசைவுக்கு…வரிமொழியும் வேலைதானே பாடலாசிரியர்களின் பணி என்று சட்டென்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கா.மு.ஷெரீப், உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ், சுரதா, வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து என்ற தமிழ் சினிமாவின் பாடலாசிரியச் சங்கிலித் தொடர் வரலாற்றில்… தனக்கு கிடைத்த நல்வாய்ப்புகளில் எல்லாம் உள்புகுந்து தன்னுடைய கனமானக் கருத்துகளை மேற்கண்ட பாடலாசிரியர்கள் நடவு செய்ய தவறவே இல்லை.

அதைப் போலத்தான் கபிலனும்…

‘மழைக் காலத்தில் குடிசை எல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்… வெயில் காலத்தில் குடிசை எல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்… சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப் புள்ள… பட்டதெல்லாம் எடுத்துச் சொல்ல பட்டப் படிப்பு தேவ இல்ல… 

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து

– என்று தனது சமூகச் சிந்தனையை கபிலன் ‘போக்கிரி’ படத்தில் பதிவு செய்திருப்பது அத்தனையும் நீதி நெறி. ஆம்… சமூக நீதிநெறி

இதைப்போலவே – ‘என்ஜிகே’ படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பார் கபிலன். அப்பாடலுக்கு இடையே கபிலனின் தூவல் உள்நுழைந்து… ‘ஊரும் சேரியும் ஒண்ணா இல்லையே நம்ம நாட்டுல – காதல் செய்தால் ஆளை வெட்டுறான் நடு ரோட்டுல..!’ என எழுதியிக்கும், சமூகக் கோபம் கொப்பளிக்கும் கபிலனின் இந்தத் தமிழுக்குள் ஆணவக் கொலைக்கு எதிரான நிலக்கரி நெருப்பிருந்தது.

‘உணவு உடை இருப்பிடம் உழவனுக்குக் கிடைக்கணும் அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்!’ என ‘வேட்டைக்காரன்’ படத்தில் கபிலனின் செதுக்கல்… அடிவயிற்றில் துளிவெளிச்சம் தூக்கிப் பறக்கும் மின்மினி வரிகளாகும்.

‘வில்லு’ படப் பாடலில்… ‘இந்தி திணிப்பு வேணாம்டி கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டி’ என்ற கபிலனின் மைத்துளிக் கோலம் இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கச்சாப்பொருளாகும்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா..’ என்ற பாடலும்,

‘பாய்ஸ்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித்ராவும், கார்த்திக்கும் பாடிய ’அலெ அலெ அலே அலே… எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது பறவைகள் இருந்தும் பறவையானது… விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது… பருவங்கள் இறங்கி மீசை ஆனது ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்… ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்… கற்கண்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்… நான் தண்ணீரில் மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்… காதல் சொன்ன கணமே… அது கடவுளைக் கண்ட கணமே… காற்றாய் பறக்குது மனமே’ என்ற பாட்டு வரிகள் அத்தனையும் நாட்டு சர்க்கரை.

கபிலனின் அசத்தும் பாடல் வரிகளில் என மனவெளியில் முதல்பக்க ’எட்டுக்கால தலைப்புச் செய்தி’யாக எப்போதும் இருப்பது ’தில்’ படத்தில் ஹரீஷ் ராகவேந்திராவும் ஹரணியும் இணைந்து பாடிய ‘உன் சமையல் அறையில்… நான் உப்பா சர்க்கரையா’ என்ற பாடலும்,

‘அஞ்சான்’ படத்தில்.. ’காதல் ஆசை யாரை விட்டதோ, உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரைத் தொட்டதோ… காதல் தொல்லை தாங்கவில்லையே… அதைத் தட்டிக் கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே… யோசனை மாறுமோ பேசினால் தீருமோ… உன்னில் என்னைப் போல காதல் நேருமோ… ஒரு குழந்தையின் மகிழ்ச்சியைப் போலவே உனை விடுமுறை தினமென பார்க்கிறேன்’ என்ற படப்பாடலும்தான்.

இவை அத்தனையும் கபிலனின் திரைப்பட பங்களிப்புகள். இவர் மிகச்சிறந்த நவீனக் கவிஞர் என்பது தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த பக்கங்கள்.

‘தெரு ஓவியம்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்பு மிகவும் பேசப்பட்ட புத்தகம். தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் கபிலனின் தமிழ்… அத்தனையும் ருசியாமிர்தம்தான். 

– மானா பாஸ்கரன்

நன்றி: இந்து தமிழ் திசை 

You might also like