கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார். கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். மாதந்தோறும் அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து வந்தார்.
இது தவிர, கலைஞர்களின் பிற பணத் தேவைகளுக்கும் உதவி செய்து வந்தார் கலைவாணர். புளிமூட்டை ராமசாமி, டி.எஸ்.துரைராஜ், எஸ்.என்.லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தது.
பாடல்கள் எழுதுவதற்கு உடுமலை நாராயணகவிராயர், கதை விவாதத்திற்கு வில்லிசைவேந்தர் சுப்பு ஆறுமுகம் உட்பட ஒரு பெருங்கூட்டமே இருந்தது. கலைவாணரின் டி.கே.எஸ். நாடகக்குழுவில் இருந்து வந்தவர் ராமசாமி.
ஒருமுறை பட வாய்ப்புகள் இன்றி வறுமையில் இருந்தார் ராமசாமி. அப்போது கலைவாணர் ‘’நவீன விக்கிரமாதித்தன்’’ படம் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் ராமசாமி தெருவில் வருவதைக் கவனித்துவிட்ட கலைவாணர், தெருவாசலுக்கே ஓடிப்போய் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.
‘‘அசோகா பிலிம் கம்பெனின்னு நீங்க ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேளாமே? அடியேன் இப்போது எந்த ஜோலியும் இல்லாது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்க கம்பெனியில் அடுக்களையில் ஒரு சமையல்காரர் வேலை கொடுத்தாக்கூட போதும்’’ என்று கண் கலங்கியபடி சொன்னார் ராமசாமி.
ராமசாமி இப்படி சொன்னதும் கலைவாணருக்குக் கண்கள் கலங்கியது. ‘’என்னாப்பா… நீயும் ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன். அப்படி இருக்கும்போது நீ மட்டும் சமையல் வேலை ஏனப்பா செய்யணும்? நீயும் என் கம்பெனியிலே நடிகனாகவே இரு’’ என்று கூறினார் கலைவாணர்.
ராமசாமி சமையலிலும் நிபுணர். இது கலைவாணருக்குத் தெரியும். ஆனாலும், அவரை மதித்து நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். ராமசாமியின் உருவம் பெரியது. அதற்கு ஏற்றார் போல் குரலும் கம்பீரமாக இருக்கும். ராமசாமி பேசும்போது அவரது அங்கங்கள் ஆடும். இது கலைவாணருக்குப் பிடிக்கும். அதற்காகவே அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் தருவார்.
1941-ல் கலைவாணர் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ திரைப்படத்தில் ராமசாமிக்குத் திருடன் வேடம் வழங்கப்பட்டது. ஒரு நாள் படப்பிடிப்பில் திருடனுக்குரிய ஒப்பனையோடு ராமசாமி நடித்துக்கொண்டிருந்தார். கதை அமைப்பின்படி திருடர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லையே என்று அருகில் இருந்த நடிகரிடம், ‘’எங்கே அந்தப் புளிமூட்டை’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
அப்போது ராமசாமியும் இதோ இருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே, கட்டிலுக்கு அடியில் இருந்து வெகு சிரமப்பட்டு தனது உடம்பை வளைத்து வெளியே வந்தார். கலைவாணர் அன்று அந்தக்காட்சிக்காக வேடிக்கையாக புளிமூட்டை என்று சொன்னதை பலரும் வேடிக்கையாக அடிக்கடி சொல்லி வந்தார்கள். அதிலிருந்து ராமசாமியின் பெயரே ‘புளிமூட்டை ராமசாமி’ என்று நிலைத்து, அதுவே அவரைப் பிரபலப்படுத்திவிட்டது.
- நன்றி : முகநூல் பதிவு