பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!

பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்.

முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு இதற்கு சட்ட ரீதியான தண்டனை கிடைத்திருக்கிறது.

இதில், அப்போதைய ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரும் கைதாகி இருக்கிறார்.

வழக்கு விசாரணை முடிந்து குற்றவாளிகள் சேலம் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். தமிழக முதல்வரிலிருந்து வெவ்வேறு கட்சித் தலைவர்கள், மகளிர் இயக்கங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கின்றன.

ஆனால், மிகக் கொடுமையான இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவர், அந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 19 வயதான ஒரு இளம்பெண்.

அந்தப் பெண் கொடுத்த ஒரு புகாரின் பெயரிலேயே அடுத்தடுத்த நடவடிக்கைகள் சாத்தியப்பட்டிருக்கின்றன.

எந்தப் பாலியல் வழக்காக இருந்தாலும், அது எந்த ஆட்சியில் நடந்தாலும், யார், எந்த அதிகாரம் சார்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருந்தாலும், பாதிக்கப்பட்டப் பெண் துணிந்து புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற ஒரு நம்பிக்கையை பொதுவெளியில் இந்தத் தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது.

இந்தப் பொள்ளாச்சி வழக்கிற்கு மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சில சம்பவங்களுக்கும், பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் சரியான விசாரணை நடந்து அவர்களும் இதேவிதமாக சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற ஒரு முன்மாதிரியான தீர்ப்புகள் பொதுவெளியில் வெளிவருவது பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

அதே சமயத்தில் இதுமாதிரியான கொடுமையான நிகழ்வுகளை நிகழ்த்துகிற இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் இத்தகைய தீர்ப்பு அமையட்டும்.

You might also like