மே 15 – சர்வதேச குடும்ப தினம்
ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பந்துகளை இடைவிடாது மேலே வீசியும் பிடித்துக்கொண்டும் வித்தை காட்டுகிறவரைக் கண்டால் நமக்கு வியப்பு மேலிடுவது உறுதி. தட்டு, டம்ளர், பௌலிங் பின் என்று எதை வேண்டுமானாலும் அவர் தூக்கி விசுவதாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் லாவகமாகக் கையில் பிடிக்கிற அந்தக் கவனம் தான் எப்போதும் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.
கிட்டத்தட்ட அப்படியொரு ஆச்சர்யத்தை நாமும் தினமும் நிகழ்த்தி வருகிறோம். அதாகப்பட்டது, ‘குடும்பஸ்தன்’களாக இருக்கிற ஒவ்வொருவரும் இதனை உணர முடியும். குடும்பம் என்ற அமைப்பில் பெண்களுக்கு சமபங்கு இல்லையா? அதென்ன ‘குடும்பஸ்தன்’ என்று குறிப்பிடுகிறீர்கள் என்ற கேள்வி எழலாம். ‘மாணவ மாணவியர்’ என்பதற்குப் பதிலாக ‘மாணவர்கள்’ என்று குறிப்பிடுவதில்லையா..! அதைப் போல இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனைச் சொல்லக் காரணம் என்ன? ஒரு சமூகம் சுமூகமாக இயங்க, ஒரு மனிதன் மிகச்சரியான மனநலத்தைப் பேண, அது ஆண்டாண்டு காலமாகத் தொடர ‘குடும்பம்’ என்ற அமைப்பே நம் கண் முன்னே இருக்கிற ஒரே வழியாக இருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்தும், இதற்கான எதிரான வழி ஒன்றை ‘எதிராளிகளால்’ முன்வைக்க முடிந்ததில்லை.
அப்படிப்பட்ட குடும்பத்தைச் சரி வர நடத்துவதில், அந்த அமைப்பின் சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்தத்தான் எத்தனை போராட்டம்?
குடும்பத்தில் பிரச்சனையா?
‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’ என்று ‘வின்னர்’ படத்தில் வடிவேலு சொல்வது போல, பிரச்சனைகள் இல்லாத குடும்பங்கள் என்று இந்த உலகில் எதுவுமில்லை. ஆளுக்குத் தகுந்தாற்போல, ஒவ்வொரு குடும்பத்திலும் அவற்றின் அளவுகள் வேறாக இருக்கும். ஆனால், அவை நிச்சயம் இருக்கும். அதில் மாற்றுக்கருத்தில்லை.
அப்படிப் பிரச்சனைகள் வருகிறபோது, கணவன் மனைவியர் இருவரும் சுமூகமாகப் பேசித் தீர்க்கப் பழக வேண்டும். அதன் வழியே தீர்வு எட்டப்பட வேண்டும். அந்தத் தீர்வு சில வீடுகளில் ஒருதரப்பு முடிவாக இருக்கக்கூடும். எது எப்படியாயினும் அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகரப் பழகிய குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.
மிக முக்கியமாக, பெற்றோரின் சண்டையைக் கண்டு பிள்ளைகள் மனம் வெதும்புகிற நிலையை ஒருபோதும் உருவாக்கிவிடக் கூடாது. ‘சண்டை போடாதீங்க ஏட்டையா’ என்று அவர்களே ‘கமெண்ட்’ அடிக்கிற அளவுக்குத்தான் அவற்றின் தீவிரம் இருக்க வேண்டும்.
சரி, பொதுவாகக் குடும்பங்களில் வரும் பிரச்சனைகள் எத்தகையவை? இந்த டாபிக் பற்றி விவரிக்கத் தொடங்கினால் பல பாகங்கள் எழுத வேண்டியிருக்கும்.
சமநிலை பேணுவோமா..?!
‘நானே தினசரியும் எந்திரிச்சி டீ/காபி போடணுமா’, ‘வீட்டை ஒழுங்கா வைக்கத் துப்பில்ல ஒருத்தருக்கும்’, ‘ஒவ்வொரு மாசமும் சம்பளம் வந்தவுடனே காணாமப் போயிடுற அளவுக்கு அப்படி என்னதான் செலவு பண்ணுவீங்களோ’ என்று வகைவகையான புலம்பல்களை ஒவ்வொரு குடும்பத்திலும் காண முடியும்.
சில வீடுகளில் இது தீவிர நிலையை அடைந்து, ‘அப்படியே தலையைப் பிய்ச்சுக்கலாம் போல இருக்கு.. இந்தக் குடும்பத்தை விட்டு நான் எங்கயாவது போயிடுறேன்’ என்று சொல்கிற எல்லையைத் தொடும். இதில் ஆண், பெண் பேதமில்லை.
’இவங்க தொல்லை தாங்க முடியலேப்பா’ என்று சிரித்தவாறே அலுத்துக் கொள்வதற்கும், விரக்தியின் உச்சத்தில் ஆத்திரத்தை மடைதிறந்துவாறு கொட்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த இரு வேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இப்படிப் புலம்புபவர்கள் ‘குடும்பம்’ என்ற அமைப்பை உதறினால் அடுத்த நொடியே உடைந்து சுக்குநூறாகிப் போவார்கள். ஏனென்றால், ஒட்டடை தாங்கி நிற்கிற பாழடைந்த கட்டடமாகவே அவர்களது வாழ்வில் ‘குடும்பம்’ இருந்திருக்கும்.
மாறாக, அந்த குடும்பத்தைச் சரிவரப் பேண என்ன செய்ய வேண்டும்? உண்மையைச் சொன்னால், இதற்கான தீர்வு இதுதான் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனாலும், அவரவர் அனுபவங்களில் இருந்து, அறிவில் இருந்து சிலவற்றைச் சொல்கின்றனர். அதனால், சிலர் பலன் பெற்று வருகின்றனர் என்பதே உண்மை.
பல குடும்பங்களில் பிரச்சனைகள் வரக் காரணமே ‘சமநிலை பேணாமை’தான்.
‘வேலைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்துல கொஞ்சமாவது வீட்டுக்கும் கொடுங்க; நானும் பிள்ளைங்களும் உங்களுக்காகத்தானே இங்க இருக்கோம்’ என்கிற பெண்களை அவர்கள் வீட்டு ஆண்கள் நிறையவே கண்டிருப்பார்கள். போலவே, இல்லத்தரசிகளின் செயல்பாடுகளால் பொருமுகிற இல்லத்தரசர்களும் நிறையவே இவ்வுலகில் உண்டு.
பணி மற்றும் குடும்பத்தின் சமநிலையைப் பேணினால், மேற்சொன்ன பிரச்சனைகள் சரிபாதியாகக் குறைந்துவிடும்.
வேலை முடிந்து வீடு திரும்பியபிறகும், அது பற்றியே பேசுவது, அது தொடர்பான வேலைகளில் ஈடுபடுவது, எந்நேரமும் அதையே சிந்திப்பது என்றிருப்பவர்கள் நிறைய. அந்த வீடுகளில் உள்ள குழந்தைகளுக்குத் தாய் தந்தையரோடு நேரம் செலவழிக்க முடியாத வருத்தம் இருக்கும். கணவரோ அல்லது மனைவியோ, ‘சில சினிமாக்கள்ல வர்றது மாதிரி ஜாலியா சிரிச்ச மாதிரி வாழ்ந்தா எவ்ளோ நல்லா இருக்கும்’ என்று சிந்திப்பார்கள்.
மிக முக்கியமாக, வெளியிடங்களுக்குக் குடும்பத்தோடு சென்று குதூகலிக்க முடியாத கவலைகள் பலரிடம் கொட்டிக் கிடக்கும். இது போக உறவுகள், நட்புகளோடு சரிவரத் தொடர்பில் இருக்க முடியாமல் போவது சம்பந்தப்பட்ட மனிதர்களின் தினசரிச் செயல்பாடுகளில் சுணக்கங்களை ஏற்படுத்தும். இப்படிப் பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருப்பது, செய்கிற வேலைக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே போதிய எல்லை வகுக்கப்படாமல் தவிர்ப்பதுதான்.
அதனைச் சரி செய்வதென்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எது எப்படியாயினும், ஒரு நாளில் சில துளிகளையாவது நம் வீட்டிலுள்ள மனிதர்களுக்காகச் செலவழித்தாக வேண்டியது கட்டாயம். பெரியவர்களிடத்தில், குழந்தைகளிடத்தில், இதர உறவுகளிடத்தில் ஒருமுறையாவது உரையாடிவிட வேண்டும். அதுவும் வாழ்க்கைத் துணையிடத்தில் அதனைச் செய்யாமல் விடுவதென்பது, நமக்கு நாமே குழி தோண்டிவிட்டு அதனுள் படுத்துக் கொள்வதற்குச் சமம்.
இதேபோல, ஒரு குடும்பத்திலுள்ள பொறுப்புகளை ஆண், பெண் இரு பாலரும் பகிர்ந்துகொள்வது மிக அவசியம். ‘இதை நீ பார்த்துக்கோ, இதை நான் செஞ்சுடுறேன்’ என்று கணவனும் மனைவியும் பணிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, குழந்தைகளுக்கு அப்பணிகள் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஆண் குழந்தை, பெண் குழந்தை பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்யப் பழக வேண்டும் என்பதைப் பிசகின்றி உணர்த்த வேண்டும்; அவர்களைச் செய்யுமாறு பணிக்க வேண்டும்.
கடைகளுக்குப் போய் பொருட்களை வாங்குவதில் தொடங்கிப் பாத்திரம் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, துவைப்பது, சமைப்பது, வெளியிடங்களுக்கு வாகனங்களில் பயணிப்பது என்று நம் வாழ்விடம், வாழ்க்கை சார்ந்த அத்தனை பணிகளிலும் அவரவர்க்கான பங்கைச் செய்தே தீர வேண்டும் என்பதைப் புரிய வைத்திட வேண்டும்.
’தொடர்ந்து இயங்குகிற ஒரு எந்திரத்திலேயே ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் வருகிறபோது, குடும்பத்திலும் பிரச்சனைகள் வரும் போகும்’ என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பிரச்சனைகள் உருவாவதும் அவற்றுக்குத் தீர்வு கண்டறிவதும் தான் வாழ்வைச் சுவாரஸ்யப்படுத்தும் என்பதைச் சொல்லித் தந்துவிட்டால், ‘தீர்வு கண்டறிவதை’ வாழ்க்கை முழுக்கவே ஒரு விளையாட்டைப் போலக் கருதப் பழகிவிடுவார்கள் குழந்தைகள். அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் அதனை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவார்கள்.
அது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒரு விஷயம். உரிய நேரத்தில் அதனைச் செயல்படுத்துவது மட்டுமே நம் முன்னே வைக்கப்படுகிற கட்டளை.
சமூகத்தில் இருந்து உலகிற்கு..!
ஒரு குடும்பம் தன்னைத்தானே சரி செய்துகொண்டு, சரியாகச் செயல்படுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இந்தச் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
பொதுச்சமூகத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல் சீரமைப்பு, சக மனிதர்களுடனான சுமூக உறவு, எதிர்காலத் தலைமுறைக்கான வழிகாட்டல் என்று தொடங்கி ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாடுகளைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு மனிதர்க்கும் குடும்பத்திற்கும் பங்குண்டு.
அதனால்தான், எந்தவொரு பெரிய மாற்றமும் தனிமனிதரில் இருந்து, அவரைச் சார்ந்த மனிதர்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நாடு மட்டுமல்லாமல் இந்த உலகம் சிறப்பாக இயங்குவதற்கும் அமைதியான, சீர்மை மிகுந்த, சிறப்பான ‘குடும்பங்கள்’ வேண்டியிருக்கிறது.
அதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 15-ம் தேதியன்று ‘சர்வதேச குடும்ப தினம்’ கொண்டாடுவதென்று ஐநா சபையில் முடிவு செய்யப்பட்டது. 1993-ம் ஆண்டு முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்பம் தொடர்பான பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கிற சமூக, பொருளாதார, வாழ்விடச் செயல்முறைகள் சார்ந்த விழிப்புணர்வை ஊட்டுகிற விதமாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
’குடும்பங்கள் மற்றும் பருவநிலை செயல்பாடு: ஒரு நிலையான எதிர்காலத்தைக் கட்டமைப்போம்’ என்பது இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச குடும்ப தின’ கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
அன்பும் அக்கறையும் ஒற்றுமையும் மிகுந்ததாகக் குடும்பங்கள் திகழ வேண்டும். அவ்வாறு விளங்குகிற குடும்பங்களால் உலகமே ஒரு குடையின் கீழ் தானாக வந்து சீராக இயங்கும். அதனை நோக்கிய பயணத்தில் எத்தனை சதவிகிதம் வெற்றி கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது.
’ஒரு குடும்பம் சிறந்ததாக இருக்க வேண்டியது அவசியமில்லை, அது ஒற்றுமையுடன் இருந்தாலே போதும்’ என்பது உட்படப் பல வாசகங்கள் குடும்பங்களின் சிறப்புகளைச் சொல்ல உண்டு. நம் ஒவ்வொருவராலும் அப்படிப் பல வரிகளைச் சொல்ல முடியும்.
அனைத்தையும் ஒன்றிணைத்துச் சொல்ல வேண்டுமானால், ‘ஒரு வீடு நல்லாயிருந்தா தான் இந்த உலகமே நல்லாயிருக்கும்’ எனலாம். அப்படியொரு நிலையை எட்ட, நம் குடும்பத்தின் சிறப்பை உணர்ந்து, தெளிந்து, அதனை நாம் கொண்டாடுவோம். குடும்பஸ்தர்கள் கொண்டாடுகிற குடும்பமாகத் திகழ்வோம். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியோடு களிப்போம்..!
– உதய் பாடகலிங்கம்