சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் ஞானக் குழந்தை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
சச்சின் டெண்டுல்கரே தனது 14 வயதில்தான் கிரிக்கெட் உலகில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், இந்த சுட்டிக் குழந்தை 14 வயதிலேயே தன் பேட்டிங் மந்திரத்தால் கிரிக்கெட் ரசிகார்களைக் கட்டிப் போட்டிருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த குட்டிப் புலி.
காலில் ஏற்பட்ட காயத்தால் சக்கர நாற்காலியில் நகர்ந்துகொண்டிருக்கும் ராகுல் திராவிட்டே எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் அளவுக்கு மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
இதானால், யார் இந்த சூர்யவான்ஷி என்ற கேள்வி கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் எழுந்திருக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷி பீஹார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் 2011-ம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயது முதலே வைபவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம்.
இதைப் பார்த்த அவரது தந்தை, 5 வயதாக இருக்கும்போதே வைபவை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்திருக்கிறார். அன்றிலிருந்து வைபவுக்கு எல்லாமே கிரிக்கெட் என்று ஆகிவிட்டது.
2023-ம் ஆண்டில் தனது 12-வது வயதில் கூச் பிஹார் கோப்பைக்கான போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அந்த ஆண்டிலேயே 6 மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் மூத்த வீர்ர்களுடன் ஆடி எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறார்.
கவாஸ்கர், சச்சின் என்று இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் சாதனைத் தளமாக விளங்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான் வைபவையும் இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் அடித்துப் பலரையும் கவர்ந்தார்.
அந்த கவர்ச்சிதான் ஐபிஎல் ஏலத்தில் அவரை ராஜஸ்தான் அணி 1.10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கக் காரணமாக இருந்திருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கிய பெருமை ராகுல் திராவிட்டுக்கு உண்டு.
கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் ராகுல் திராவிட்டின் பயிற்சிதான்.
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் என பல வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பட்டைத் தீட்டப்பட்டவர்கள். அந்த வரிசையில் இப்போது வைபவ் சூர்யவன்ஷியைப் பட்டைத் தீட்டி இருக்கிறார் ராகுல் திராவிட்.
நேற்றைய போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, இது மிகவும் நல்ல உணர்வு. இது ஐ.பி.எல்-லில் எனது முதல் சதம். அதுவும் எனது மூன்றாவது இன்னிங்சிலேயே வந்தது சிறப்பானது.
இந்தப் போட்டிக்கு முந்தைய என்னுடய பயிற்சியின் விளைவு இங்கே காட்டப்பட்டுள்ளது. நான் பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.
ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்வது நல்லது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்கிறார். மேலும் அவர் நேர்மறையான விஷயங்களை எனக்குள் செலுத்துகிறார்.
ஐ.பி.எல்-லில் 100 ரன்கள் எடுப்பது கனவாக இருந்தது. இன்று அது நிறைவேறியுள்ளது.
எனக்கு பயம் கிடையாது. நான் அதிகம் யோசிக்கவில்லை. நான் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் சச்சின் செய்துள்ள சாதனைகளை இந்தக் குட்டிப் புலி முறியடிக்கும் என்று நம்புவோம்.
– பிரணதி.