நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!

ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மகாபாரதம், ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார்.

இவர், இந்தியப் பாரம்பரியக் கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார்.

பெண்களை தெய்வீகமாக சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார்.

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா பற்றியும் அவரது ஓவியங்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள்….

அரச குடும்பம் :

கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். வீட்டில் இசை, ஓவியம் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார்.

இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான ராஜா ராஜவர்மா காரணம். அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .

சிக்கல் :

இந்திய ஓவியங்களில் உள்ள சிக்கல் அதில் உபயோகிக்கப்படும் வண்ணங்கள். மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன.

ஓவியங்கள் காலப்போக்கில் மங்குவது இதனால் நடக்க ஆரம்பித்தது. வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி கற்றுத்தந்தார். தைல வண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரியிடமும் அறிந்து கொண்டார்.

ஆயில் பெயிண்டிங் தெரிந்த ஒரே நபரான மதுரையைச் சேர்ந்த ஓர் ஓவியர் அதை சொல்லித்தர மறுத்துவிட்டார். அவரின் சீடர் ஆறுமுகம் இரவோடு இரவாக இவருக்கு அதன் நுணுக்கங்களை சொல்லிவிட்டுப் போனார்.

தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் “ஆயில் பைன்டிங்” எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார்.

நுணுக்கமான மாற்றங்கள்:

எண்ணற்ற புராண கதாப்பத்திரங்களை ஓவியங்களாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இன்றைக்கு நம் வீட்டுக் காலண்டரில் இருக்கக்கூடிய சாமிப்படங்கள் எல்லாம் இவரது ஓவியத்தின் தாக்கம் என்றே சொல்லலாம்.

இந்தியாவின் செறிவான வண்ணங்கள் அழகியல் ஆகியவற்றோடு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஐரோப்பிய முறையைக் கலந்து கொண்டார்.

இயல்பான இயற்கைச் சூழலில் இந்திய தெய்வங்களை அவர் வரைந்தது பலரைக் கவர்ந்தது. அவரின் ஓவியங்களில் தெய்வங்களை கோயில்களில் இருக்கும் சிலையைப்போல வரைவதை அவர் தவிர்த்தார்.

சேலை அணிந்த அழகிய தென்னிந்திய பெண்களை மாதிரியாக கொண்டு தெய்வங்களை வரைந்தார்.

தனி தபால் நிலையம் :

ஓவியம் என்பது ஒருவரோடு போய்விடக்கூடாது என்பதற்காக ஒலியோகிராபி பிரஸ் ஒன்றை மும்பையில் ஆரம்பித்தார். அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்றால் அவரின் ஓவியங்களை கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே அவர் ஊரில் ஒரு தனி அஞ்சல் நிலையம் திறந்தார்கள்.

சாந்தனு மற்றும் சத்யவதி :

இந்தக் கதாப்பாத்திரங்கள் மகாபாரதத்தில் வருகிறது. ஓவியத்திறமை மட்டுமல்ல மிகவும் வினோதமான கற்பனைத் திறனும் கொண்டவர் ராஜா ரவி வர்மா.

கடவுளை மனித வடிவில் சித்தரித்து மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக காட்டியது ராஜா ரவி வர்மா தான்.

துவக்கத்தில் பெண் தெய்வங்களை அரை நிர்வாணமாக காட்டுவதாக பயங்கரமான குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தன் ஓவியங்களின் மீது அசாரத நம்பிக்கை வைத்து எந்த மாற்றமும் செய்யவில்லை.

பெண்கள் :

ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தில் மிகவும் பிரசத்தி வாய்ந்தது பெண்களின் ஓவியங்கள் தான். அதனை ஆர்டிஸ்டிக்காக பார்க்காமல் தத்ரூபமாக அதாவது இன்றைக்கு நாம் கேண்டிட் என்று சொல்லப்படக்கூடிய யதார்த்தமான காட்சிகளாக உருவகப்படுத்தினார். இது ஓவியத்தை எல்லாரும் ரசிக்கும்படியாக மாற்றியது.

ரவி வர்மா தன் ஓவியத்தில் எமோஷன்களை அதிகம் வெளிப்படுத்தினார். கோபம், மெய்மறந்து நிற்பது அல்லது ரசிப்பது, ஒருவரின் தனித்திறமையை பறைசாற்றும் விதமாகவும் அவரது ஓவியங்கள் இருந்தன.

அந்த ஓவியத்தின் மூலமாக அங்கு நடந்துக் கொண்டிருக்கும் காட்சிகளை நம்மால் விவரிக்க இயலும்.

இயற்கை :

ரவி வர்மா தன் ஓவியத்தில் அதிகமாக இயற்கைக் காட்சிகளை இடம்பெறச் செய்தார். கொட்டும் அருவி, அடந்த காடு, ஓடும் ஆறு, பூத்துக்குலுங்கும் செடி கொடிகள் என பசுமைக் காட்சிகளுக்கு மத்தியில் ஓவியக் கதாப்பத்திரம் நிற்பது போல இருக்கும். அல்லது இயற்கையை காட்சியை ரசித்துக் கொண்டிருப்பது போல ஓவியம் இருக்கும்.

மூன்று வகை :

ரவிவர்மாவின் ஓவியங்களை மூன்று வகையாக வகைப்படுத்தலாம். உருவச் சித்திரம், உருவச்சித்திரம் சார்ந்த படைப்புகள், புராண மற்றும் சரித்திரக்கதைகள் சார்ந்த காட்சிப் படைப்புகள்.

ந்தியப் புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவர் கொண்ட நாட்டமும் மேலும் அவற்றைக் காட்சிப்படுத்த அவர் கையாண்டிருக்கும் பாங்கும் தனித்துவமானது.

பெண்மையைக் கொண்டாடும் பாங்கிலும் ரவி வர்மா இணையில்லாதவர். பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களை உடைய ராணி லக்ஷ்மிபாயின் ஓவியம், அனைவரும் வியக்கும் அன்னமும் தமயந்தியும், பதற்றம் மிக்க சைரந்திரியான திரௌபதி, மையலும் நாணமும் சேர்ந்த மத்சஸ்கந்தா, தனது மகனை ருக்மாங்கதனிடம் கொல்லச் சொல்லும் மோகினி,

கவலையும் அழுகையுமாய் கணவனால் விற்கப்பட்ட சந்திரமதி, வெகுளியான பால்காரப் பெண்ணின் நீர்ம ஓவியம், கம்பீரமான முகத்துடன் கள் விற்கும் மலையாளப் பெண் போன்ற பல்வேறு வாழ்க்கைப் பின்னணியிலுள்ள பாரதப்பெண்களின் முகங்களை இயல் ஓவியமாக தீட்டிய பெருமை இவரையே சாரும்.

ஆயில் பெயிண்டிங் :

ரவி வர்மாவின் ஓவியங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம், இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு எல்லாரும் ஓவியம் வரையும் காலத்தில் அது காலப்போக்கில் அழிந்து விடும் என்பதையறிந்து ஆயில் பெயிண்டிங் முறையில் ஓவியத்தை வரைந்ததும் காரணம் என்றே சொல்லலாம்.

இத்தாலியக் கலை :

மகாராஜா தயவினால் இத்தாலிய ஓவியர்களின் அறிமுகம் கிடைத்தது. துல்லியமான எண்ணெய் வண்ண நுட்பங்களை கற்க முடியாவிட்டாலும் இத்தாலிய ஓவிய முறைகளை கற்றுத் தேர்ந்தார். மகாராஜாவைப் பார்க்க ஐரோப்பிய ஓவியரான தியோடர் ஜென்சன் என்பவர் வந்திருந்தார். 

ரவி வர்மாவும், ஜென்சனும் மகாராஜா மற்றும் மகாராணியை வரைந்தார்கள். அப்போதே ரவி வர்மாவின் ஓவியம் தான் சிறப்பாக இருக்கிறது என்று புகழப்பட்டது. ஜென்சனும் எங்கே ரவி வர்மா தன்னை விஞ்சி விடுவாரோ என்று சொல்லி எண்ணெய் வண்ண ஓவியக் கலையை கற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

ஆனால் தான் வரையும்போது உடனிருந்து பார்க்க அனுமதித்தார். இப்படி உடனிருந்து கவனித்தே எண்ணெய் வண்ண ஓவியங்களின் நுட்பத்தை அறிந்து கொண்டார்.

ஓவியங்களின் மாதிரி :

திருவாங்கூர் அரண்மனைகளில் இருந்த பெண்கள், ஆடவர்கள் ஆகியோரை மாதிரியாக நிறுத்தி ஓவியங்களை வரைந்தார். அரண்மனையில் இருந்தவர்கள் அணிந்த ஆடை ஆபரணங்களையே தன் ஓவியக் கதாப்பாத்திரங்களுக்கும் சூட்டி அழகு பார்த்தார்.

சுகுணா பாய் என்கிற மகாராஸ்டிர பெண்மணி தான் ரவிவர்மா வரைந்த லஷ்மி, சரஸ்வதி ஓவியங்களுக்கு மாதிரியாக இருந்தவர்.

ரவி வர்மா ஓவியம் வரைவது கூட தனித்துவமானது. விடியும் முன்னரே எழுந்து விடியும் வரை காத்திருந்து ஓவியத்தை வரைய ஆரம்பிப்பார். எப்போதும் இளந்தளிரான வெற்றிலையை மென்றபடி தான் வரைவார். ஓவியம் வரையும் போது மூக்குப் பொடி பயன்படுத்துவதும் உண்டு.

  • நன்றி : போல்ட் ஸ்கை இதழ் 
You might also like