எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!

அருமை நிழல்:

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது.

“வடநாட்டில் சங்கர் – ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது” என்று, தன்னுடைய ‘பணம்’ என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் ராமமூர்த்தி – விஸ்வநாதன் என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.

அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.

இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக ஆயிரம் படங்கள் வரை இசையமைத்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது. எகிப்திய இசையைப் ‘பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை ’நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை ’யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் ’கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை ’முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.

இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர்தான்.

நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும், ‘கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ’காதல் மன்னன்’, ’காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர்.

இதழ் ஒன்றில் தனது பெற்றோர் பற்றி பகிர்ந்து கொண்ட எம்.எஸ்.வியின் மகள் லதா மோகன், “அப்பா ரொம்ப குழந்தை மாதிரி. குறும்புத்தனங்கள் அதிகமாக பண்ணுவார். வீட்டில் அவர் பண்ற ரகளை தாங்க முடியாமல், என் அம்மா சிரித்துக் கொண்டே இருப்பார்.

‘ஏம்மா இப்படி எல்லாத்துக்கும் சிரிக்கிற, அப்பா கோபம் படப்போகிறார்’ என்று நான் கேட்பேன். ‘என்னடி பண்றது, அவர் பண்ற கோமாளித்தனத்தில் சிரிக்காம இருக்க முடியல’ என்று அம்மா சொல்லுவாங்க” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

குறிப்பு: 20.05.1956 அன்று நடந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.யின் திருமண‌‌ விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

You might also like