நூல் அறிமுகம்:
“ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே.”
– அலெக்சாந்தர் ரஸ்கின்.
“When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.
தனது தந்தையின் பால்ய நினைவுகளைக் கேட்பதில் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் பள்ளி நினைவுகளை விவரிக்க துவங்கினால் இப்படி எல்லாம் நடந்ததா என்று வியப்படைவார்கள்.
இந்த நூலில் ரஸ்கின் தனது சிறுவயது நினைவுகளைச் சுவைபட விவரித்திருக்கிறார்.
இந்த கதைகள் யாவும் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளே. அதை சுவாரஸ்யமாக சொல்லிய விதம் பாராட்டிற்குரியது.
தனது அழகான வண்ணப்பந்து ஒன்றை அது மோதி வெடிக்கிறதா இல்லையா என பரிசோதிக்க ஒடும் காருக்குள் உருட்டிவிட்டுப் பார்க்கிறான் சிறுவன். முடிவில் பந்து வெடித்துவிடுகிறது என ரஸ்கினின் வேடிக்கையான அனுபவத்துடன் இந்த நூல் துவங்குகிறது. ஒவ்வொரு அனுபவமும் இரண்டோ மூன்றோ பக்கங்கள். அதற்குள் மறக்க முடியாத நிகழ்வுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெர்மன் படிக்க முயன்று தோற்றுப்போனது, பள்ளிக்குத் தாமதமாகப் போனது, வீட்டில் சினிமா பார்க்கக் கூடாது என்று தடுத்தபோது செய்த குறும்பு. ஒவியம் வரைய ஆசைப்பட்டது, காய்ச்சல் வந்து மருத்துவரைப் பார்க்க போய் பயத்தில் அவரைக் கடித்து வைத்தது என சுவாரஸ்யமான நினைவுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தக் கதைகளைப் பெற்றோர்கள் வாசித்து பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் வெறும் கதையைச் சொல்லாமல் ரஸ்கின் போலத் தனது பள்ளிவயது அனுபவங்களை இணைத்துச் சொல்ல வேண்டும். அது வாசிப்பை மேம்படுத்துவதுடன் அப்பா, அம்மாவைப் புரிந்து கொள்ளச் செய்யும்
இந்தக் கதையில் ரஸ்கின் சித்தரிக்கும் வாழ்க்கை இன்றில்லை. ஆனால் அந்த குறும்புத்தனங்கள், ஆசைகள், ஏமாற்றம், சந்தோஷம் அப்படியே சிறார்களிடம் இன்றுமிருக்கிறது. அது தான் இந்தக் கதையை நெருக்கமாக்குகிறது.”
– எஸ்.ராமகிருஷ்ணன்
*****
நூல்: When Daddy was a little boy (வென் டாடி வாஸ் எ லிட்டில் பாய்)
ஆசிரியர்: Alexander Raskin (அலெக்சாந்தர் ரஸ்கின்)
இன்சைட் பப்ளிகேஷன்
விலை: ரூ.193/-
#எஸ்ராமகிருஷ்ணன் #எஸ்ரா #WhenDaddywasalittleboy #sra #sramakrishnan #AlexanderRaskin #ரஸ்கின் #அலெக்சாந்தர்ரஸ்கின்