டாஸ்மாக் விற்பனை – இப்படியொரு போட்டியா?

அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த சோதனை நடந்து முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. 

ஏன் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து இந்த சோதனையை நடத்தியது. அந்த சோதனைக்குப் பிறகு குறிப்பிட்ட சில தவறுகளையும் ஏன் கசியவிட்டது?

தகுந்த ஆவணங்கள் சிக்கியிருந்தால், அதற்கேற்ற உரிய நடவடிக்கையை இதுவரை ஏன் அமலாக்கத்துறை மேற்கொள்ளவில்லை?

இப்படியெல்லாம் டாஸ்மாக் மீது அடுத்தடுத்த புகார்கள் வந்தாலும், மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாக வைத்து, விற்கிறார்கள் என்பதை பல சமூகவலைதளங்களில் வெளிவந்த நேரடிக் காட்சிகள் உறுதிப்படுத்தின.

அப்போது தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வரும் இன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக்கின் விற்பனை குறித்துப் பேசி ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார். 

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி மதுபாட்டில்கள் விற்பனையாவதாகவும், அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பதினைந்துகோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் மாதத்திற்கு 5000 கோடி ரூபாய்க்கு மேல் இதன்மூலம் மட்டுமே வருமானம் வருவதாகவும் வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

அதற்கு பதிலளித்த அத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, “இப்போது மட்டுமல்ல, அதிமுக ஆட்சியிலும் ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது என்று சட்டமன்றத்திலேயே அவரும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 

ஏற்கனவே, அதிமுக ஆட்சியிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் என்பதால், அப்போது நடந்தவைப் பற்றியும், தற்போது நடந்துவருவதுப் பற்றியும் தெள்ளத் தெளிவாகவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரியும் என்பதால், சட்ட சபையிலும் வெளிப்படைத் தன்மையோடு பதிவு செய்திருக்கிறார். 

ஆக, அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் தொடர்ந்து குடிமகன்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்தப் பேச்சுக்களே நேரடி சாட்சியத்தைப் போல் இருக்கின்றன.

இதுதவிர, டாஸ்மாக்கில் போலியான சரக்கு விற்பனை செய்வதன் மூலமும் நேரப் பாகுபாடு இல்லாமல் எந்நேரமும் விற்பனை செய்வதன் மூலமும் கூடுதலான வருமானம் கிடைக்கிறது என்கின்ற குற்றச்சாட்டெல்லாம் இருக்கின்றன.

அதெல்லாம், தனி.

இதுவரை, அரசின் கணக்குப்படி டாஸ்மாக் மூலம் ஓர் ஆண்டுக்குக் கிடைத்த வருமானம் 45 ஆயிரம் கோடியாக இருந்தது.

தற்போது, நடப்பாண்டில் டாஸ்மாக் விற்பனை மேலும் 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து, ஆண்டுக்கு 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெருகி இருக்கிறது. 

அதாவது கூடுதல் விற்பனை நேரம் காலம் பார்க்காமல் விற்பனை என்கின்ற (எக்ஸ்ட்ரா) வருமானங்களெல்லாம் சேர்க்கப்படாத நிலையில் தான் 48 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அப்படி என்றால், இன்னும் எக்ஸ்ட்ரா வருமானங்களையெல்லாம் சேர்த்தால், எவ்வளவு ஆயிரம் கோடி அளவுக்கு வருமானத்தைத் தந்து கொண்டிருக்கிறது இந்த மதுபான விற்பனை?

இவ்வளவு ஆயிரம் கோடிகள் அரசுக்கும், எத்தனையோ முக்கிய புள்ளிகளுக்கும் வருமானம் வருவதற்கு ஆதாரமாக உள்ள குடிமகன்கள் எப்படி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள். 

மதுபானக் கடைகளை ஒட்டி நடத்தப்படும் பார்கள் எவ்வளவு தூரத்திற்கு சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் விளங்குகின்றன என்பதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா? 

வெவ்வேறு வயது சார்ந்தவர்களுக்கு மதுவை விநியோகிக்கக் கூடாது என்கின்ற கட்டுப்பாடெல்லாம் இங்கு முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

ரெகுலராக அதிகளவு மதுவைக் குடிப்பதால், ஈரல் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உடலின் பல உறுப்புகள் செயலிழந்துபோய் இளம் வயதிலேயே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எல்லாம் இங்கு வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறதா?

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இளைய தலைமுறை துவங்கி தட்டுத்தடுமாறும் முதியவர்கள் பெண்கள் வரை பாரபட்சம் இல்லாமல், மதுபானப் பழக்கத்திற்கு அடிமையாகி அரசுக்கும் மதுபானத்தை நம்பியிருக்கும் மதுபான ஆலை உரிமையாளருக்கும் எவ்வளவு வருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றியெல்லாம் பேசுகிறவர்கள் மதுபான விற்பனை பற்றியெல்லாம் புள்ளிவிவரத்தோடு பேசுகிறவர்கள் ஒரு தலைமுறையையே எப்படி சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி வெளிப்படையாக பேசத் தயாராக இருப்பார்களா?

“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்”களை மக்களும் சரிவர அடையாளம் கண்டுகொள்வார்களா?

– யூகி

You might also like