பீங்கான் கழிவுகளைக் கலையாக மாற்றிய டிசைனர்!

சஷாங்க் நிம்கார் என்ற நேஷனல் இன்ஸ்டிட்யூட் டிசைன் பட்டதாரி தொடங்கிய எர்த் டாட்வா என்ற நிறுவனம் பீங்கான் கழிவுகளைக் கலைப்பொருளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்தது.

மறுசுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டைல்கள், மக்குகள், கட்டடக் கலைக்குத் தேவையான பார்டிசன் பொருள்களை உருவாக்கினார்கள்.

இன்று உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலே கழிவுகள்தான். அதிலும் செராமிக் கழிவுகள் அதிகரித்துவருகின்றன.

இது குப்பையாக மாறினால் பூமியில் பல ஆண்டுகளுக்கு அப்படியே தேங்கியிருக்கும். மக்கிப்போகாது. இதுதான் செராமிக் பொருட்களின் நீண்டநாள் பிரச்னையாக இருந்துவருகிறது.

குப்பையாகத் தேங்கும் செராமிக் கழிவுகளை என்ன செய்யலாம் என்று டிசைனர் நிம்காருக்கு யோசனை தோன்றியது. அதன் விளைவுதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற செராமிக் பொருட்கள்.

அவரது உள்ளுணர்வுதான் டிசைன், உருவாக்கம் மற்றும் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் எல்லாவற்றிலும் எதிரொலித்தது.

இந்த 32 வயது இளைஞருக்கு செராமிக் கழிவுகளை மாற்றும் எண்ணம் ஒரே நாளில் உருவானதல்ல. அவர் முதலில் படித்தது அனிமேஷன் பிலிம் டிசைன். புனேயில் பல ஆண்டுகள் விளம்பரத் துறையில் பணியாற்றி வந்தார்.

என்ஐடி அகமதாபாத்தில் முதுகலை படிக்கும்போதுதான் இந்த எண்ணம் அவருக்கு உதித்தது. அங்கே நிம்கார், செராமிக் மற்றும் கிளாஸ் டிசைனை சிறப்புப் பாடங்களாக எடுத்திருந்தார். அதுதான் அவருக்கான திருப்புமுனை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குர்ஜா என்ற ஊரில் உள்ள செராமிக் ஆலைக்குச் சென்றது அவருக்குள் புதிய பாதையை காட்டியது.

“எங்கே பார்த்தாலும் செராமிக் கழிவுகள் நிரம்பியிருந்தன. இதுதொடர்பாக பல தொழில் அதிபர்களிடம் பேசினேன். அவை மக்காது. பூமியில் அப்படியே இருக்கும் என்றார்கள்” என்கிறார் நிம்கார்.

நாம் ஏன் இங்கே டிசைனராக மட்டும் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

“ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்ணங்களில் புதிய வடிவங்களில் செராமிக் உருவாகிக்கொண்டே இருந்தது. இது மேலும் சுமையை ஏற்றிக்கொண்டே இருந்தது.

ஏற்கெனவே உள்ள செராமிக் கழிவுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறார்.

இந்த நிலையில்தான் அவர் எர்த் டாட்வா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

தான் படித்த என்ஐடியின் உதவியுடன் புதிய திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கினார் நிம்கார். செராமிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அது வெற்றியைத் தந்தது.

ஜப்பானில் செய்துபார்த் பைலட் திட்டம் நிம்காருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுதான் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான முதல் அடியை அவருக்கு எடுத்துவைக்க உதவியாக இருந்தது.

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு அவருக்கு வெற்றி கிடைத்தது. கூடவே குஜராத் அரசின் 20 லட்சம் ரூபாய் உதவியும் கிடைத்தது.

முதல் கட்டமாக குஜராத்தில் மார்பி, தங்காத் ஆகிய ஊர்களில் உள்ள ஆலைகளின் செராமிக் கழிவுகளை பவுடராக மாற்றினார்.

அதில் அவர்கள் உருவாக்கிய களிமண் இணைப்பானைச் சேர்த்தார்கள். இந்தக் கலவைதான் புதிய பொருட்களை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.

இதற்கு டாட்வா மிக்ஸ் என்று பெயர் வைத்தார்கள். அந்த கலவை பல கலைஞர்களுக்கு கலைப்பொருட்களை உருவாக்குவதற்கான கச்சாப் பொருளாக பயன்பட ஆரம்பித்தது.

“எர்த் டாட்வா மூலம் இனி வரும் காலங்களில் கழிவுகள் என்பவை குப்பைகள் அல்ல. கலைப் பொருட்களை உருவாக்கப் பயன்படும் கச்சாப்பொருட்கள் என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் நிம்கார்.

– தான்யா

You might also like