ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக அமைந்த பாடல்!

1991-ல் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் ‘குயில் பாட்டு வந்ததென்ன இளமானே’ மூலம் ஸ்வர்ணலதாவை கிராமத்து இசை ரசிகர்களிடமும் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததும் இளையராஜாதான்.

ராஜாவின் இசைக் குறிப்புகளே பாடலுக்கான காட்சிகளை விவரித்து நம் மனக்கண்ணில் பந்தி வைக்கும் விதமாக இருக்கும். இப்பாடலைக் காட்சி வடிவிலும் மண் மணக்க மறக்க இயலாச் சித்திரமாக்கிக் கொடுத்திருப்பார் இயக்குனர் கஸ்தூரி ராஜா.

மெட்டு, வரிகள், படத்தின் சூழல் என எல்லாமுமே மனதை உருக்கும் விதத்தில் அமைந்த இப்பாடலை சந்தோஷமும் மெல்லிய சோகமும் கலந்ததொரு பாவத்தில், நாயகி மீனாவின் கதாபாத்திரத்தின் தன்மையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் பாங்கில் பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலும், தெம்மாங்குத் தனத்துடன் ஒலிக்கும் வயலின் ஓசையும், குயில் கூவுகிற மாதிரி இடையிடையே சிணுங்கும் அந்தப் புல்லாங்குழலின் ஓசையும் காலம் கடந்து இப்போது கேட்கையில், நாஸ்டால்ஜியாவைக் கிளறிவிட்டு, கண்ணீரைச் சுரக்க வைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன.

மருண்ட மானின் மிரட்சியைக் கண்ணில் தேக்கி இப்பாடலில் வளைய வரும் பதின்ம வயது மீனாதான் எத்துனை அழகு!.

’அத்தை மகன் கொண்டாட
பித்து மனம் திண்டாட
அன்பை இனி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ’

என்கிற வரியில் ‘ஓஹோ’ என்ற சொல்லில் ஒலிக்கும் அந்தக் குரலின் குணம் இப்பாடலுக்குக் கொடுக்கும் வண்ணத்தைப் போல இன்னொரு பாடகியால் கொடுத்திருக்கவே இயலாது என்று துணிந்து சொல்லலாம்.

‘மன்னவனும் போகும் பாதையில்’ என்று தணிந்து செல்கிற தாளத்தில் கமலையை மெல்ல கிணற்றுக்குள் இறக்குவது போல குரலை கீழ்ஸ்தாயியில் அத்தனை மென்மையாக்கி இறங்கி இழையும் ஸ்வர்ணலதாவின் குரல், ‘வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்’ என்கிறபோது நீரள்ளிய கமலையை எட்டு வைத்து வேகமெடுத்து இழுக்கும் காளைகளைப் போல ஒவ்வொரு சொல்லிலும் வேகத்தைக் கூட்டி தாளத்தில் உட்கார வைக்கும் அழகை எவ்வளவு சிலாகித்தாலும் தகும்.

“மௌனம் போன‌தென்று புது கீத‌ம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாச‌ல் தேடுதே
கீத‌ம் பாடுதே வாச‌ல் தேடுதே”

மகிழ்ச்சித் ததும்பப் பாடிக்கொண்டே வந்து சட்டென ஏக்கம் தொனிக்க முடிக்கிற இந்த வரிகளில் ஆனந்தமும் அழுகையும் தொட்டுக் கொள்ளும் தருணத்தைக் குரலில் தேக்கி, ஸ்வர்ணலதா பாடுவதைக் கேட்கையில் வாழும் ஆசையோடு வாசல் தேடிய அந்த இளமானுக்கு நேர்ந்த சோகமும் நினைவில் வருவதில் உணர்ச்சி மேலிடக் கண்ணீர்ப் பெருக்கெடுத்துவிடும்.

சூழலை உள்வாங்கி ஒரு மெட்டினை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இப்பாடலை உதாரணமாகச் சொல்லலாம். பின்னாளில் வேறு பல பாடல்களின் மூலம் எத்தனையோ அங்கீகாரங்களை அவர் பெற்றிருந்தாலும், ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக ஒரு பாடலை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தக் குயில் பாட்டுதான் சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பது என் எண்ணம்.

– நாடோடி இலக்கியன் எழுதிய தனியொருத்தி நூலிலிருந்து.

  • நன்றி: பாரி முகநூல் பதிவு
You might also like